சினிமா டைட்டிலாக மாறிய கவுண்டமணி டயலாக்!
Author: Bala Bharathi | Posted Date : 02:04 (18/03/2018) A+       A-

சினிமா டைட்டிலாக மாறிய கவுண்டமணி டயலாக்!

Mar 18

'காமெடி கிங்’ கவுண்டமணியின் பிரபலமான வசனமொன்று, சினிமா டைட்டிலாக மாறியுள்ளது.

சரத்குமார், கவுண்ட மணி நடிப்பில் வெளியான சூரியன் படத்தை யாராலும் மறக்க முடியாது. படத்தில், கவுண்ட மணி பேசும் ஒவ்வொரு டயலாக்கும் இன்றைக்கு மீம்ஸ் கிரியேட்டர்களால் சோஷியல் மீடியாவில் அனல் பறக்க பயன்படுத்தப்படுகிறது. அதிலும் குறிப்பாக, சூரியன் படத்தில் அவர் பேசிய அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா டயலாக் ஏதாவது ஒரு வகையில் தினமும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது அந்த டயலாக்கை ஒரு படத்தின் தலைப்பாகவே வைத்துள்ளனர்.


தமிழ் சினிமா விநியோகத்தில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ள ஆரா சினிமாஸ் நிறுவனம், முதல் முறையாக படத் தயாரிப்பில் இறங்கி, 'அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா' என்ற படத்தை தயாரித்துள்ளனர். 

இந்தப் படத்தில் 'ராஜதந்திரம்' புகழ் வீரா ஹீரோவாக நடித்துள்ளார். 'குக்கூ' படைத்தில் கண்பார்வை இழந்த பெண்ணாக வந்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்த நடிகை மாளவிகா நாயர் இந்தப் படத்தில் நாயகியாக நடித்திருக்கிறார். 


மேலும் பசுபதி, ரோபோ ஷங்கர், 'மொட்ட' ராஜேந்திரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்தப்படத்துக்கு மாட்லி ப்ளூஸ் இசையமைக்க, சுதர்ஷன் ஒளிப்பதிவு செய்ய, அறிமுக இயக்குநர் அவினாஷ் ஹரிஹரன் இயக்கியுள்ளார்.  

இது, தற்போதுள்ள அரசியல் சூழலை நையாண்டித்தனமாக சொல்லும் கலகலப்பான காமெடிப் படம் என்பதால், கவுண்டமணியின் பிரபலமான காமெடி வசனமான, 'அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா' என்கிற வசனத்தையே படத்துக்கு தலைப்பாக வைத்திருக்கிறார்களாம். இந்த படத்தின் படப்பிடிப்பு நேற்று சென்னையில்  நிறைவு பெற்றுள்ளது. விரைவில் படத்தின் ஆடியோ ரிலீஸ் பற்றிய அறிவிப்பை வெளியிட்ட உள்ளனர்.