உள்ளாட்சி தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டி: கமல்
Author: Newstm Desk | Posted Date : 06:26 (24/04/2018) A+       A-

உள்ளாட்சி தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டி: கமல்

Apr 24

உள்ளாட்சி தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடும் என்று அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் இன்று தெரிவித்தார். 

பஞ்சாயத்து ராஜ் தினத்தை கொண்டாடும் வகையில் சென்னை ஆழ்வார்பேட்டையில் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் மாதிரி கிராம சபை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கலந்து கொண்டார்.

அதில் அவர் பேசியதாவது: நாம் அனைவரும் ஒரு கடமையை செய்ய இங்கு கூடி இருக்கிறோம். இது மக்கள் நீதி மய்யத்துக்கு கிடைக்கும் விளம்பரமாக நான் கருதவில்லை. இது கிராம சபைகளுக்கு கொடுக்கப்படும் விளம்பரமாகவே நினைத்து அதை செய்வதில் பெருமையடைகிறது மக்கள் நீதி மய்யம். இது நாங்கள் புதிதாக கண்டுபிடித்த ஒன்றல்ல. நமது சட்ட அமைப்பிலேயே இது இருக்கிறது. கிராமத்தின் கையை வலுவாக்கும் சட்டம் இயற்றப்பட்டு 25 ஆண்டுகள் ஆகிறது. ஆனால் இது சரிவர இயங்காமல் இருப்பதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. ஒன்று அரசியல் சுயநலம், அதற்கும் மேல் மக்களாக நாம் அதை செய்யவில்லை. குற்றம் யார் மேல் என்பதை பின்பு பார்த்துக் கொள்ளலாம். கிராமசபை என்றதும் சலிப்பை ஏற்படுத்தும் நிகழ்சியாக இருக்கும் என்று பலர் நினைக்கலாம். இது வயலும், வாழ்வும், நகரத்தில் வாழ்பவர்களது வாழ்வும் சம்பந்தப்பட்டது. 

கிராம பஞ்சாயத்திற்கு ரூ.1 முதல் ரூ. 5 கோடி வரை ஒதுக்கப்படுகிறது. தமிழகத்தில் 12, 524 கிராமங்கள் இருக்கின்றன. கிட்டதட்ட 25 ஆயிரம் கோடி வரை வருடா வருடம் கிராமங்களுக்காக ஒதுக்கப்படுகின்றன. அத்தனை பணம் இருக்கிறது. அதை சரியாக பயன்படுத்துகிறோமா என்பது தான் கேள்வி. இது சரிவர நடக்கிறதா என்று பார்ப்பதற்கு  தான் கிராம சபை அமைக்கப்படுகின்றன. நானும் கிராமத்தில் இருந்து வந்தவன் தான். 

இடைப்பட்ட காலத்தில் இந்த பணிகள் செய்யப்படாமல் மறந்து போய்விட்டது. இந்த கிராம சபைகள் நடந்தே ஆக வேண்டும். இந்த கணக்குகளை ஒவ்வொரு கிராம சபை தலைவர்களும் மக்களிடம் வாசித்து காட்ட வேண்டும். 

ஊழல் ஒழிப்பு ஒரே நாளில் செய்யக்கூடியது அல்ல. முதலில் தடுப்பு, பின் குறைப்பு அதன் பின் தான் ஒழிப்பு. அதை செய்வதற்கான அற்புதமான இந்த கருவியை 25 வருடங்களாக கையில் வைத்திருக்கிறோம். இது தொடர்ந்து செய்யப்பட்டு இருந்தால் தமிழ் நாட்டின் முகம் மாறியிருக்கும். இப்போது இதை நினைவுப்படுத்தும் நாள். இதை செய்ய வேண்டிய கடமை நம் அனைவருக்குமே உள்ளது. 

மக்கள் நீதி மய்யம் மேல்தட்டுக் கட்சி அல்ல. இங்கிருந்து தான் எங்கள் பலம் வருகிறது. இதை முழுவதுமாக நான் உணர்ந்திருக்கிறேன். 

மே 1ந்தேதி, ஆகஸ்ட் 15ந்தேதி, அக்டோபர் 2, ஜனவரி 26 இந்த நான்கு நாட்களும் கண்டிப்பாக இந்த கிராம சபை நடக்க வேண்டும் என்பது சட்டம். அது நடக்கவில்லை என்பது நடப்பு, அதை மாற்ற வேண்டும் என்பது கடமை. என்னை சிலர் எறும்பு எனக் கூறுகிறார்கள், ஆனால், யானை காதில் எறும்பு புகுந்தால் என்னவாகும், எனவே, வார்த்தை ஜாலங்களில் நுழையாமல் செயல்படுவோம். தேவைப்பாட்டால் உள்ளாட்சி தேர்தலிலும் நாங்கள் போட்டியிடுவோம் என்றார். மேலும் நாட்டில் நடக்கும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மிகவும் வெட்ககேடானது என்றார். 

இந்த நிகழ்ச்சியில் இன்று மக்கள் நீதி மய்ய நிர்வாகி பொறுப்பில் இருந்து விலகிய வழக்கறிஞர் ராஜசேகரும் கலந்துகொண்டார். நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், "என்னால் கமல் அளவுக்கு வேகமாக வேலை செய்ய முடியவில்லை என்பதால் தான் பதவியில் இருந்து விலகினேன். தற்போது இக்கட்சியின் வழக்கறிஞராக தான் வந்துள்ளேன். அவரது நேர்மை தமிழ்நாட்டுக்கு கிடைத்த வரபிரசாதம்" என்றார்.