Home GuruPeyarchi
Aug
22

குருப் பெயர்ச்சி பலன்கள் 2017 - 18 - பலம் தரும் குரு பார்வை!
கணித்தவர் : பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர் MCA., MBA., MAA+       A-

குருப் பெயர்ச்சி பலன்கள் 2017 - 18 - பலம் தரும் குரு பார்வை!

கணித்தவர் : பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர் MCA., MBA., MA

நவக்கிரகங்களில் முழு சுப கிரகம் வாழ்வில் அனைத்து விதமான செல்வங்களையும் அளிப்பவர் - சப்த ரிஷிகளில் ஆங்கிரஸ முனிவரின் மகன் குரு என்றும் பிரகஸ்பதி என்றும் வியாழ பகவான் அழைக்கப்படுகிறார்.

இவர் தேவர்களுக்கு எல்லாம் குரு. நம் வாழ்வில் 2 விஷயங்கள் மிக முக்கியம். அதாவது தனம் என்று சொல்லக்கூடிய பணம், 2-வது புத்திர சம்பத்து என்று சொல்லக்கூடிய குழந்தை செல்வம். இந்த இரண்டையும் அளிக்க கூடிய சர்வ வல்லமை பெற்ற கிரகம் குரு. குருவுக்கு மேலும் பல்வேறு விதமான ஆதிக்கங்கள் உள்ளன. ஞானம், கூர்ந்த மதிநுட்பம், மந்திரி யோகம், நிதித்துறை, நீதித்துறை, வங்கி, கல்வி, வேத உபதேசம் போன்றவை எல்லாம் குருவின் அதிகாரத்துக்கு உட்பட்டவை. அவரது அருள் இருந்தால் இந்த துறைகளில் பிரகாசிக்கலாம்.

குரு பார்வை அல்லது வியாழ அனுகூலம்: நம் வாழ்வில் சுபநிகழ்ச்சிகள் உதாரணமாக திருமணம் அனைவரின் வாழ்க்கையிலும் முக்கியமானது. திருமணத்துக்கு மிக முக்கிய கிரகமாக குரு பகவான் திகழ்கிறார். குரு பார்வை என்று சொல்லப்படும் வியாழ அனுகூலம் திருமணத்துக்கு முக்கியமாக தேவைப்படுகிறது. வியாழ நோக்கம் வந்து விட்டதா என்று பார்த்த பிறகே திருமண விஷயங்களை ஆரம்பிக்க முடியும்.

குரு எந்த ஸ்தானத்தை பார்க்கிறாரோ அந்த ஸ்தானம் பலமும், விருத்தியும் அடைகிறது. குரு பார்வை சர்வ தோஷ நிவர்த்தி. குருவுக்கு 5,7,9 ஆகிய பார்வைகள் உள்ளன. அதாவது குரு இருக்கும் இடத்தில் இருந்து 5,7,9 ஆகிய இடங்களை பார்வையிடுகிறார். ஐந்தாம் பார்வையும், ஒன்பதாம் பார்வையும் சிறப்பு பார்வைகளாகும்.

நிகழும் மங்களகரமான கலியுகாதி 5118 - சாலிவாகன சகாப்தம் 1939 - பசலி 1427 - கொல்லம் 1189ம் ஆண்டு ஸ்வஸ்தி்ஸ்ரீதுன்முகி வருஷம் தக்ஷிணாயனம் வருஷ ரிது ஆவணி மாதம் 17ம் நாள் இதற்குச் சரியான ஆங்கில தேதி 02.09.2017 சுக்ல ஏகாதசியும் சனிக்கிழமையும் பூராட நக்ஷத்ரமும் சௌபாக்கியம் நாமயோகமும் பத்ரை கரணமும் சித்தயோகமும் கூடிய சுபயோக சுபதினத்தில் உதயாதி நாழிகை 08.20க்கு - காலை 9.21க்கு குரு பகவான் கன்னி ராசியிலிருந்து துலா ராசிக்கு மாறுகிறார். துலா ராசிக்கு வரும் குரு பகவான் தொடர்ந்து 1 வருட காலத்திற்கு இந்த ராசியில் சஞ்சாரம் செய்து அருளாசி வழங்குவார். துலா ராசிக்கு வரும் குரு பகவான் விருச்சிக ராசிக்கு விளம்பி வருடம் புரட்டாசி மாதம் 18ம் தேதி - 04.09.2018 - வியாழக்கிழமையன்று மாறுகிறார். துலா ராசியில் இருந்து தனது ஐந்தாம் பார்வையால் கும்ப ராசியையும் - ஏழாம் பார்வையால் மேஷ ராசியையும் - ஒன்பதாம் பார்வையால் மிதுன ராசியையும் பார்க்கிறார். குரு பகவானுக்கு ஸ்தான பலத்தை விட த்ருக் பலமே அதிகம். அதாவது இருக்கும் இடத்தின் பலத்தினை விட பார்க்கும் பலமே அதிகம். எனமே குருவின் பார்வை பெறும் ராசிகள் பூரண பலன்கள் பெறும்.
நன்மை பெறும் ராசிகள்: மேஷம் - மிதுனம் - கும்பம் நன்மை தீமை இரண்டும் கலந்து பலன்கள் பெறும் ராசிகள்: கடகம் - கன்னி - துலாம் - தனுசு - மகரம் பரிகாரத்தின் மூலம் பயன்பெறும் ராசிகள்: ரிஷபம் - சிம்மம் - விருச்சிகம் - மீனம்
  • சொந்த வீடு - தனுசு, மீனம்
  • உச்சராசி - கடகம்
  • நீச்சராசி - மகரம்
  • திசை - வடக்கு
  • அதிதேவதை - பிரம்மா
  • நிறம் - மஞ்சள்
  • வாகனம் - யானை
  • தானியம் - கொண்டைக்கடலை
  • மலர் - வெண்முல்லை
  • வஸ்திரம் - மஞ்சள்நிற ஆடை
  • ரத்தினம் - புஷ்பராகம்
  • நிவேதனம் - கடலைப்பொடி சாதம்
  • உலோகம் - தங்கம்
  • இனம் - ஆண்
  • உறுப்பு - தசை
  • நட்புகிரகம் - சூரியன், சந்திரன், செவ்வாய்
  • பகைகிரகம் - புதன், சுக்கிரன்
  • மனைவி - தாரை
  • பிள்ளைகள் - பரத்வாஜர், கசன்
  • பிரதானதலங்கள் - ஆலங்குடி(திருவாரூர்), திருச்செந்தூர்
  • தகுதி -தேவகுரு
(40 நாட்களில் 16000 முறை சொல்ல வேண்டும்.)
ஓம் வ்ருஷபத்வஜாய வித்மஹே க்ருணீ ஹஸ்தாய தீமஹி தந்நோ குரு ப்ரசோதயாத்.
  • தேவனாம்ச ரிஷீணாம்ச குரும் காஞ்சன ஸந்நிபம்
  • பக்தி பூதம் த்ரிலோகேசம் தம் நமாமி ப்ருஹஸ்பதிம்.
  • விளக்கம்...
    குணமிகு வியாழக் குருபகவானே மணமுடன் வாழ மகிழ்வுடனருள்வாய்! பிருகஸ்பதி வியாழப் பரதகுரு நேசா கிரக தோஷமின்றிக் கடாஷித் தருள்வாய்!!
பக்தி, சிரத்தை, வழிபாடு, புனித சிந்தனை, யாத்திரை, நல்லொழுக்கத்தைக் கடைபிடித்தல் போன்ற விஷயங்கள் குரு பலத்தால் பெறக் கூடியதாகும்.

