முதல் முறையாக முதல்வர்- ஸ்டாலின் நேருக்கு நேர் சந்திப்பு
Author: Muthumari | Posted Date : 12:29 (13/02/2018) A+       A-

முதல் முறையாக முதல்வர்- ஸ்டாலின் நேருக்கு நேர் சந்திப்பு

Feb 13


தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமை செயலகத்தில்  சந்தித்துள்ளார். 

தமிழகத்தில் பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க தலைமையில் போராட்டம், கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. ஆனால் தமிழக அரசு செவி சாய்க்காததால் பேருந்து கட்டண உயர்வு குறித்து ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்கும்படி, மத்திய முன்னாள் அமைச்சர் டி.ஆர்.பாலு தலைமையில் 5 பேர் கொண்ட குழுவை தி.மு.க அமைத்தது. அதன்படி, பேருந்து கட்டண உயர்வு குறித்த விளக்கமான அறிக்கையை நேற்று அக்குழுவினர் ஸ்டாலினிடம் சமர்ப்பித்தனர். 

இது தொடர்பாக ஸ்டாலின் இன்று தலைமை செயலகத்தில் முதல்வரை சந்தித்துள்ளார். இந்த சந்திப்பின்போது துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரும் உடன் இருந்துள்ளனர். 

தொடர்ந்து, போக்குவரத்து கழக சீர்திருத்தங்கள் குறித்த 27 பரிந்துரைகள் அடங்கிய அறிக்கையை அவர் முதல்வரிடம் சமர்ப்பித்து நடவடிக்கை எடுக்கும் படி கூறியுள்ளார். 

சந்திப்பிற்கு பின் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "போக்குவரத்து கட்டண உயர்வு குறித்த எங்களது குழு தயாரித்த அறிக்கை முதல்வரிடம் சமர்பிக்கப்பட்டுள்ளது. 'போக்குவரத்துத்துறையில் உள்ள நஷ்டத்தை அரசே ஏற்க வேண்டும். டீசல் மீதான கலால் வரியை நீக்கிவிட்டு 10% ஜிஎஸ்டி வரியை விதிக்க வேண்டும்' உள்ளிட்ட அம்சங்கள் அந்த அறிக்கையில் இடம்பெற்றுள்ளன. இந்த அறிக்கையை வைத்து தமிழக அரசு நடவடிக்கை எடுத்தால் போக்குவரத்து கழகத்தை சீர்படுத்த முடியும். இதுகுறித்து முதல்வர் நடவடிக்கை எடுப்பார் என நம்புகிறேன். அவ்வாறு எடுக்காத பட்சத்தில் மீண்டும் அனைத்துக்கட்சி கூட்டம் கூட்டப்பட்டு, அரசுக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும்" என தெரிவித்தார்.