அர்ச்சனையால் அவமானப்பட்ட முதல்வர் பழனிசாமி!
Author: Shalini Chandra Sekar | Posted Date : 06:00 (24/04/2018) A+       A-

அர்ச்சனையால் அவமானப்பட்ட முதல்வர் பழனிசாமி!

Apr 24


ஒன்றரை மாதமாக எந்தத் தமிழ் படங்களும் வெளியாகவில்லை. அதனால் பெரும்பாலானோர் தியேட்டரை எட்டிப் பார்க்கவில்லை. ஒரு சில தீவிரமான சினிமா ரசிகர்கள் வேற்று மொழி படங்களைப் போய் பார்த்தார்கள். சரி ஒருவழியாக ஸ்ட்ரைக் முடிந்துவிட்டதே என இந்தவாரம் தியேட்டருக்குப் போனவர்கள் தியேட்டர் ஸ்கிரீனை கிழித்து, விட்டு ஓட்டம் எடுக்காத குறை தான். நமது கண்களையும் காதுகளையும் பதம் பார்த்து நமது பொறுமையை சோதிக்குமளவு அப்படியொரு பிரச்னை...  

'ரொம்ப நாள் கழிச்சு படம் ரிலீஸ் ஆகிருக்கு, என்ஜாய் பண்ணாம என்ன பிரச்னை' என குழப்பமாக கேட்கிறீர்களா? வேறு என்ன நம்முடைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் தற்புகழ்ச்சி விளம்பரம் தான்... வடிவேலு பாணியில் 'ஷ்ஷ்ஷ்ஷப்பா முடியல.. என் பொறுமைய ரொம்ப சோதிக்காதிங்கடா' என்ற வசனம் இங்கு கச்சிதமாகப் பொருந்தும். ஸ்ட்ரைக் நடந்த நாட்களில் சத்தமே இல்லாமல் எடுத்து அப்போதிலிருந்தே ஒளிபரப்பி வந்தாலும் தற்போது தான் பொது மக்களுக்குத் தெரிய வந்திருக்கிறது. 

காவிரி, மேலாண்மை வாரியம், ஸ்டெர்லைட், விவசாயிகள் போராட்டம், நியூட்ரினோ, மீத்தேன், வேலையில்லா திண்டாட்டம், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் என தமிழக பிரச்னைகளின் பட்டியல் நீ...ண்டுக் கொண்டிருக்கும் போது மாநில செய்தித் தொடர்புத்துறை மூலம் தனது புகழ் பாடும் நோக்கில் ஒரு விளம்பரத்தை 'அலேக்காக' தயார் பண்ணியிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. 

தியேட்டரில் அரசு விளம்பரம் ஒளிபரப்பப்படுவது பழைய விஷயம் தான். ஆனால் இந்த முறை ஒளிபரப்பப் படுவதோ நம்மை மிகவும் சோதனைக்குள்ளாக்கி பொறுமையை பதம் பார்த்து எரிச்சலூட்டுகிறது. மக்கள் வரிப்பணத்தை வாரி இரைத்து 30 மாவட்டங்களில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா கொண்டாடியதாக பெருமையாக அதில் கூறுகிறீர்களே, அந்த ஆடம்பர விழாவில் அலங்கார வளைவுகளால் எத்தனை உயிர்கள் போனது என்பதை ஏன் சொல்ல மறுத்து விட்டீர்கள்? உண்மையிலேயே உங்களுக்கு எம்.ஜி.ஆர் மீது பற்று இருந்திருந்தால், அந்த நூற்றாண்டு விழாவுக்கு செலவழித்த பணத்தில் மக்களுக்கு பயன்படும் ஏதேனும் திட்டங்களை அறிவித்திருக்கலாம் தானே? சரி அது கூட வேண்டாம், போக்குவரத்து கழகம் நஷ்டத்தில் ஓடுகிறது என்று கூறி பஸ் கட்டணத்தை நூறு சதவீதம் ஏற்றினீர்களே அதையாவது தவிர்த்திருக்கலாம். 

