#BiggBoss day 12: மருகும் மஹத்... உருகும் யாஷிகா..! என்னடா நடக்குது இங்கே..?

  ஆர்.எம்.திரவியராஜ்   | Last Modified : 30 Jun, 2018 04:57 pm

bigg-boss-tamil-season-2-day-12

பிக்பாஸ்-2 நிகழ்ச்சியின் 12வது எபிசோட் காதல், கண்ணீர், குடும்ப விஷயம் என கலந்து கட்டி நேயர்களின் கவனத்தை ஈர்த்தது. இருப்பினும்  போட்டியாளர்கள் எல்லை மீறி நடந்து கொள்வதாக குற்றச்சாட்டுகளும் எழுந்துள்ளன. 

நிகழ்ச்சியையை அங்குலம் அங்குலமாக அலசலாம் வாருங்கள்... காலை 8 மணிக்கு அலாரம் அடித்தது ‘டங்காமாரி ஊதாரி’ என்கிற குத்துப்பாடல்  குதூகலமாக ஒலிக்க, ஆண்களும், பெண்களுமாக எழுந்து ஆட்டம்போட்டனர். பெண்கள் அணியுடன் இணையாமல் தனியாக ஆடிக் கொண்டிருந்தார் நித்யா. பாட்டு முடிந்து உள்ளே வந்த நித்யாவுக்கு மட்டும் காபியை எடுத்து வந்து கொடுத்தார் பாலாஜி. ( பாசமா.. வேஷமானு புரியலையே...)

8.30 மணிக்கு பாலாஜி சமையல் செய்ய அவருக்கு, டேனி, மஹத்தும்  உதவிக் கொண்டு இருந்தனர். வைஷ்ணவியும் ஜனனியும் பேசிக்கொண்டிருந்தனர். 8.45... ஜனனியின் கால் விரல்களுக்கு பாங்காக நெயில் பாலிஷ் வைத்துக் கொண்டிருந்தார் மஹத். 
வைஷ்ணவியும் ஜனனியும் பேசிக்கொண்டிருந்தனர். ‘நம்ம ஓவரா பண்றோம்-னு பாய்ஸ் டீம் சொல்றாங்க.. நம்ம என்ன அப்படியா பண்றோம்?” என்று ஜனனியிடம் வைஷ்ணவி சொல்லிக் கொண்டிருந்தார். அடுத்து குக்க்சர் விசில் அடிக்க “நித்யா மாதிரி அடங்காம இருந்தியின்னா தூக்கிப் போட்ருவன் பார்த்துக்க’ என்று குக்கரிடம் பேசிக் கொண்டிருந்தார் பாலாஜி.  கிச்சனில்தான் சண்டைகள் ஆரம்பமாகின்றன. 

தன்னுடன் பேசிக்கொண்டிருந்த ரம்யாவிடம், நேற்று தனக்கு நித்யா ரிவிட் அடித்து விட்டதாக கூறுகிறார். அதிகாரம் செய்யவும் ஒரு லிமிட் இருக்கு என்க்கூறினார். இப்பவே நித்யாவ மதிக மாட்டேங்குறீங்க... இன்னும் சில விஷயங்களையெல்லாம் சொன்னா சுத்தமா மதிக்க மாட்டீங்க..’’ என்கிறார் பாலாஜி. 9.45 அவமதிப்பான தோரணையுடன் பாலாஜி சாப்பாட்டை தந்ததாக நித்யா கோபப்படுகிறார்.  டேனி சமாதானப்படுத்த, மஹதியும் வந்து ‘ அம்மாவுக்கு தண்ணீ கொடுங்க’ என ஆசுவாசப்படுத்தினார்.  சிறிது சாப்பிட்டவர் மீதவுணவை குப்பையில் போட்டார். ‘சாப்பாட்டை யாராவது வீண் செய்வாங்களா.. எத்தனை பேர் சாப்பாடு இல்லாம கஷ்டப்படறாங்க தெரியுமா... வேறு யாராவது சாப்பிட்டு இருப்பாங்கள்ல’ என எகிறினார் மஹத். ‘நான் எச்சில் செய்ததை மற்றவர்கள் பயன்படுத்த மாட்டார்கள். அப்படி பயன்படுத்துவதிலும் எனக்கு விருப்பமில்லை. அதனால்தான் குப்பையில் போட்டேன்’ என்கிற நியாயமான காரணத்தை நித்யா சொன்னார். இதர சமயங்களில் சில உணவுகள் அப்படி வீணாகின்றன என்பதையும் சுட்டிக் காட்டினார். 

