வேகமெடுக்கும் சினிமா ஸ்ட்ரைக்..! ஆடியோ - டீசர் வெளியிடவும் தடை..!

  பால பாரதி   | Last Modified : 13 Mar, 2018 06:11 pm


காலவரையரையற்ற வேலை நிறுத்தம் தொடரும் என அறிவித்துள்ள தயாரிப்பாளர்கள் சங்கம், தற்போது ஆடியோ - டீசர் ரிலீஸ் மற்றும் பத்திரிகையாளர் சந்திப்பு போன்ற சினிமா நிகழ்ச்சிகளுக்கும் தடை வித்துள்ளது.

க்யூப், யு.எஃப்.ஓ. போன்ற டிஜிட்டல் நிறுவனங்களுக்கான கட்டணம் அதிகமாக இருப்பதாகக் கூறி, கடந்த 1-ம் தேதியில் இருந்து புதுப்படங்கள் எதையும் ரிலீஸ் செய்யாமல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகிறது தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம்.

இதனால், கடந்த இரண்டு வாரங்களாக புதுப்படம் எதுவும் ரிலீஸாகாததால், ‘பாகுபலி’,‘மேயாத மான்’,‘தெறி’,‘மெர்சல்’,‘விக்ரம் வேதா’என ஏற்கெனவே ரிலீஸான படங்களையே மறுபடி ரிலீஸ் செய்துள்ளனர்.

இதன் அடுத்த கட்டமாக, வரும் 16-ம் தேதி முதல் படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்படும் என தயாரிப்பாளர் சங்கம் அறிவித்தது. 

இந்நிலையில், தயாரிப்பாளர்கள் சங்கத்தின் அவசர கூட்டம் நேற்று மாலை நடைபெற்றது. அதில், ஏற்கெனவே அறிவித்தபடி புதுப்படங்களின் ரிலீஸ் நிறுத்தம் தொடரும் என்றும், திட்டமிட்டபடி 16 ஆம் தேதி முதல் படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்படும் எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. 

மேலும், 23 ஆம் தேதி முதல் வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் நடைபெறும் படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்படும் எனவும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அத்துடன், இசை மற்றும் டீசர் வெளியீட்டு விழா, பத்திரிகையாளர் சந்திப்பு உள்ளிட்ட சினிமா நிகழ்ச்சிகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

..
Advertisement:
[X] Close