அந்த நூற்றாண்டு விழாவுக்கு தமிழகத்தின் மாணவ மாணவிகள் கடலலை போல் திரண்டார்கள் என பெருமை பீத்துகிறீர்களே, உண்மையை சொல்லுங்கள் ஒவ்வொரு பள்ளி மற்றும் கல்லூரிகளில் இருந்து கட்டாய ஆணை பிறப்பித்து வரவழைக்கப்பட்டவர்கள் அவர்கள் என்பது உங்களுக்குத் தெரியாதா? 

திருமங்கலத்திலிருந்து நேரு பூங்கா வரையிலான மெட்ரோ ரெயிலினை கொடியசைத்து துவக்கி வைத்தேன் என வெட்கமே இல்லாமல் சொல்கிறீர்களே, முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியால் நிதி ஒதுக்கப்பட்டு கோயம்பேட்டில் 10-6-2009 அன்று முன்னாள் துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் அந்த திட்டத்தைத் தொடங்கி வைத்தார் என்பது வரலாறுகளில் இருக்கிறது. கொடியசைப்பதெல்லாம் பெருமையா? 

கோயம்பேடு பேருந்து நிலையம் தொடங்கி மெட்ரோ ரெயில் வரை பல திட்டங்கள் தி.மு.க கொண்டு வந்து செயல்படுத்தியது, பணியின் பாதியில் ஆட்சிக் காலம் முடிவுற்றதால் கல்வெட்டுகளில் ஜெயலலிதா பெயர் இடம் பெற்றிருக்கிறது என்பது அனைவருக்கும் தெரியும். சரி அவராவது, முடியும நிலையில் இருந்த அந்தத் திட்டத்தை முடித்துவைத்து திறந்தார். ஆனால் எதுவுமே செய்யாத உங்களுக்கு எதற்கு இந்த வெட்டி பந்தா? 

இதையெல்லாம் கூட மன்னித்து விடலாம், 

"சாமி...

சொல்லுமா...

அர்ச்சனை என் பேருக்கு இல்ல, சாமி பேருக்கு..

எந்தச் சாமிக்கும்மா...

நம்ம தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அய்யா பேருக்கு... அவர்தான் எனக்கு வேலை கொடுத்த சாமி..."

சத்தியமாக சொல்லுங்கள் இதன் ப்ரிவியூவைப் பார்க்கும் போது உங்களுக்கும் உங்களுடன் இருந்தவர்களுக்கும் சிரிப்பே வரவில்லையா? எப்படி எந்தவித சலனமும் இல்லாமல் அந்த விளம்பரத்தை உங்களால் ஓகே செய்ய முடிந்தது? இன்றைக்கு சோஷியல் மீடியாவில் இந்த விளம்பரத்தை வைத்துதான் உங்களை கேவலப்படுத்துகின்றனர். இருக்கும் கொஞ்சநஞ்ச நல்ல பெயரையும் இப்படி வீண் விளம்பரத்தால் கெடுத்துக்கொள்ளாதீர்கள்.

எல்லாவற்றிற்கும் மேலாக தன் சொந்த பணத்தில் மக்களுக்கு நல்லது செய்தது போல் எப்படி உங்களால் அந்த அக்மார்க் சிரிப்பை ஒரே மாதிரியாக எல்லா இடத்திலும் உதிர்க்க முடிகிறது. ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் பக்கம் பக்கமாக விளம்பரம், அவர் செல்லும் வழி எங்கும் பிரம்மாண்ட பேனர், போஸ்டர் என்று தொண்டர்கள் உற்சாகப்படுத்தினார்கள். மக்களும் வேறு வழியில்லை என்று சகித்துக்கொண்டு சென்றனர். அவரே பரவாயில்லை என்று சொல்லும் அளவுக்கு இந்த செயல்பாடு தேவைதானா? 

இப்படி வீண் விளம்பரங்களுக்கு பதில், மோனோ ரயில், துணை நகரம் என சட்டமன்றத்தில் 110 விதியின் கீழ் ஜெயலலிதா அறிவித்த அறிவிப்புகளுக்கு செயல்வடிவம் கொடுத்தாலாவது மக்கள் உங்களை புகழ்வார்கள். இனியாவது செய்வீர்களா?