யோகி ஆதித்யநாத்தின் கோரக்பூர் கலெக்டராக தமிழர் நியமனம்!
Author: PADMA PRIYA | Posted Date : 03:03 (18/03/2018) A+       A-

யோகி ஆதித்யநாத்தின் கோரக்பூர் கலெக்டராக தமிழர் நியமனம்!

Mar 18


உத்தரப் பிரதேசத்தில் 36 ஐ.ஏ.எஸ், 43 ஐ.பி.எஸ் அதிகாரிகளை மாற்றம் செய்த முதல்வர் யோகி ஆதித்யநாத் தனது சொந்த மாவட்டமான கோரக்பூரின் கலெக்டராக தமிழர் ஒருவரை நியமித்துள்ளார். 

உத்தரப் பிரதேசத்தில் தனி மெஜாரிட்டியுடன் பாஜக ஆட்சி நடத்தி வருகிறது. முதல்வராக யோகி ஆதித்யநாத்தும், துணை முதலமைச்சராக கேசவ் பிரசாத் மவுரியாவும் பதவி வகித்து வருகின்றனர். இவர்கள் இருவரும் வகித்து வந்த எம்.பி பதவியை ராஜினாமா செய்ததால், சமீபத்தில் கோரக்பூர், பூல்பூர் ஆகிய தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. அதில் சமாஜ்வாதி கட்சியிடம் பாஜக தோல்வியை தழுவியது.

இந்த சூழலில் 36 ஐஏஎஸ், 43 ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதில் தனது சொந்த மாவட்டமான, கோரக்பூருக்கு தமிழரான விஜயேந்திர பாண்டியனை ஆட்சியராக யோகி நியமித்துள்ளார்.

சிவகங்கையைச் சேர்ந்தவர் விஜயேந்திர பாண்டியன். வழக்கறிஞராக இருந்த இவர், பின் யுபிஎஸ்சி குடிமைப்பணியில் தேர்ச்சி பெற்று ஐஏஎஸ் அதிகாரி ஆனார். இவரை போல் உ.பி-யில் 14 தமிழர்கள் ஐஏஎஸ் அதிகாரியாகப் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் திறமைகளில் முழுநம்பிக்கை வைக்கும் உபி அரசியல் கட்சிகள் அவர்களில் பெரும்பாலனவர்களை முக்கிய பகுதிகளில் பணியமர்த்துவது வழக்கமாக உள்ளது.

உத்தரப் பிரதேசத்தின், எட்டவா மாவட்ட துணை ஆட்சியர், சண்டவுலியில் தலைமை வளர்ச்சி அதிகாரி, லலித்பூர், அம்பேத்கர் நகர், பலியா, கான்பூர் ஊரகம், மற்றும் பல்ராம்பூர் ஆகிய மாவட்டங்களின் ஆட்சியராகவும் பாண்டியன் பணியாற்றியுள்ளார். 

அதன் பிறகு, மாநில கூடுதல் தேர்தல் அதிகாரி, உ.பி போக்குவரத்து கழகத்தின் கூடுதல் நிர்வாக இயக்குநர் ஆகிய பதவிகளையும் வகித்திருக்கிறார். தற்போது கான்பூர் வளர்ச்சி ஆணையத்தின் துணை தலைவராக இருந்ததுவந்தார். இந்தநிலையில் பாண்டியனுக்கு கோரக்பூரில் கலெக்டராக பணியாற்றும் வாய்ப்பு கிடைத்துள்ளது.