மகத்தான வெற்றி பெற்ற மோசமான படங்கள்

  பால கணேசன்   | Last Modified : 10 Jul, 2018 06:21 pm

highest-grossing-worst-movies-in-tamil-cinema

சில படங்கள் எதற்காக ஓடுகின்றன என்பதே நமக்குத் தெரியாது. ஆனால் வருட இறுதியில் பார்த்தால் அந்த படம்தான் அந்த வருடம் வெளிவந்த எல்லா படத்தையும் பின்னால் தள்ளிவிட்டு வசூலில் முதன்மையாக நின்றுகொண்டிருக்கும். இன்னும் சொல்லப்போனால் அந்தப் படத்தைப் போன்றே அடுத்து வரிசையாக பல படங்கள் வெளிவர முக்கிய காரணமாகவும் இருக்கும். ஆனால், படத்தின் உள்ளடக்கத்திலும் சரி, மற்ற அம்சங்களிலும் சரி எந்தவித புதுமையோ அல்லது நன்மையோ இருக்காது. அப்படிப்பட்ட தமிழ்ப் படங்களை பற்றிய ஒரு சிறு பார்வை.

இதயக்கனி

எம்.ஜி.ஆர் 1970-களில் தனது கலைப் பயணத்தின் உச்சத்தில் இருந்தார். தேர்தலில் அமோக வெற்றி பெற்று, முதலமைச்சராக பொறுப்பேற்பதற்கு முந்தைய நாள் இரவு வரை ஷூட்டிங்கில் இருந்தார். 'உலகம் சுற்றும் வாலிபன்', 'நேற்று இன்று நாளை', 'உரிமைக்குரல்' போன்ற பல வெற்றிப் படங்களை கொடுத்துக் கொண்டிருந்த காலகட்டம் அது. ஒரு மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் கையில் இருந்த நேரத்தில் 1975-ல் வெளிவந்த படம்தான் 'இதயக்கனி'. 

முழுக்க முழுக்க எம்.ஜி.ஆர் பற்றிய தனிமனித துதி பாடும் இந்தப் படம்தான் இன்றைய முன்னணி நடிகர்கள் பலரின் மசாலா படத்திற்கு ஊற்றுக்கண். எப்படி என்றால் ஆரம்பத்தில் ஒரு பாடல் காட்சி. கதாநாயகன் அறிமுகம். ஒரு ஊரே கதாநாயகனின் அருமை பெருமைகளை பாடுகிறது. அவர்களோடு சேர்ந்து கதாநாயகனும் தான் மக்களுக்காக எனது உயிரையும் கொடுப்பேன் என்று சூளுரைக்கிறார். 

பின்னர் கதாநாயகன் தனது காரில் சென்று கொண்டிருக்கும்பொழுது ஒரு பெண்ணை சிலர் வன்புணர்வு செய்ய முயற்சிப்பதை காண்கிறார். அந்தப் பெண்ணை கயவர்களிடமிருந்து சண்டையிட்டு காப்பாற்றுகிறார். உடனே அந்த பெண்ணுக்கு கதாநாயகன் மீது காதல் பிறக்கிறது. கதாநாயகியுடனான எல்லா பாடல் காட்சிகளிலும் நாயகியை புரட்டி எடுக்கிறார் நாயகன் (இதைத்தானடா நாங்களும் பண்ண ட்ரை பண்ணுனோம்? எங்களை அடிச்சி துரத்திட்டு நீ பண்ற? இது உனக்கே நியாயமா? - கயவர்கள் மைண்ட் வாய்ஸ்.). அதன்பின் ஒரு அதிரடி திருப்பம். கடைசியில் சில பல சண்டைக்காட்சிகளுக்கு பிறகு சுபம். 