‘நாங்கள்லாம் எவ்ள கஷ்டப்பட்டு காலைல எழுந்திரிச்சு உணவு தயாரிச்சோம் தெரியுமா?” என்று புலம்பினார்கள் ஆண்கள்.  ‘நீங்க எத்தனை பொருட்களை வீணாக்கியிருக்கிறீர்கள் என்று நான் சொல்லட்டுமா?” என்று நித்யா வலுவாக தன் தரப்பைச் சொன்னவுடன் அப்படியே அடங்கிப் போனார் மஹத். உரத்த குரலில் முதலில் கத்தி விட்டு, ‘என் கிட்ட பேசாதீங்க மஹத்’ என்று நித்யாவும் எகிறியவுடன் ‘என் கிட்ட மூஞ்சைக் காட்டாதீங்க’ என்றார் மஹத். ‘சாப்பாட்டை கொட்டலாமா என  பொன்னம்பலம் கூற ‘அவங்க அப்படித்தான்.. இங்கே இருக்குற யாரும் சின்னப்பசங்க இல்ல. அவங்கவங்க என்ன பண்றாங்களோ அது தான் பிரதி பலிக்கும். அதனால அவங்கவங்க என்ன பண்றாங்களோ பண்ணிக்கட்டும்’’ என்றார். ‘தனது தரப்பு நியாயங்களை மும்தாஜிடம் கூறிக்கொண்டிருந்த நித்யா, டேனி வந்தவுடன் ‘எல்லோரும் சேர்ந்து என்னை டார்கெட் பண்ணாதீங்க’’ என கூறினார் நித்யா. அங்கு வந்த மஹத் நித்யாவிடம் மன்னிப்பு கேட்டார். 

மஹத்தை அழைத்த டேனி’ பாலாஜிக்காக சப்போர்ட் செய்து பேசி நித்யாவை கோபப்படுத்தாதே.. அது நியாமல்ல. சாப்பாட்டை மரியாதையாகக் கொடுத்தால்தான் யாரும் சாப்பிடுவார்கள். நானெல்லாம் சாப்பாடு கிடைக்காமல் எப்படி அலைஞ்சிருக்கிறேன் தெரியுமா? ‘’என நித்யாவுக்கு ஆதரவாக பேசினார். ‘சிறந்த எஜமானிகளாக நித்யா, வைஷ்ணவி, மமதி’ இந்த மூனு பேரையும் தயவு செய்து  தேர்ந்தெடுக்காதீங்க. நீங்க தேர்ந்தெடுத்தாலும் அவங்களுக்கு அதுக்கான தகுதி கிடையவே கிடையாது. யாரு பிரச்னை இல்லாமல் வேலை வாங்கினார்களோ அவங்க தான் சிறந்த எஜமாளி. அவங்கள நாமினேஷனில் இருந்து காப்பத்திக்கனும்னு போராடுறாங்க’ என பற்ற வைத்துக் கொண்டிருந்தார். மஹத். 
ஆண்கள் அணியினர் கூட்டமாக சேர்ந்து வைஷ்ணவி, நித்யாவை பற்றி பேசி புறம்பேச ஆரம்பித்தனர். ரித்விகாவிடம், ’நாம அவங்கள வேலை வாங்குறத நக்கலா பண்றோமாம். முக்கியமா யாஷிகாவை சொல்றாங்க. நாம நிறைய வேலை வாங்குறோமாம்’ எனத் தெரிவித்தார் வைஷ்ணவி. அதற்கு பதிலளித்த ரித்விகா ‘ஆமாம்.. அவங்க மம்மியா இருக்காகங்க. அவங்க 7 பேர். நாம ஒன்பது பேர் இருக்கோம். அவங்களுக்கு வேலை அதிகமாகத்தான் இருக்கும்’’ எனக்கூறி உண்மையை ஒப்புக்கொண்டார். 

