கர்நாடக தேர்தலில் தொங்கு சட்டசபை அமையவே வாய்ப்பு: கருத்துக்கணிப்பில் தகவல்
Author: Newstm Desk | Posted Date : 04:42 (24/04/2018) A+       A-

கர்நாடக தேர்தலில் தொங்கு சட்டசபை அமையவே வாய்ப்பு: கருத்துக்கணிப்பில் தகவல்

Apr 24


மே மாதம் நடைபெறவுள்ள கர்நாடக சட்டசபை தேர்தலில் எந்த கட்சியுமே பெரும்பான்மை இடங்களை கைப்பற்றாது, பெரும்பாலும் தொங்கு சட்டசபையே அமைய வாய்ப்புள்ளது என கருத்துக்கணிப்பில் தெரிய வந்துள்ளது. 

கர்நாடக சட்டப்பேரவை தேர்தல் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. வருகிற மே 12ம் தேதி ஒரே கட்டமாக தேர்தலும், மே 15ம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெற உள்ளன. கடந்த ஏப்ரல் 16ம் தேதி முதல் நடைபெற்று வரும் வேட்புமனு தாக்கல் இன்றுடன் முடிவடைகிறது. இன்று கடைசிநாள் என்பதால் மனுதாக்கல் செய்வதற்கான பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. 

இதுவரை கர்நாடகாவில் 1,127 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். அவர்களில் பா.ஜ.க-178, காங்கிரஸ்-174, மதசார்பற்ற ஜனதா தளம்- 141, சுயேச்சை -451 ஆகும்.கர்நாடக மாநில முதல்வர் சித்தராமையா சாமுண்டேஷ்வரி, பாதாமி ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிடுகிறார்.

விறுவிறுப்பான இந்த தேர்தல் பணிகளுக்கு இடையே சில பத்திரிக்கைகள், ஊடகங்கள் கர்நாடக மாநிலத்தின் அடுத்த முதல்வர் யார்? என கருத்துக்கணிப்பு நடத்தியுள்ளன. அவற்றின் விபரங்களை பார்க்கலாம். 

கர்நாடக சட்டசபையில் உள்ள 224 தொகுதிகளில் பெரும்பான்மைக்கு 113 இடங்கள் தேவை. அதாவது 113 இடங்களை கைப்பற்றும் கட்சி வெற்றி பெற்று கர்நாடகாவில் ஆட்சி அமைக்கும். ஆனால் ஊடங்கங்கள் நடத்திய கருத்துக்கணிப்பில் பெரும்பாலாக கர்நாடகாவில் தொங்கு சட்டசபை தான் ஏற்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. 

முதலாவதாக ஏபிபி-சிஎஸ்டிஎஸ்(ABP-CSDS) ஊடகம் நடத்திய கருத்துக்கணிப்பில், பா.ஜ.க 89 முதல் 95 இடங்களிலும், காங்கிரஸ் கட்சி 85 முதல் 91 இடங்களிலும், மதச்சார்பற்ற ஜனதா தளம் 32 முதல் 38 இடங்களிலும் வெற்றி பெறும் என தெரிவிக்கப்படுகிறது. இதனால் 2013ம் ஆண்டு தேர்தலை ஒப்பிடுகையில் பா.ஜ.கவின் வாக்கு விகிதம் 35% ஆக அதிகரிக்கும், அதேபோல் காங்கிரஸ் கட்சியும் கடந்த தேர்தலை விட வாக்கு விகிதம் 37% ஆக அதிகரிக்கும் என கூறப்பட்டுள்ளது. 

இந்தியா டுடே நாளிதழ் நடத்திய கருத்துக்கணிப்பில், காங்கிரஸ் 90 முதல் 91 இடங்களிலும், பா.ஜ.க 76 முதல் 86 இடங்களில் வெற்றி பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதேபோன்று டைம்ஸ் நவ் - விஎம்ஆர் பத்திரிக்கை நடத்திய கருத்துக்கணிப்பில் காங்கிரஸ்-91, பா.ஜ.க-89 மற்றும் மதசார்பற்ற ஜனதா தளம்-40 இடங்களை கைப்பற்றும் என தகவல் வெளியிட்டுள்ளது. பத்திரிக்கைகள் நடத்திய இந்த கருத்துக்கணிப்பில் கர்நாடக தேர்தலில் எந்த ஒரு கட்சியும் பெரும்பான்மை இடங்களை கைப்பற்ற முடியாது, கர்நாடகாவில் தொங்கு சட்டசபை தான் ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளன.  


RELATED STORIES
MORE FROM National