இதுபோன்ற கதை கட்டமைப்பை எத்தனையோ படங்களில் நீங்கள் பார்த்திருக்கலாம். ஆனால் இந்தப் படம் அடைந்த வெற்றிக்கு முன்னால் மற்ற படங்கள் எல்லாம் தூசு. அந்த வருடத்தின் அதிக நாட்கள் ஓடிய படம், அதிகம் வசூல் செய்த படம் இதுதான். என்னதான் எம்.ஜி.ஆர் என்கிற பெரிய சக்தி திரையில் இருந்தாலும் கூட கதை, திரைக்கதை என புதிதாக எந்தவித விஷயமும் இல்லாத இந்தப் படம் இவ்வளவு பெரிய மெகா வெற்றி அடைந்தது என்பது சற்று வருத்தமளிக்கும் விஷயமே. இன்றும் எம்.ஜி.ஆர் ரசிகர்களால் இதயக்கனி கொண்டாடப்படுகிறது. எம்.ஜி.ஆருக்கு இதயக்கனி என்று சிறப்பு பெயரும் இந்த படத்தில் இருந்து கிடைத்தது. நீங்க நல்லா இருக்கோணும் என்ற பாடல் இன்றுவரை அ.தி.மு.க மேடைகளில் ஒலித்துக்கொண்டே இருக்கிறது.

நினைத்தாலே இனிக்கும்

கே.பாலச்சந்தர் ஓர் அற்புதமான படைப்பாளி. யாரும் யோசிக்கவே தயங்கும் பல விஷயங்களை திரையில் மிகவும் எளிதாக படம்பிடித்து காட்டிய மேதை. அவரது சிறப்பம்சமே பலமான கதைதான் (பலான கதைகள் இல்லை. பலமான கதைகள்). என்னதான் உறவுகளுக்கு இடையே இருக்கும் சிக்கல்களை மிக அதிகமாக கையாண்டிருந்தாலும் கூட ஏதேனும் ஒருவகையில் அந்தப் படங்கள் எல்லாம் ஒன்றுடன் ஒன்று மாறுபட்டே இருக்கும். 

மசாலா அம்சங்களை விட மற்ற தேவையான விஷயங்களை நம்பி 100 படங்கள் வரை எடுத்த சிலரில் மிக முக்கியமானவர். அப்படிப்பட்ட பாலச்சந்தர் எடுத்து மிகப்பெரிய வெற்றியை கண்ட 1979-ல் வெளிவந்த 'நினைத்தாலே இனிக்கும்' படம் எப்படி இவ்வளவு பெரிய வெற்றியை பெற்றது என்பது எனக்கு இதுவரை புரியவே இல்லை. காரணம், நீங்கள் நன்றாக நோக்கினால் இந்தப் படத்தில் கதை மற்றும் திரைக்கதையை நம்பியதை விட சிங்கப்பூரை மிக அதிகமாக பாலச்சந்தர் நம்பியிருப்பார். அதற்கு உதாரணமாக கமல், ரஜினி, ஜெயப்ரதா போன்ற முக்கியமான நடிகர்களை விட சிங்கப்பூரின் அழகே மிக அதிக அளவில் படத்தில் காண்பிக்கப்பட்டிருக்கும்.

அதேபோல் மற்ற எந்த பாலச்சந்தரின் படத்திலும் நான் காணாத வகையில் படத்தின் மையக்கருவிற்குள் படம் நுழையவே இடைவேளை வரைக்கும் தேவைப்படும். அதுவரை வெறும் பாடல்களால் மட்டுமே படம் நிரப்பப்பட்டிருக்கும். அதிலும் பெரும்பாலான பாடல்கள் முழுக்க சிங்கப்பூரை ஓசியில் சுற்றிக் காண்பிப்பதாக மட்டுமே இருக்கும். இதற்கு இடையில் கமல்ஹாசனின் இசைக்குழுவில் இருப்பவர்களின் காமெடி. 