அடுத்து முதலாளி, தொழிலாளியாக தங்களை பாவித்து கொண்டு சென்றாயனும், மஹதியும் வெட்டி அரட்டை அடித்துக் கொண்டிருந்தனர். சமையல் அறையில் காய்கறி நறுக்கிக் கொண்டிருந்த இடத்திற்கு வந்த மும்தாஜ் ஆண்களிடம் ‘’ ஏதாவது உதவி வேணுமா? எனக்கேட்டார். அதற்கு பாலாஜி ‘இல்லம்மா.. வேணாம்.. நீங்க ரெஸ்ட் எடுங்க..உங்களது சேவைதான் எங்களுக்குத்தேவை’’ எனக்கூறி அனுப்பி வைத்தார். 
‘நான் கவர்ச்சி நடிகையாக இருந்தாலும் திரைத்துறையில் என்னைப் பற்றி ஒரு வதந்தி கூட வந்தது கிடையாது. சில பேருக்குத் தோன்றலாம், திரைப்படங்களில் அப்படி கவர்ச்சியாக தோன்றி விட்டு, ஒரு புடவை மாற்றுவதற்கு இப்படி ‘சீன்’ போடுகிறாரே.. என்று.. காலம் கடக்கும் போது, மதத்தில் அதிக நம்பிக்கை உருவாகும் போது.. அது சார்ந்த முதிர்ச்சியும் வந்து விடுகிறது. தொலைக்காட்சியில் என்னுடைய பாடல்கள் ஒளிபரப்பாகும் போது என் வீட்டுப் பிள்ளைகள் அதைப் பார்ப்பதை நான் விரும்பமாட்டேன்’ என்று மும்தாஜ் வைஷ்ணவியிடம் பேசிக் கொண்டிருந்தார்.

 ‘ஆமாம்.. நான் கூட சொன்னேன். ‘மல.. மல.. பாட்டுக்கெல்லாம் அப்படி ஆடிட்டு… ஒரு புடவை கட்டறதுக்கு இப்படி பண்றாங்களேன்னு’’ என்று பதிலளித்த…வைஷ்ணவி, ‘அது அப்போது உங்கள் சாய்ஸ்’ என்பது மாதிரி இன்னொருபுறமாகவும் பேசினார். இப்பக்கூட என்னோட பாட்டு டிவியில வந்தா பக்கத்துல பசங்க இருக்குறதை பார்த்துட்டு சேனலை மாத்திடுவேன். ஏன்னா இப்போ எனக்கு வெட்கம் வருது. எனது அண்ணன் பையனுக்கு ஷாரிக் வயது இருக்கும். அவனைப்போல தோற்றமும் கொண்டவன்’ எனக்கூறி பிக்பாஸ் வீட்டில் ஷாரிக் மீதான பாசத்திற்கு இதுதான் காரணம் என்பதையும் உணர வைத்தார் மும்தாஜ். 

வைஷ்ணவியின் இந்த இரட்டை நிலையைப் பற்றி மற்றவர்கள் தொடர்ந்து புறம்பேசிக் கொண்டேயிருந்தார்கள். ஒரு சமயத்தில் வைஷ்ணவியின் தோற்றத்தைப் பற்றி மலினமான கிண்டலைச் சொன்னார் பாலாஜி. அப்போது இடை புகுந்த ஷாரிக் ஸ்வீட்டை எடுத்து யாஷிகாவுக்கு செல்லமாக ஊட்டி விட்டார். அடுத்து டேனியும், மஹத்தும் பேசிக்கொண்டிருக்கும்போது வந்த யாஷிகாவை, ஸ்ருதிஹாசன் மாதிரியே இருக்குற’’ எனக்கூறினார் டேனி. அடுத்து யாஷிகாவைப்பார்த்து ‘ கல்யாணம் பண்ணிக்கலாம ? என வழிந்தார் மஹத்.  ‘’ ஏன் இப்படி கேட்குற..? என அசடு வழிய கேட்ட யாஷிகாவியம் ‘’ சும்மா கேட்டேன்’ என மஹத் கூறினார். அதற்கு அச்டுவழிய மஹத்தை பார்த்துக் கொண்டே.. ’சரி சும்மா கல்யாணம் பண்ணிப்போம்’ என புன்னை சிந்தினார் யாஷிகா.

