ராகுல் இளம் வயதிலேயே பிரதமர் ஆவார்: நாஞ்சில் சம்பத் கணிப்பு
Author: Padmapriya | Posted Date : 02:53 (16/04/2018) A+       A-

ராகுல் இளம் வயதிலேயே பிரதமர் ஆவார்: நாஞ்சில் சம்பத் கணிப்பு

Apr 16

ராகுல் காந்தி தனது தந்தை ராஜீவ் காந்திபோல, இளம் வயதிலேயே பிரதமராவார் என நாஞ்சில் சம்பத் கணித்துள்ளார்.  

வாலாஜா சாலை சதுக்கத்தில் நடந்த இலக்கிய விழாவில் சிறப்பு விருந்தினராக நாஞ்சில் சம்பத் பங்கேற்றார். அதில், காந்தியத்தை புரிய வைத்த ராகுல் காந்தி என்ற தலைப்பில் அவர் பேசினார்.

அப்போது அவர், "தந்தையைக் கொன்றவர்களை மன்னித்து விட்டேன் என ராகுல் காந்தி கூறும்போது, அவர் மகாத்மா காந்தி நிலைக்கு உயர்ந்து விட்டார் என நான் கருதுகிறேன்.

ராஜீவ் காந்தி இளம் வயதில் இந்தியாவின் பிரதமராக உயர்ந்தார். அவர் போல ராகுல் காந்தியும் இந்தியாவின் பிரதமராகும் காலம் வெகு தொலைவில் இல்லை.

ராகுல் காந்தி காங்கிரஸ் கட்சியின் தலைமை பொறுப்பை ஏற்றதும் எனது தந்தை ராஜீவ் காந்தியை கொன்றவர்களை நான் மன்னித்து விட்டேன் என்று கூறியதை கேட்டு நான் அகம் மகிழ்ந்தேன்.

இதனால், 26 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் கிடக்கும் 7 பேர் விடுதலை ஆவார்கள் என நினைத்து மகிழ்ச்சியடைந்தேன். 

எனவே, அன்றே காந்திய வழியில் ராகுல்காந்தி என நான் எனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டேன். 

உலக நாடுகளில் 70 நாடுகள் மரணத் தண்டனையை ரத்து செய்து விட்ட நிலையில் நாம் மட்டும் அதையே தொடர்வதா? இங்கிலாந்து நாட்டின் சட்ட திட்டங்களை நம்நாடு பின்பற்றுகிறது. அங்கு மரணத் தண்டனை ஒழிக்கப்பட்டுவிட்டது. ஆனால் நாம் இன்னும் கைவிடாமல் இருக்கிறோம் எனபது வருந்தத்தக்கது. உலக நாடுகள் அனைத்தும் மரண தண்டனையை கைவிட வேண்டும்" என்று பேசினார்.