ரஜினிக்கு தனி காதல் கதை. அதற்கும் படத்திற்கும் யாதொரு சம்பந்தமும் இருக்காது. எம்.எஸ்.விஸ்வநாதனின் இசையில் பாடல்கள் எல்லாமே நன்றாக இருக்கும். அதுபோக இணைய பயன்பாடு இல்லாத காலகட்டம் ஆதலால் சிங்கப்பூரின் அழகில் மக்கள் மதிமயங்க, படம் நன்றாக ஓடியது. இப்போது இந்தப் படத்தை பார்த்தால் இதுவா ஓடியது என்கிற என்கிற எண்ணம்தான் மிஞ்சுகிறது. பாலச்சந்தரின் உயரத்திற்கு இந்தப் படம் ஒன்றுமே இல்லை என்பதே உண்மை.

 

சகலகலாவல்லவன் 

கமல்ஹாசனின் ஆரம்ப கால படங்கள் பெரும்பாலும் இயக்குனர்களின் படங்களாகத்தான் இருந்திருக்கின்றன. அப்படித்தான் ஒரு பெரிய கதாநாயகனாக கமல் உருவெடுத்தார். 'பதினாறு வயதினிலே', 'சிவப்பு ரோஜாக்கள்' போன்ற படங்களில் எல்லாம் மிக வித்தியாசமான கமலை பார்க்கலாம். அந்தப் படங்களும் மிகப்பெரிய வெற்றியை பெற்றன. ஆயினும் மாஸ் ஹீரோ என்னும் அந்தஸ்தை கமல் எட்டிப்பிடிக்க முழுமுதற் காரணமாக இருந்தது 1982-ல் வெளிவந்த 'சகலகலாவல்லவன்'தான். 

எஸ்.பி.முத்துராமனின் இயக்கத்தில் வெளிவந்த இந்தப் படம் அதுவரை இருந்த பல சாதனைகளை தகர்த்தெறிந்தது. ஆனால் உன்னிப்பாக கவனித்தால் இந்தப் படம் அதற்குப் பின் தமிழில் வந்த ஏகப்பட்ட குப்பைப் படங்களுக்கு முன்னோடியாகவும் இருக்கிறது. ஓர் அப்பாவி கிராமத்தான். அவனை ஏமாற்றும், அவன் தங்கை வாழ்வை நாசமாக்கும் ஒரு பணக்கார குடும்பம். அவர்களை பழிவாங்கும் கதாநாயகன். இதுதான் கதை. இதற்கு நடுவில் ஏகப்பட்ட கரம் மசாலா. குறிப்பாக சில்க் ஸ்மிதாவை மிக சரியாக பயன்படுத்தி மிகப்பெரிய வெற்றிகண்ட முதல் படம் இது என்று கூட சொல்லலாம். 

இந்தப் படத்திற்கு பின் சில்க் ஸ்மிதா இல்லாத தமிழ் படமே இல்ல என்கிற அளவிற்கு அவருக்கு மவுசு ஏற்பட்டது. மேலும் தமிழில் முதன்முறையாக ஒரு கோடி ரூபாய் வசூல் செய்த படம் என்றும் இதைக் கூறுகிறார்கள். படம் முழுக்க லாஜிக் மீறல்களும், அபத்தமான காட்சிகளும் நிறைந்து வழியும். குறிப்பாக பெண்களை கேலி செய்வதும், இரட்டை அர்த்தத்தில் பாடல்கள் பாடுவதும், கற்புதான் பெண்ணுக்கு ஆபரணம், கற்பழித்தவனையே திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று வசனம் பேசுவதுமாக முழுக்க முழுக்க பிற்போக்குத்தனங்களை பேசும் இந்தப் படம் இவ்வளவு பெரிய வெற்றியை அடைந்தது இன்று யோசித்து பார்த்தால் ஆச்சரியமே! 

அதைவிட ஆச்சரியம் கமல்ஹாசன் மாதிரி ஒரு சிந்தனையாளர் (இது நாஞ்சொல்லல.. அப்படித்தான் ஊருக்குள்ள பேசிக்கிறாங்க..) இப்படி ஒரு பத்தாம்பசலி மசாலா படத்தில் நடிக்க எப்படி ஒப்புக்கொண்டார் என்பதே!

சின்னத்தம்பி

பி.வாசு, பிரபு, குஷ்பு ஆகிய மூவரின் சினிமா பயணத்திலும் மிகப் பெரிய மைல்கல் என்று 'சின்னத்தம்பி' படத்தை சொன்னால் அது மிகையில்லை. 9 திரையரங்கில் 356 நாட்களும், 47 திரையரங்குகளில் 100 நாட்களும் ஓடி மெகா வெற்றி பெற்ற இந்தப் படம் முழுக்க அபத்தங்கள் மட்டுமே நிறைந்திருக்கும். இளையராஜாவின் இசை தூண் போல தாங்கி நிற்க, கவுண்டமணியின் நகைச்சுவை பகுதி வயிறு குலுங்க சிரிக்க வைக்க படம் அதிரி புதிரியாய் ஓடியது. 

ஆனால் படத்தின் கதையும் சரி, திரைக்கதை வடிவமைப்பும் சரி சிறுபிள்ளைத்தனமாக இருந்ததை நாம் இங்கே கவனிக்க வேண்டும். திருமணம் என்றால் என்னவென்றே தெரியாத ஒருவன் என்கிற ஒற்றை வரியும், தாலி சென்டிமென்டும், அம்மா சென்டிமென்டும், விதவை சென்டிமென்டும் ஆகக் கூடி சென்டிமென்டுகளின் லீலையே இந்த 'சின்னத்தம்பி' திரைப்படம். அதிலும் குறிப்பாக இறுதிக்காட்சியில் மனோரமாவின் வெள்ளைப் புடவையில் வண்ண சாயங்களை வீசுவதும், அதனால் விதவையான மனோரமாவின் மானத்திற்கு பங்கம் வருவதும், அதைக்கண்டு மகன் பிரபு பொங்கி எழுந்து கயவர்களை பந்தாடுவதும்... எம்மம்மா.. இப்படி ஒரு பிற்போக்குத்தனமான காட்சியை பார்த்து மக்கள் உச் கொட்டி ரசித்து, படத்தையும் மிகப்பெரிய ஹிட்டாக்கி... முடியல!! 

இதைவிட கொடுமை அந்த வருடத்திற்கான தமிழக அரசு விருதுகள் விழாவில் 7 விருதுகளை இந்தப் படம் வென்றது. அதில் சிறந்த படத்திற்கான முதல் பரிசும் ஒன்று. இந்த மாதிரியான படங்கள் வசூல் ரீதியாக வெற்றி பெறுவதைக் கூட பொறுத்துக் கொள்ளலாம். ஆனால் வல்லுனர்கள் நிரம்பிய அல்லது வல்லுநர்கள் என்று கூறப்படும் மனிதர்கள் நிரம்பிய நடுவர்கள் கூட்டம் எந்த அடிப்படையில் இந்த படத்தை எல்லாம் சிறந்த படம் என்று தேர்ந்தெடுக்கிறார்கள் என்பதுதான் புரியவில்லை.

ஏனெனில் அதே வருடம்தான் அழகன், இதயம், குணா, தளபதி போன்ற அற்புதமான படங்கள் வெளியாகி இருந்தன. அவற்றை எல்லாம் ஒதுக்கிவிட்டு 'சின்னத்தம்பி' விருது வென்றதை எந்தக் கணக்கில் சேர்க்க?

கரகாட்டக்காரன்

சில படங்கள் ஏன் ஓடுகிறது? எதற்காக ஓடுகிறது? என்ன காரணம்? என்று எவ்வளவு யோசித்தாலும் அதற்கான விடையே கிடைக்காது. நன்கு யோசித்தால் ஒரே ஒரு காரணம் பிடிபடும். அது... "படம் நல்ல ஜாலியா... கொஞ்சம் கூட போரடிக்காம போச்சி..." என்பது மட்டுமே காரணமாக தொக்கி நிற்கும். இதற்கு மிகச் சிறந்த உதாரணம் 'கரகாட்டக்காரன்'.