ஒருவர் பெரிய மத குருவாக இருக்கிறார் என்றால் அவருக்கு குரு நல்ல பலம் பெற்றிருக்கிறார் என்று பொருள்.

ஒழுக்கசீலராக இருப்பவர்களின் ஜாதகத்தில் குரு பலம் பெற்றிருப்பார். உலகத்தார் அனைவரும் ஒருவரை மதிக்கிறார்கள் என்றாலும் அவரின் ஜெனன கால ஜாதகத்தில் குரு பலம் நிறைந்திருக்கிறது என பொருள்.

அரிய சாதனைகளை செய்வதற்கு குரு பலமே பிரதானமாக இருக்கிறது. வேத சாஸ்திரம், விஞ்ஞானம் ஆகியவற்றில் புகழ் அடைவதற்கு மூலபலம் குருபலம்தான்.
பொதுவாக துலா ராசி என்பது வியாபாரம் சம்பந்தபட்ட ராசியாகும். இதன் அதிபதி அசுர குருவாகிய சுக்கிரன் ஆவார். அழகு - கவர்ச்சி - ஆடம்பரம் - பொருள் - பணம் - வசதி - வெண்மை ஆகிய விஷயங்களுக்கு சுக்கிரனே அதிபதியாவார். சுக்கிரன் அசுர குருவாக இருந்தாலும் தேவகுரு குருபகவானுடன் இணையும் போது நல்ல பலன்களை அள்ளித் தருவார்.

சுக்கிரன் வீட்டிற்கு மாறுவதால் பொருளாதார நிலைமை சீரடையும். அதிக அளவில் விரையங்கள் ஏற்பட்டாலும் மீண்டும் பொருளாதார நிலைமை எழுச்சியடையும். அரசாங்கம் புதுப்புது வரிகளை விதிக்கும். அதேபோன்று தனிநபர் மற்றும் அரசாங்கத்தின் பொருளாதார நிலைமை கொஞ்ச கொஞ்சமாக உயரும். விரலுக்கேற்ற வீக்கம் என்பது போல அவரவர் தகுதிக்கேற்ற மாதிரி கடன் உருவாகும். நல்ல மழையும் பசுமையும் உண்டாகும். விவசாயம் கால்நடை வளர்ச்சி பெறும். இதர துறைகளிலும் நாடு வளர்ச்சி பாதயை நோக்கி முன்னேறும். குருவிற்கு துலாம் நட்பு வீடு. நாட்டையும் வீட்டையும் பலவிதங்களில் தொல்லைப்படுத்தும் சமூக சீர்கேட்டாளார்கள் அழிக்கப்படுவர். உலக வங்கி மற்றும் வெளிநாடுகள் மூலம் மத்திய அரசு அதிகளவில் கடன்கள் வாங்குவது அதிகரிக்கும். செவ்வாய் சாரத்தில் மாறுவதால் ரியல் எஸ்டேட் துறையில் வளர்ச்சி ஏற்படும். மக்களிடம் தட்டுப்பாடு நீங்கி அதிக அளவில் பணப்புழக்கம் ஏற்படும். பொன் பொருள் விலை மிகவும் அதிகரிக்கும். அரசாங்கத்திற்கு எதிராக கடத்தல்கள் அதிகரிக்கும். அரசாங்கம் அவற்றை பரிமுதல்களும் செய்யலாம். எதிரிகள் தொல்லை, அண்டை நாடு, பகை நாடுகளால் ஏற்படும் அச்சுறுத்தல்களும் கட்டுப்படுத்தப்படும். வாகனங்கள் வாங்குவோரது எண்ணிக்கை உயரும். அதே நேரத்தில் வாகனங்களை ஓட்டிச் செல்பவர்கள் மிகவும் கவனமாக இருப்பது அவசியம்.