’கடைக்குட்டி சிங்கம்’ - திரை விமர்சனம்

  பால பாரதி   | Last Modified : 14 Jul, 2018 05:24 pm

kadaikutty-singam-movie-review

விவசாயத்தின் மீதுள்ள நேசத்தையும், குடும்பப் பாசத்தையும் பற்றிப் பேசுகிறது ’கடைக்குட்டி சிங்கம்’.

கிராமத்து பெரிய தலைக்கட்டாக இருக்கும் சத்யராஜ், மனைவி விஜி சந்திரசேகர் வரிசையாக ஐந்து பெண் பிள்ளகளைப் பெற்றெடுக்க, ஆண் வாரிசுக்காக ஏங்கும் அந்தக் குடும்பத்தில் கடைக்குட்டியாக வந்து சேருகிறார் கார்த்தி. தன்னையொரு விவசாயி என கர்வத்துடன் சொல்லிக் கொள்ளும் கார்த்தி, விவசாயத்தை நேசிப்பதைப் போல, தனது குடும்பத்தையும்; மூத்த சகோதரிகளையும் நேசித்து அன்பு காட்டும் பாசக்கார தம்பியாக இருக்கிறார்! ஒரு அக்கா மகள் பிரியா பவானி சங்கர், இன்னொரு அக்கா மகள் அர்த்தனா, இருவரில் ஒருவரை கார்த்தி கல்யாணம் கட்டிக் கொள்வாரென மொத்தக் குடும்பமும் பெரும் கனவோடு இருக்க, சாயிஷாவால் கலைகிறது அந்தக் கனவு! 

உள்ளூர் பெரிய மனிதர் பொன்வண்ணனின் மகள் சாயிஷா மீது காதல் கொள்கிறார் கார்த்தி! இந்தக் காதல் விவகாரம் தெரிய வரும்போது  குடும்பம் சிதைகிறது! சகோதரிகளின் பிரிவைத் தாங்கமுடியாமலும், காதலியை உதற முடியாமலும் தவிக்கும் கார்த்தி, என்ன முடிவெடுக்கிறார்? பிரிந்த குடும்பம் சேர்ந்ததா? காதல் கை கூடியதா? என்பது மீதிக் கதை!

விவசாயத்துக்கும், விவசாயிகளுக்கும் மரியாதை பெருகி வரும் இந்த வேளையில், தோப்பு போல எல்லோரும் கூடி வாழ்ந்தது மாறி, தனிமரமாகி வாழும் தனிக்குடித்தன வாழ்க்கை சலித்துப் போய், திரும்பவும் கூட்டுக் குடித்தன வாழ்க்கைக்காக மக்கள் ஏங்கும் இந்த சூழலில், விவசாயத்தின் மீதுள்ள நேசம், குடும்ப பாசம் இந்த இரண்டு உணர்வுகளையும் அழகாக கோர்த்தெடுத்து, சிறப்பான படைப்பாகக் கொடுத்திருக்கும் இயக்குநர் பாண்டிராஜ் மீது மரியாதை கூடுகிறது! 

இதில் கார்த்தி, சாயிஷா, பிரியா பவானி ஷங்கர், அர்த்தனா, சத்யராஜ், சூரி, விஜி சந்திரசேகர், மௌனிகா, யுவராணி, பொன்வண்ணன், ஸ்ரீமன், சரவணன், மாரிமுத்து, சவுந்தர ராஜா, தீபா, ஜீவிதா, இந்துமதி என மிகப்பெரிய நட்சத்திரப் பட்டாளமே உள்ளனர். இவர்கள் தவிர சூர்யாவும் ஒரு காட்சியில் வந்து போகிறார். 

மாதம் ஒரு லட்சத்துக்கும் மேல் சம்பாதிக்கும் கெத்தான விவசாயி கதாப்பாத்திரத்துக்கு கச்சிதமாகப் பொருந்துகிறார் கார்த்தி. ’விவசாயம் தேசிய தொழில்னு அப்பப்ப ஞாபகப்படுத்த வேண்டியிருக்கு!’, ’நாமெல்லாம் விவசாயின்னு காலரத் தூக்கிவிட்டுத் திரியணும்!, ’படைக்கிறவன் மட்டும் கடவுள் இல்ல, பயிர் செய்யறவனும் கடவுள் தான்..!’ என்பது போன்ற விவசாயத்தை உயர்த்திப் பிடிக்கும் வசனங்களை கார்த்தி பேசும் போது ’விசில்’ பறக்கிறது! 

சகோதரிகள் மீது அன்பு காட்டும் பாசக்கார தம்பியாக, சொந்த பந்தங்கள் சூழ வாழவேண்டுமென நினைத்து,‘சொத்து சேக்கறது மட்டும் சேமிப்பு இல்ல, சொந்த பந்தங்கள சேக்கறதும் சேமிப்பு தான்!’ என உறவுகளின் உன்னதத்தை உணர்ந்து, தந்தையின் இடத்திலிருந்து சீர் வரிசை செய்முறைகளை சிறப்பாக செய்யும் மகனாக, வாழ்ந்திருக்கிறார் கார்த்தி. பிரிந்து போனவர்கள் ஒரே இடத்தில் கூடியிருக்கும் போது, ”எனக்கு என்ன தண்டனை வேணும்னாலும் கொடுங்க, ஆனா, பேசாம மட்டும் இருக்காதீங்க, அத தாங்கற சக்தி இல்ல..!” என் அக்காள்களை பார்த்து உணர்ச்சிகரமாகப் பேசும் போது, ஆண்களையும் கலங்க வைத்துவிடுகிறார் கார்த்தி!

விவசாயி கார்த்தி, கல்லூரிப் பெண் சாயிஷா இருவரின் காதல் ’எபிசோட்’ பசுமையாக இருக்கிறது. காதலனின் குடும்பத்திலிருந்து காதலுக்கு ’ஸ்பீட் பிரேக்’ விழும்போது கலங்கும் போது சாயிஷாவின் நடிப்பு பளிச்சிடுகிறது!     

ஆண் வாரிசுக்காக மனைவி விஜி சந்திரசேகரின் சம்மத்துடன் கொழுந்தியாள் பானுப்ரியாவை இரண்டாம் தாரமாக்கிக் கொள்ளும் சராசரி கணவனாக, மகனுக்காக மகள்களை தூக்கி எறியவும் தயாராக இருக்கும் தகப்பனாக தனது கதாப்பாத்திரத்தோடு கரைந்து போகிறார் சத்யராஜ். ’மாமா... மாமா..’ என கார்த்தியையே சுற்றி வரும் அக்காள் மகள்கள் பவானி சங்கரும், அர்த்தனாவும் தங்களுக்கு மாமன் இல்லையென தெரிந்ததும் தவிக்கும் தவிப்பில் இயல்பான நடிப்பைக் காட்டுகின்றனர். அக்காள்களாக வரும் மௌனிகா, யுவராணி, தீபா, ஜீவிதா, இந்துமதி, மாமன்களாக வரும் ஸ்ரீமன், சரவணன், மாரிமுத்து, நாயகியின் தந்தை உள்ளூர் பெரிய மனிதராக வரும் பொன்வண்ணன் ஆகியோர் கதையை தாங்கிப் பிடிக்கின்றனர்.

டி.இமான் இசையில் ’சண்டாளி..’ பாடல் மனதில் நிற்கிறது! கிராமத்து அழகுகளை தனது கேமராவால் அள்ளிவந்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் வேல்ராஜ்.

’கடைக்குட்டி சிங்கம்’ ரேட்டிங் 3.5/5

Advertisement:
[X] Close