1989-ல் வெளிவந்து ஒரு வருடத்திற்கும் அதிகமாக மதுரை நாட்டியா திரையரங்கில் ஓடிய இந்தப் படம் க்ளாஸிக் படமான 'தில்லானா மோகனாம்பாள்' படத்தின் தழுவல் என்றே சொல்லலாம். 'கரகாட்டக்காரன்' படப்பிடிப்பு எல்லாம் முடிந்து வெளியீட்டுக்காக விநியோகஸ்தர்களுக்கு சிறப்புக் காட்சி போட்டு காண்பிக்கப்பட்டது. யாருக்குமே படம் பிடிக்கவில்லை. யாரும் வாங்கவும் தயாராக இல்லை. அப்படி வாங்கவே ஆளில்லாமல் தவித்த ஒரு படம் அடைந்த இந்த மெகா வெற்றி இன்றளவும் ஓர் அதிசயமே. 

இந்தப் படத்தின் பாடல்கள் அனைத்தும் தேன்சுவை. ஆனால் படத்திற்கு பாடல் ஒலிப்பதிவு செய்யும் முடிக்கும்வரை இசைஞானி இளையராஜாவிற்கு படத்தின் கதையே தெரியாது. வெறும் சிச்சுவேஷன் மட்டும் சொல்லி பாடல்கள் இசையமைக்கப்பட்டு, எழுதப்பட்டு ஒலிப்பதிவு செய்யப்பட்டன. கவுண்டமணி - செந்தில் இணைந்து நகைச்சுவை செய்த 100-வது படம் என்கிற பெருமையும் இதற்கு உண்டு. படத்தின் எல்லா நகைச்சுவை காட்சிகளும் வீரப்பன் அவர்களால் எழுதப்பட்டது. அதில் வாழைப்பழ நகைச்சுவை பெரும்புகழ் பெற்றது. 

இப்படி இந்த படத்திற்கென்று தனிப்பட்ட சிறப்புகள் பலவும் இருந்தாலும் கூட உண்மையில் படத்தின் கதை மிகவும் சாதாரணமானது. திரைக்கதையோ அரதப்பழசு. நாயகன் ராமராஜன், அறிமுக நாயகி கனகா காதல் காட்சிகளில் புதுமையோ சிறப்போ எதுவுமே கிடையாது. இந்தப் படத்தை பார்த்துவிட்டு கரகாட்டக் கலைஞர் சோமசுந்தரம் ஒரு விமர்சனத்தில் "கரகாட்டக் கலைக்கே இழுக்கை சேர்க்கிறது இந்தப் படம்" என்று விமர்சித்திருந்தார். பலராலும் இன்றும் நினைவுகூரப்படும் ஒரு மொக்கை படமாகவே கரகாட்டக்காரனைச் சொல்லலாம். இதுவே தில்லானா மோகனாம்பாள் படத்தின் தழுவல்... இந்தப் படத்தைத் தழுவியும் ஒரு படம் வந்திருக்கிறது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையில், நடிகர் ரகுமான் - விந்தியா நடிப்பில் வெளியான சங்கமம் இந்த படத்தின் அப்பட்டமான தழுவல் என்றே சொல்லலாம். ஆனால், சுரேஷ் கிருஷ்ணா, ஏ.ஆர்.ரஹ்மான் என்று ஜாம்பவன்கள் இருந்தும் சங்கமம் சுமாராகவே போனது.

