தொடரும் கொடூரம்; ஹரியானாவில் 9 வயது சிறுமியின் உடல் கண்டெடுப்பு
Author: Newstm Desk | Posted Date : 01:15 (16/04/2018) A+       A-

தொடரும் கொடூரம்; ஹரியானாவில் 9 வயது சிறுமியின் உடல் கண்டெடுப்பு

Apr 16


ஹரியானாவில் காயங்களுடன் 9 வயது சிறுமியின் உடல் இன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.

வடமாநிலங்களில் சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்படும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. உன்னாவ் மற்றும் கத்துவா சம்பவங்கள் இந்தியா முழுவதுமே அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவங்களில் குற்றவாளிகளுக்கு நீதி கிடைக்க வேண்டும் என பல்வேறு போராட்டங்களும் நடந்து வருகின்றன. 

இந்த இரண்டு சம்பவங்களின் தொடர்ச்சியாக, மேலும் இரண்டு சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியுள்ளனர். கடந்த 14ம் தேதி குஜராத் சூரத் பகுதியில் 11 வயது சிறுமியின் உடல் கண்டெடுக்கப்பட்டது. தொடர்ந்து நடந்த சோதனையில் சிறுமியின் பிறப்புறுப்பு உள்பட 86 இடங்களில் காயம் இருப்பதாக தெரிய வந்துள்ளது.

இதுகுறித்து காவல்துறை விசாரணை நடைபெற்று வரும் வேளையில், இன்று காலை ஹரியானா மாநிலத்தில் ரோஹ்டாக் மாவட்டம்  டிட்டோலி என்ற கிராமத்தில் 9 வயது சிறுமியின் உடல் கிடைத்துள்ளது. அப்பகுதியில் உள்ள வாய்க்காலில் கிடந்த ஒரு பையில் கை, கால்கள் தெரிந்ததையடுத்து, அவ்வழியாக சென்றோர் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். காவல்துறை வந்து நடத்திய சோதனையில், வாய்க்காலில் பல காயங்களுடன் சிறுமியின் உடல் இருந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாகவும் காவல்துறை தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது.