அதிகாரிகளை எச்சரித்த சித்தராமையா
Posted Date : 09:56 (13/03/2018) A+       A-

அதிகாரிகளை எச்சரித்த சித்தராமையா

Mar 13

ஐ.ஏ.எஸ் மற்றும் ஐ.பி.எஸ் தேர்ச்சி பெற்ற அதிகாரிகள் அதிகார வரம்புகளை மீறி செயல்படக்கூடாது என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா எச்சரிக்கை விடுத்துள்ளார். கர்நாடக மாநில லோக் ஆயுக்தா நீதிபதி விஸ்வநாத் ஷெட்டி கத்தியால் குத்தப்பட்டார். இதற்கு முன்பு மைசூரு கலெக்டராக இருந்த ஷிகா மீதும் தாக்குதல் நடந்தது. இது போல் தொடர்ந்து இந்திய ஆட்சி மற்றும் போலீஸ் பணி தேர்ச்சி பெற்று மாநிலத்தில் பணியாற்றும் ஐ.ஏ.எஸ் மற்றும் ஐ.பி.எஸ் அதிகாரிகள் மீது தாக்குதல் நடைபெறுவதை தடுக்கவேண்டும் என்று தலைமை செயலாளர் ரத்தினபிரபாவுக்கு ஐ.பி.எஸ் அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் ஆர்பி சர்மா கடிதம் எழுதியிருந்தார். 

ஆர்பி சர்மா ஐ.பி.எஸ் தலைமை செயலாளர் ரத்தின பிரபாவுக்கு எழுதிய கடிதம் ஊடகங்களில் வெளியானதால் முதல்வர் சித்தராமையா அதிர்ச்சி அடைந்தார்.  உடனடியாக தலைமை செயலாளர் ரத்தினபிரபா மற்றும் மாநில போலீஸ் டி.ஜி.பி நீலமணி ஆகியோரை தொலைபேசியில் தொடர்பு கொண்ட முதல்வர் சித்தராமையா, 

'ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள் தங்களின் பிரச்னை எதுவாக இருந்தாலும் அரசிடம் தெரிவிக்கவேண்டும். இது போல் பத்திரிகைகளில் பெயர் வரவேண்டும் என்பதற்காக கடிதம் எழுதக்கூடாது. அதிகார வரம்புகளை மீறும் அதிகாரிகள் யாராக இருந்தாலும் பரவாயில்லை, அத்தகைய நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும். தேர்தல் நேரங்களில் இது பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் உடனடியாக சம்பந்தப்பட்ட நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்.  அது போல் இந்திய ஆட்சிப்பணி மற்றும் போலீஸ் பணியிலுள்ள அதிகாரிகள், அரசியல்வாதி போன்று செயல்படக்கூடாது. விதிகளை மீறி செயல்படக்கூடாது. 

மக்களின் வரிப்பணத்தில் இருந்துதான் அதிகாரிகளுக்கு சம்பளம், கார் உள்ளிட்ட வசதிகள் செய்து கொடுக்கப்படுகிறது. எனவே, மக்களுக்கு முதலில் சேவை ஆற்றுவதில் அதிகாரிகள் அக்கறை காட்டிட வேண்டும்'. என அறிவுறுத்தியிருக்கிறார்.