ரசிகன்

விஜய்க்கு 'இளைய தளபதி' என்கிற பட்டத்தோடு டைட்டிலில் பெயரை வந்த முதல் படம் 'ரசிகன்'. 'பைரவா' வரை இந்தப் பட்டமே தொடர்ந்தது. ரசிகனில் ஆரம்பித்து 'பைரவா' வரைக்கும் ஏகப்பட்ட மொக்கை படங்களை விஜய் கொடுத்திருந்தாலும் 'ரசிகன்' படத்திற்கென்று சில சிறப்பம்சங்கள் உண்டு. அதனாலேயே அது இந்தப் பட்டியலில் இடம்பெறுகிறது. 

பாலியல் உணர்வுகளைத் தூண்டக்கூடிய காட்சிகளை கொண்ட எத்தனையோ படங்கள் தமிழில் வெளிவந்திருக்கின்றன. அதில் வரம்பு மீறும் காட்சிகள் என்று ஒரு பட்டியல் தனியாக தயாரித்தால் அதில் ரசிகனின் வரும் சோப்பு போடும் காட்சி சந்தேகமேயில்லாமல் முதலிடத்தை பெறும். அப்படிப்பட்ட கேவலமான ஆபாசக் காட்சி அது. என்னதான் படத்திற்கு 'ஏ' சான்றிதழ் வழங்கப்பட்டிருந்தாலும் கூட  தமிழகத்தில் திரையரங்கில் வெளியாகும் படங்களுக்கு என்ன சான்றிதழ் என்றெல்லாம் பார்த்து மக்கள் செல்வதில்லை.

திரையரங்கில் பெரிய கட்டுப்பாடுகள் எதுவும் இருப்பதில்லை என்பதாலும் இந்த மாதிரியான காமக் கொடூர படங்கள் இலைமறைக்காயாக உணர்வுகளை தூண்டி ஏற்கனவே பாலியல் வறட்சியில் இருக்கும் ஒரு சமூகத்தை இன்னும் படுகுழிக்குள் தள்ளும் வேலையைத்தான் செய்கின்றன.

'ரசிகன்' படத்தின் ஒன்றிரெண்டு கதாபாத்திரங்கள் இப்படி இருந்தால் பரவாயில்லை. எல்லா கதாபாத்திரங்களின் எண்ணங்களும் செக்ஸை நோக்கியே இருந்தால் கேவலம் இல்லையா? அதையும் ஓர் அழகியலோடு சொல்லியிருந்தால் எதற்கு காலங்கடந்த பின்னர் அதை திட்டப்போகிறோம்? ஆங்.. சொல்ல மறந்துவிட்டேனே.. நடிகர் விஜய் தனது சொந்தக் குரலில் பாடிய முதல் பாட்டு இடம்பெற்றதும் இந்தப் படத்தில்தான். ஆகா! என்னவொரு பெருமை!!

நாட்டாமை

1994-ல் வெளிவந்து அதிரிபுதிரியாய் ஓடி அனைவரையும் ஆச்சரியப்பட வைத்த அழகு காவியமே 'நாட்டாமை'. கே.எஸ். ரவிக்குமார் என்னும் இயக்குனர் தன் கேரியரின் உச்சத்திற்கு செல்ல வழிவகுத்த படம் இது. சரத்குமாருக்கு பட்டிதொட்டி எல்லாம் ரசிகர் மன்றங்களும், ரசிகர்களும் முளைக்க காரணமான படமும் இதுவே. 

இந்தப் படத்தின் மீது ஈர்ப்பு ஏற்பட்டு, குறிப்பாக பிளாஷ்பேக் காட்சிகளின் மீது காதல் வயப்பட்டு ரஜினிகாந்த் தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மூன்று மொழிகளிலும் தமிழில் விஜயகுமார் நடித்த வேடத்தை செய்தார் என்றால் இந்தப் படம் எந்தவகையான வெற்றியை பெற்றிருக்கும் என்பதை நினைத்துப் பாருங்கள். அந்த வருடத்தின் சிறந்த படத்திற்கான தமிழக அரசின் விருது, பிலிம்பேர் விருது என எல்லாவற்றையும் தட்டிச் சென்ற இந்தப் படம்.