அடுத்து ஒரே இடத்தில் கூடிய ஆண்கள் வைஷ்ணவி ஒவ்வொரு நேரமும் ஒருத்தரிடம் நடித்துக்கொண்டிருப்பதாக பேசிக்கொண்டிருந்தனர். அப்போது ‘பிக்பாஸ் வைஷ்ணவியை ஏதாவக்து பண்ணி விடுங்க’’ என மஹத் கோரிக்கை விடுத்தார். அடுத்து நித்யா- பாலாஜி விவகாரத்தை பற்றி பேசிய சென்றாயன ‘பாலாஜி பேசும் வார்த்தைகள் எல்லாம் விஷம் போன்றது” என்றவர் ‘காமெடி வேற.. ஃபேமிலி’ என்கிற தத்துவத்துவம் உதிர்த்தார்.  ‘மற்ற பெண்களின் முன்னால் நித்யாவை அவமதிப்பது நல்லதுக்கு இல்ல’ என நித்யாவிற்காக வரிந்து கட்டினார்.  அடுத்து பெண்கள் எஜமானர்களாக இருந்த விளையாட்டு முடிவிற்கு வந்தது.‘சரியாக வேலை செய்யாத பணியாளரை’ பெண்கள் அணி கூடி ஆலோசித்து தேர்ந்தெடுத்தது. ‘உடல்நலம் சரியில்லாத காரணத்தினால் ‘அனந்த்’ தேர்ந்தெடுக்கப்பட்டார். அதை மனநிறைவோடு ஏற்றுக்கொண்டு  பறக்கும் முத்தத்தை கொடுத்தார் ஆனந்த். சிறந்த எஜமானியாக ரித்விகா அறிவிக்கப்பட்டார். 

இதன் மூலம்  அனந்த் அடுத்த வார நாமினேஷனிற்கு நேரடியாக செல்கிறார். அதேபோல் அடுத்த வார நாமினேஷில் ‘ரித்விகா’வின் பெயரை சொல்ல முடியாது. லக்ஸுரி பட்ஜெட் டாஸ்க் நிறைவு பெறுவதாகவும் அறிவித்தார் பிக்பாஸ். இந்த மகிழ்ச்சியை ’கட்டிப்பிடி கட்டிப்பிடிடா..’ என்ற பாடலைப்பாடி மகிழ்ச்சியை வெளிப்படுத்த அதில் நடித்திருந்த மும்தாஜ் மெல்லிய வெட்கத்துடன் புன்னகை சிந்தினார். அடுத்து ஐஸ்வர்யா தத்தா, யாஷிகா, மஹத், ஷாரிக் ஆகியோர் மட்டும் ஒரே கட்டிலில் படுத்து கிடந்தனர். அருகில் பாலாஜி நின்று கொண்டிருக்க யாஷிகாவின் இடுப்பில் கைவைத்து தொட்டுப்பார்த்தார் மஹத். ‘ பதறிப்போன பாலாஜி டேய் வேண்டாம்..’ என தடுக்க.. ’அண்ணே மைக்ணே.. சூப்பரா இருக்குல்ல ‘ என மஹத் சமாளிப்பதை பார்த்து தலையில் அடித்துக்கொண்டார் ஐஸ்வர்யா.

சரி எல்லோரும் உங்க ரூமுக்கு போங்க ‘ என பெண்களை விரட்டினார் பாலாஜி. அதற்கு பெண்கள் அணி மஹத் எங்களுக்கு ப்ரெண்ட் என க்கூறினர். யாஷிகாவோ ‘ மஹத் எனக்கு அண்ணன்’ எனக்கூறி அதிர்ச்சி கொடுத்தார். எல்லோரும் போலியா இருக்காங்க என ழௌது கொண்டிருந்த யாஷிகாவை தேற்றினார் ஐஸ்வர்யா. அடுத்து, ஷாரிக், மஹத் இருவரும் ஒரு காட்டிலில் படுத்திருக்க, அங்கே படுத்திருந்த யாஷிகா மஹத்தின் கால் முட்டிப்பகுதிகளில் விரல்களாம் தாளம் தட்டிக் கொண்டே, ஷாரிக்கை பார்த்து கண்ணடித்தார். மஹதி பாடியதற்கு அவர் தாளமிட்டது பின்னர் தெரிய வந்தது. “தீஞ்சு போன மோட்டார் ஓடற சத்தம் மாதிரி இருக்கு’ என்று பாட்டுப் பாடுகிற மமதியின் குரலை கிண்டலடித்தார் மஹத். பெரும்பாலேனோர் இதற்கு சிரித்து தீர்த்தார்கள். சிம்புவின் நண்பர் என்பதை அவர் பாணியிலேயே ’’ கடகடகட... கடகடகட ’ என பாடி நிருப்பித்தார்  மஹத்.

