திரை விமர்சனம்: சைலன்ட் த்ரில்லர் மெர்க்குரி எப்படி இருக்கிறது?
Author: Disha | Posted Date : 12:33 (20/04/2018) A+       A-

திரை விமர்சனம்: சைலன்ட் த்ரில்லர் மெர்க்குரி எப்படி இருக்கிறது?

Apr 20


மெர்க்குரி (பாதரசம்) கழிவினால் பாதிக்கப்பட்ட ஐந்து நண்பர்கள். அவர்களால் மெளனத்தை மட்டுமே உணர முடியும். இவர்கள் ஐந்து பேருக்கும் ஓசையால் பார்க்க முடிந்த ஒருவனுக்கும் இடையே நடக்கும் தவறான போர் தான் மெர்க்குரி. இயக்கம் கார்த்திக் சுப்பராஜ். 

“Silence is the most powerful scream” – மௌனமே வலிமையான அலறல்  என்ற டேக் லைனில் வரும் இந்த சைலன்ட் த்ரில்லர் படத்தை கார்ப்பரேட் கிரைமாக உருவாக்கியிருக்கிறார். 

வாய் பேசாத, காது கேளாத கதாப்பாத்திரங்களால் படத்தின் மெளனத் தன்மை உருவாக்கப்பட்டுள்ளது. மெளன மொழியில் கொண்டாட்டமாகத் தொடங்கும் பயணம், எதிர்பாராமல் நடக்கும் விபத்து, அதனால் உண்டாகும் திகில் திருப்பம், இறுதியில் மெளனம் என்ன செய்கிறது என்பது தான் மெர்க்குரியின் கதை. 


கதாப்பாத்திரங்களை மெளனமாக்கி, காடு, மலை, இரவு, பாழடைந்த தொழிற்சாலை ஆகியவற்றை பேச விட்டிருக்கிறார் இயக்குநர். 

வசனங்கள் இல்லாமல் பார்வையாளர்களைக் கதைக்குள் கொண்டுவந்ததற்கு ஒரு அசாத்திய நடிப்புத் திறன் வேண்டும். எல்லோருமே அதில் வெற்றி பெற்றுவிட முடியாது. இதில் பிரபு தேவாவைத் தவிர முக்கியக் கதாப்பாத்திரங்களான மற்ற ஐவருமே அனுபவமில்லாதவர்கள். அவர்களிடம் வேலை வாங்க கார்த்திக் சுப்பராஜ் அதிக வேலை செய்திருக்கிறார். 

பிரபு தேவா சில இடங்களில் பார்வையிலேயே மிரட்டுகிறார். இந்துஜாவின் நடிப்பும் நிச்சயம் பேசப்பட வேண்டிய ஒன்று. படத்தின் வசனகர்த்தா இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன்தான். இசை வேறு, ஓசை வேறு என்றிருக்கும் பரிணாமத்தில் ஓசையை இசையாக்கி கதையின் நகர்வுக்குப் பின்புலமாக இருக்கிறார்.


ஒளிப்பதிவாளர் திருவின் அனுபவம் வாய்ந்த ஒளிப்பதிவு படத்துக்கு மிகப் பெரிய பலம். சவுண்ட் டிசைன், கலை எனப் படத்தின் அனைத்துத் துறைகளில் பணிபுரிந்திருக்கும் கலைஞர்களும் முழு ஈடுபாட்டைக் கொடுத்திருக்கிறார்கள்.

தமிழ் சினிமாவில் கமர்ஷியலாக வருடம் முழுவதுமே படம் வரும், கருத்தாழமிக்கப் படங்கள் எப்போதாவது தான் வரும், அதனால் ஒரு வித்தியாசமான அனுபத்தைப் பெற நிச்சயம் மெர்க்குரிக்குப் போகலாம்! 

நியூஸ்டிஎம்-ல் வேற என்ன படிக்கலாம்...

தமிழ் டப்பிங்கில் மெகா வெற்றி 

பெற்ற ஹாலிவுட் படங்கள்!

தமிழில் வெற்றி வாகை சூடிய

'காப்பி' படங்கள் - பகுதி 1