தமிழினத் துரோகியா தொல்.திருமாவளவன்?
Author: anandan | Posted Date : 11:04 (07/12/2017) A+       A-

தமிழினத் துரோகியா தொல்.திருமாவளவன்?

Dec 07


திருமாவளவன் அவர்களே! உடனடியாக உங்கள் பெயரை மாற்றிக் கொள்ளவும். நேற்று (07/12/2017) ஸ்ரீரங்கப் பெருமாள் கோவிலையும், காஞ்சி அன்னை காமாட்சி கோவிலையும் இடித்து விட்டு பௌத்த விஹாரங்கள் கட்ட வேண்டும் என்று பேசிய  அந்தப் பேச்சிற்குப் பிறகு, “திருமாவளவன்” என்ற பெயரை வைத்துக் கொள்ள உங்களுக்கு எந்தத் தகுதியும் கிடையாது. காஞ்சி காமாட்சி கோவிலை இடித்து விட்டு பௌத்த கோவில் கட்டச் சொன்ன ஒரு நபரை தமிழனாக, தமிழக வரலாறு தெரிந்த எந்தவொரு தமிழனும் அங்கீகரிக்க மாட்டான்/கூடாது. 

காரணம், இதுவரை தமிழக வரலாற்றில் மிகமிக மோசமான காலமாக, தமிழனின் அடையாளங்கள் பெருமளவில் நசுக்கப்பட்ட காலமாக எல்லா வரலாற்று அறிஞர்களும் குறிப்பிடும் காலம் களப்பிரர்கள் காலம். இவர்கள் தமிழர்களின் வழிபாடு மற்றும் நம்பிக்கைகளுக்கு எதிராகவும், தமிழ் சொற்கள் மற்றும் எழுத்துகளில் கூட பெருமளவில் சிதைவினைக்  கொண்டு வந்தவர்கள் என்பதையும் எல்லா வரலாற்று ஆசிரியர்களும் ஒப்புக் கொள்கிறார்கள். இப்படியான களப்பிரர்கள் பின்பற்றிய மதம் தான் பௌத்தம் மற்றும் ஜைனம். இவர்கள் தான் தமிழகத்தினுள் பௌத்தம் நுழைய மூல காரணம். 

ஆக, திருமாவளவன், தமிழனின் அடையாளத்தைப் பெருமளவில் அழித்த களப்பிரர்களைப் போல மீண்டும் தமிழனின் அடையாளங்களை அழிக்க மக்களைத் தூண்டி விடும் உங்களை எப்படி தமிழனாக ஏற்றுக் கொள்வது? எது தமிழனின் அடையாளம் என்று யோசிக்கிறீர்களா?

“கச்சி வளைக்கைச்சி காமக்கோட்டங்காவல்

 மெச்சி யினிதிருக்கு மெய்ச்சாத்தன்  கைச்செண்டு

கம்பக் களிற்றுக் கரிகாற் பெரு வளத்தான்

செம்பொற் கிரிதரித்த செண்டு”

மேலேயிருக்கும் பாடலில் பொருட்சுருக்கம், கச்சி என்ற காஞ்சியிலிருக்கும் வளையல் அணிந்த காமாட்சியை, கரிகால் பெருவளத்தான் என்ற சோழன் வந்து வணங்கினான் என்பதாம். கரிகாலச் சோழனின் காலம் களப்பிரர்களின் காலத்திற்கு முற்பட்டது. களப்பிரர்களுக்கு முன்பேவா சித்தார்த்தர் வந்து இங்கே கோவில் கட்டி விட்டுச் சென்றார்? அதுவும் மஹாயானம் தோன்றுவதற்கு முன்பே?

கரிகால் பெருவளத்தான் பெயரான திருமாவளவன் என்ற பெயரை வைத்துக் கொண்டே அவன் வணங்கிய அன்னை காமாட்சியின் கோவிலை இடித்து, தமிழனின் அடையாளங்களை அழித்த களப்பிரர்களின் அடையாளத்தை மீண்டும் நிறுவத் தூண்டுகிறீர்களே…? நீங்கள் தமிழன்தானா? இல்லை தமிழன் பெயர் தாங்கிய சிங்களவனா? உங்களைத் தமிழினத் துரோகி என்று யாரேனும் அழைக்கும் முன், குறைந்தபட்சம் தமிழகத்தின் பெருமைமிகு கரிகாற் பெருவளத்தானின் இன்னொரு பெயரான திருமாவளவன் என்றப் பெயரை மாற்றிக் கொள்ளுங்கள். இல்லையெனில், பிற்காலத்தில் கரிகால் வளவன் ஒரு தமிழ்த்துரோகி என்று யாரேனும் தவறாகப் புரிந்து கொண்டாலும் கொள்வர்!

ஒருவேளை திருமாவளவன் அவர்களுக்கு நெருங்கிய நண்பரான சிங்களவர் ராஜபக்ஷே பௌத்தர் என்பதால், பௌத்த கோவிலைக் கட்டவேண்டும் என்று தூண்டுகிறாரா?

இதே நிலைப்பாட்டினையே நாளை ஈழமக்கள் வழிபடும் கோவில்களுக்கும் முன் வைத்து, ஈழத்தமிழர்கள் இனி பிரேமதாசா, சந்திரிகா, ராஜபக்ஷேக்களின் பௌத்த கோவிலை மட்டுமே வணங்க வேண்டும், கண்டி கதிர்காமர் கோவிலை உடனே இடிக்க வேண்டும் என்று முழங்கக் காத்திருக்கிறாரா?

அம்பேத்கர் புத்தம் தழுவிச் சென்றாரே? அவரது சிந்தனைகளைப் பின்பற்றும் திருமாவளவன் ஏன் இன்னும் புத்தத்திற்கு மாறாமல், இந்து என்ற மதத்தில் சுகமாக அமர்ந்திருக்கிறீர்கள்? விரும்பி மதம் மாற எந்தத் தடையும் இங்கே இல்லையே? இல்லை நான் இந்து மதத்தில் இருந்து கொண்டே மதத்தைத் திருத்த முனைகிறேன் என்றால், கூட குற்றங்களைக் களையலாமேயொழிய மக்களின் நம்பிக்கையான கோவில்களை இடிக்கத் தூண்டுவது எந்த வகையில் நியாயம்?

ஒன்று மட்டும் தெளிவாகப் புரிந்து கொள்ளுங்கள் திருமாவளவன் அவர்களே! பாபர் மசூதியை இடித்தது எவ்வளவு பெரிய குற்றம் என்று நினைக்கிறீர்களோ, அது சமூகத்தில் எத்தனை பெரிய கேட்டினை உருவாக்கும் என்று நினைக்கிறாரோ, அதற்கான தண்டனை என்ன கொடுக்க வேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்களோ அந்தத் தண்டனையை நீங்கள் பேசிய பேச்சிற்கும் நிச்சியம் கொடுக்க வேண்டும்.

தேசத்தின் அமைதிக்கும் ஒருமைப்பாட்டிற்கும் குந்தகம் விளைவிக்கும் வகையிலான திருமாவளவன் பேச்சிற்கு யாரேனும் வழக்கு தொடுத்தால், நிச்சயம் இந்திய அரசியலமைப்புச் சட்டம் மற்றும் குற்றவியற் சட்டப்படி தண்டனை உறுதி!