அடுத்து  யாஷிகாவ் இடம்’ நான் ஒரு பெண்ணை உயிருக்கு உயிரா லவ் பண்ணினேன். ஆனா அவ என்னை விட்டுட்டு போயிட்டா. வலிக்குதுடி வலிக்குது‘ எனக்கூறியபடி ‘’ ஏண்டி இப்படி பண்ண.. ஏமாற்றம் தந்தாயே பெண்ணே.. ’ எனப்பாடினார் மஹத்.  அடுத்து ‘யாஷிகாவையும் மஹத்தையும் சேர்த்து’ பாத்ரூமில் தள்ளி விடுகிறார்கள். என்னங்கடா நடக்குது இங்க?.... ‘சிறந்த எஜமானர்களாக’ இருந்த ஆண்களுக்கு லக்ஸரி 1600 மதிப்பெண் முழுமையாக வழங்கப்பட்டது. லக்ஸரி பட்ஜெட்டை வெற்றி பெற்ற ஆண்கள் அணியிலிருந்து மூவர் மட்டுமே தேர்ந்தெடுக்க முடியும். அதன்படி பட்ஜெட் போட்டுக்கொண்டிருந்தனர். ரித்விகா மற்றும் நித்யாவிடம் கார்டன் ஏரியாவில் பேசிக் கொண்டிருந்தார் சென்றாயன். மறுமுனையில் அமர்ந்திருந்த பாலாஜி கும்பலுக்கு இது பிடிக்காததால் ஊளையிட்டு அவர்களை வெறுப்பேற்ற முயன்றனர். இந்தக் கூச்சலால் சற்றும் கவனம் கலையாத சென்றாயன், தொடர்ந்து பேச கூக்குரல்களும் அதிகமானது. ஆனால் அவர்களது முயற்சி சென்றாயனிடன் பலிக்கவில்லை.  

வீட்டுக்குள் சென்ற பாலாஜி ‘தங்களுக்குள் சண்டை நிகழ்ந்தது’ போன்றதொரு நாடகத்தை ஏற்படுத்தினார்கள். அதன்படி உரத்த குரலில் பேசினார்கள். ஓவர் ஆக்ட் செய்த மஹத், உரையாடலின் இடையே, முதல் சீஸன் காயத்ரிக்கு பிடித்தமான, சர்ச்சையான வார்த்தையைப் பயன்படுத்தினார். கமலைப் போலவே அதை சமிக்ஞையால் சுட்டிக் காட்டினார் மும்தாஜ். விளையாட்டு என்றாலும் கூட வார்த்தைகள் எல்லைமீறக்கூடாது என்பது மும்தாஜின் கண்டிப்பான அபிப்ராயம். இந்தச் சண்டை ஒரு ‘டிராமா’ என்பதை மும்தாஜால் எளிதில் கண்டுபிடிக்க முடிந்தது.  ‘நாடக’ சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டு ஜாடை மாடையாக நித்யாவிற்கும் சில செய்திகளை பாலாஜி சொல்ல முயன்றார். இந்த நாடகத்தை பொறுத்துக்கொள்ள முடியாமல் டேனி சிரித்து விட நாடகம் பாதியில் முடிவடைந்தது.


அடுத்த போட்டி. ‘ஒரு குடும்பத்தில் அக்கறையும் பொறுப்பும் இல்லாமல் சுயநலத்துடன் செயல்படுபவர்கள் ஆண்களா?, பெண்களா? என்கிற தலைப்பில் இரு அணியும் விவாதிக்க வேண்டும். இந்த தலைப்பில் முதலில் பேச வந்த ரித்விகா, ‘முதலில் பேச பெண்களை அனுப்பிய ஆண்களின் சுயநலம் தெரிகிறது. நாங்கள் பேசுவதில் இருந்து பாயிண்ட்டுகளை நீங்கள் எடுத்துக் கொள்வீர்கள். எத்தனை ஆண்கள் தங்கள் மனைவிகளை பணிக்கு அனுப்புகிறீர்கள்? வீட்டு வேலைகள், குழந்தைகளைப் பார்த்துக் கொள்ளச் சொல்வீர்கள்..இதிலும் சுயநலம். .. அப்படியே பெண்கள் வேலைக்குப் போனாலும் அதையும் செய்து விட்டு வீட்டு வேலைகளையும் வந்து அவர்கள் பார்க்க வேண்டியிருக்கிறது. இதுவும் ஆண்களின் சுயநலம்” என்று பேசி அமர முயன்றார். இதற்கு பாலாஜி நக்கலாக ஏதோ சொல்ல, “இதுவும் ஆண்களின் சுயநலம்தான். பெண்களை மட்டம் தட்டிக் கொண்டேயிருப்பது’ என்று அதையும் தன் வாதத்திற்கு உபயோகித்துக் கொண்டார் ரித்விகா. 

“எங்களுக்கு வந்த பரிசுப் பொருட்களை ஆண்களாகிய நாங்கள் பகிர்ந்து கொண்டோம். ஆனால் பெண்களுக்கு கிடைத்ததில் மும்தாஜ் மூன்று சாக்கெலட்டுக்களை பதுக்கி வைத்திருக்கிறார். இது சுயநலம்தானே?” என்று சந்தடி சாக்கில் மும்தாஜை போட்டுக் கொடுத்தார் டேனி. 
இதற்குப் பதிலடியாக பேச வந்த நித்யா, ‘எந்தவொரு ஆணும் திருமணத்திற்குப் பின் தன் பழக்க வழக்கங்களை மாற்றிக் கொள்வதில்லை.  தீய பழக்கங்களையும் கூட. ஆனால் பெண் மட்டும் புகுந்த வீட்டிற்கேற்ப தன் பழக்கங்களை மாற்றிக் கொள்ள எதிர்பார்க்கிறார்கள். இது சுயநலம்தானே?’ என்றார்.  ‘அகங்காரமும், ஆதிக்க உணர்வும் ஆண்களுக்கு இருக்கிறது. பெண்களின் திறமையை ஊக்குவிக்காமல் அவர்கள் அடக்கி வைத்திருக்கும் ஆண்களின் சதவீதமே அதிகம். சில விதிவிலக்குகள் இருக்கலாம்’ என்றும் நித்யா பேசினார். 

பிறகு பேச வந்த பாலாஜியின் பேச்சு நித்யாவிற்கு பதிலடி தருவதாக இருந்தது. ‘ரித்விகா சொன்னாங்க.. கணவர்கள் தங்களின் மனைவிமார்களை வேலைக்கு அனுப்புவதில்லை என்று. அது தவறு. இன்றைய காலத்தில் இரண்டு பேரும் வேலைக்குச் செல்கிறார்கள். அப்படித்தான் குடும்ப பொருளாதாரம் மேம்படும். தம்பதியினர் தங்களின் பிரச்னைகளை ஒருவருக்கொருவர் பேசி தீர்த்துக் கொள்ள வேண்டும். குழந்தைக்காக அவர்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும்’ என்றார். நிகழ்ச்சியின் இறுதியாக யாஷிகாவும், ஐஸ்வர்யாவும் பாலாஜியுடன் இணைந்து சொப்பண சுந்தரி பாடலுக்கு குத்தாட்டம் போட்டனர். 

ஆண்கள், பெண்களுக்கும் இரண்டு அணிகளாக பிரிந்து விளையாடிய டாஸ்க் இந்த வாரத்துடன் முடிந்தது. இரி அணிகளும் அடுத்து ஒற்றுமையுடன் இருப்பார்களா? என்பது ஒரு புறமிருக்கட்டும். இந்த நிகழ்ச்சியின் முதல் பாகத்தை விட இரண்டாம் பாகம்  கொச்சையாக இருப்பதாக குரல்கள் எழுந்து வருகின்றன.  கெட்டவார்த்தைகளை போட்டியாளர்கள் பேசுவது, ஆபாசமாக உடையணிவது என்பதையும் கடந்து , ஒரு இளம்பெண்ணை பாத்ரூமுக்குள் அழைப்பது என்றெல்லாம் காட்டுவது குடும்பத்துடன் பிக்பாஸ் பார்ப்பவர்களை முகம் சுளிக்க, உடல் நெளிய, மனம் கனக்க செய்கின்றன எனப் புலம்புகிறார்கள் பார்வையாளர்கள். 

அரசியலில் மாஸாய் உருவெடுத்து மற்றவர்களுக்கு வழிகாட்டியாய் வலம்வர விரும்பும் கமல், தான் தொகுப்பாளராய் உள்ள பிக்பாஸ் போட்டியாளர்களை ஒழுங்காக வழிநடத்த வேண்டும் என்பதே தற்போது மக்களின் அதிகபட்ச விருப்பமாக இருக்கிறது.    
 

Advertisement:
[X] Close