ஆதார் மோசடி; ஏர்டெல்-க்கு ரூ.5 கோடி அபராதம்
Posted Date : 08:44 (09/03/2018) A+       A-

ஆதார் மோசடி; ஏர்டெல்-க்கு ரூ.5 கோடி அபராதம்

Mar 09


கடந்த ஆண்டு இறுதியில், பல லட்சம் வாடிக்கையாளர்களின் வங்கி கணக்கிற்கு வந்து சேர வேண்டிய மானிய பணத்தை,  அவர்கள் அனுமதியில்லாமல் தனது ஏர்டெல் பேமெண்ட்ஸ் பேங்க் கணக்கிற்கு மாற்றிய விவகாரத்தில் ஏர்டெல் நிறுவனத்தின் மீது ரிசர்வ் வங்கி 5 கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளது.

மொபைல் எண்களை ஆதார் எண்ணுடன் இணைக்க மத்திய அரசு உத்தரவிட்டதை தொடர்ந்து கோடிக்கணக்கான மொபைல் பயனாளர்கள் ஆதார் எண்ணுடன் மொபைல் எண்ணை இணைத்தனர். பேடிஎம், போல ஏர்டெல் நிறுவனமும் பேமெண்ட்ஸ் பேங்க் என்ற மொபைல் பேங்க் சேவையை நடத்தி வந்தது. இந்நிலையில், வாடிக்கையாளர்களின் அனுமதி இல்லாமல், அவர்களின் மொபைல் எண்களுடன் தனது பேமெண்ட்ஸ் வங்கி கணக்கை இணைத்து, அவர்களுக்கு அரசு வழங்கி வந்த எல்.பி.ஜி மானியத்தை தான் நடத்தி வரும் பேமெண்ட்ஸ் வங்கி கணக்கிற்கு ஏர்டெல் மாற்றியுள்ளது.

தங்களது வங்கி கணக்கிற்கு மானிய பணம் வராததை கண்டுபிடித்த பலர் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் அது ஏர்டெல் பேமெண்ட்ஸ் வங்கி கணக்கிற்கு சென்றது தெரிந்தவுடன் நூற்றுக்கணக்கான மக்கள், தங்களது அனுமதியில்லாமல் ஏர்டெல் இவ்வாறு செய்துள்ளதாக புகார் அளித்தனர்.  மொத்தம் 23 லட்சம் பேரின் வங்கிகளுக்கு செல்ல வேண்டிய 47 கோடி ரூபாய் இவ்வாறு மாறியதாக தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து, அந்த பணத்தை அவரவர் வங்கி கணக்குகளுக்கு மாற்ற ஏர்டெல்லுக்கு உத்தரவிடப்பட்டது. 

ஆதார் எண் மூலம் வாடிக்கையாளர்களை சரிபார்த்துக் கொள்ளும் KYC சேவையை தவறாக பயன்படுத்திய ஏர்டெல் நிறுவனத்தின் மீது இந்த விவகாரத்தில் ரிசர்வ் வங்கி 5 கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளது.