ஆசிஃபா குடும்பத்தினருக்கு பாதுகாப்பு வழங்க உத்தரவு!
Author: Newstm Desk | Posted Date : 04:05 (16/04/2018) A+       A-

ஆசிஃபா குடும்பத்தினருக்கு பாதுகாப்பு வழங்க உத்தரவு!

Apr 16


சிறுமி ஆசிஃபாவின் குடும்பத்தினருக்கு ஜம்மு-காஷ்மீர் அரசு உரிய பாதுகாப்பை வழங்க வேண்டும் என காஷ்மீர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. 

காஷ்மீர் கத்துவா மாவட்டத்தில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட ஆசிஃபா வழக்கின் விசாரணை இன்று காலை காஷ்மீர் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்றது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட 8 பேரும் ஆஜர்படுத்தப்பட்டனர். விசாரணையில், தங்கள் மீது எந்த தவறும் இல்லை, உண்மை கண்டறியும் சோதனைக்கு தாங்கள் தயாராக இருப்பதாக குற்றவாளிகள்  தெரிவித்தனர்.

சிறுமி ஆசிஃபாவின் தரப்பில் இருந்தும் வாதிடப்பட்டது. தொடர்ந்து நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிக்கையை குற்றவாளிகள் 8 பேருக்கும் வழங்க நீதிபதிகள் உத்தரவிட்டனர். பின்னர் வழக்கு ஏப்ரல் 28ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. 

மேலும், இந்த வழக்கை காஷ்மீரில் இருந்து சண்டிகருக்கு மாற்றக்கோரி சிறுமி ஆசிஃபாவின் தந்தை உச்சநீதிமன்றத்தில் ஒரு மனு அளித்தார். அந்த வழக்கு பிற்பகலில் விசாரணைக்கு வந்தது. விசாரணையில், சிறுமி ஆசிஃபாவின் தந்தை, தங்கள் குடும்பத்தினர் மிரட்டப்படுவதாக குற்றம் சாட்டினார். ஆதாரங்கள் அழிக்கப்படவும், வழக்கு திசை திருப்பப்படவும் வாய்ப்புள்ளதால் காஷ்மீரில் இருந்து சண்டிகருக்கு மாற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்தார். 

பின்னர், விசாரணை முடிவில் நீதிபதி, "சிறுமி ஆசிஃபாவின் குடும்பத்தினருக்கும், சிறுமியின் வழக்கில் வாதிடும் வழக்கறிஞர் தீபிகாவிற்கும், ஜம்மு காஷ்மீர் அரசு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் எனக் கூறி வழக்கை ஏப்ரல் 27ம் தேதிக்கு ஒத்தி வைத்தார். மேலும், இந்த விவகாரத்தில் காஷ்மீர் அரசு பதிலளிக்க வேண்டும் என நோட்டீசும் அனுப்பப்பட்டுள்ளது.