உண்மையில் வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல் யாருக்கும் தெரியாமல் சாதியை தூக்கிவைத்து கொண்டாடிய படம். குறிப்பாக கவுண்டர் சமூகத்தைத் தூக்கிப் பிடித்த இந்தப் படம் பெண்களையும் இழிவுபடுத்த தவறவில்லை. "ஒரு ஆம்பளை பத்து பொம்பளையோட படுத்தாலும் அவன் ஆம்பளைதான்... இதுவே ஒரு பொம்பளை பத்து ஆம்பளையோட படுத்தா அதுக்கு பேரே வேற.." போன்ற வசனங்களுக்கு எல்லாம் தியேட்டரில் விசில் சத்தம் காதை பிளந்தது. படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு முக்கிய காரணம் வில்லனாக நடித்த பொன்னம்பலத்தின் கதாபாத்திரம்தான். வழக்கமான மசாலா படத்தில் ஒரு சக்திவாய்ந்த வில்லன் அமைந்துவிட்டால் படம் இயல்பாகவே சுவாரஸ்யமானதாக மாறிவிடும். அது இதில் நடந்தது. 

அதேபோல் படத்தின் பாடல்கள் ஏ,பி,சி என மூன்று சென்டர்களிலும் பெருத்த வரவேற்பை பெற்றது. படத்தின் வெற்றிக்கு இன்னொரு மிகப்பெரிய காரணம் கவுண்டமணி - செந்தில் நகைச்சுவை காட்சிகள். இன்றளவும் பெரிதாக சமூகவலைத்தளங்களில் நினைவுகூரப்படும் மிக்ஸர் தின்னும் காட்சி உண்மையில் யாரை அசிங்கப்படுத்தியது என்பதே தெரியாமல் ரசித்து சிரித்துக் கொண்டிருக்கிறோம். கிராமத்து பின்னணியில் ஒரு பெரிய மனிதரின் கதை என்னும் போர்வையில் வரிசையாக குறிப்பிட்ட சாதியைத் தூக்கிப்பிடிக்கும் படங்கள் வர ஆதி காரணமே இந்தப்படம்தான் என்று சொன்னால் அது மிகையில்லை.

திருடா திருடி

'காதல் கொண்டேன்' படத்தின் எதிர்பாராத மிகப் பெரிய வெற்றி தனுஷை ஒரே நாளில் மிகப்பெரிய கதாநாயகனாக்கியது. அவரது அடுத்த படத்திற்கான எதிர்பார்ப்பு எகிறியது. 2003-ல் சுப்ரமணிய சிவா இயக்கத்தில் 'திருடா திருடி' வெளிவந்தது. காதல் கொண்டேனை விட மிகப் பெரிய வெற்றி பெற்ற இந்தப் படம் எப்படி இவ்வளவு பெரிய வெற்றியை அடைந்தது என்று சற்று யோசித்துப் பார்த்தால் நம்மை நாமே காறி துப்பும் அளவிற்குத்தான் காரணங்கள் இருக்கின்றன. 

படத்தின் மிகப்பெரிய பலம் தனுஷின் உருவம். ஒல்லியான, மாநிறமான ஒரு பக்கத்துவீட்டு பையன் போன்ற அவரின் தோற்றம் ரசிகர்களை எளிதில் அவரது கதாபாத்திரத்தோடு ஒன்ற துணை செய்தது. மேலும் அவர் வீட்டில் செய்யும் சேட்டைகள், குறும்புகள் எல்லாம் தங்களையே பிரதிபலிப்பதாக ரசிகர்கள் நம்பினர். ஆனால் இதுமட்டுமே இந்த படத்தின் வெற்றிக்கு காரணமாக இருந்திருந்தால் இங்கே இதை குறிப்பிட அவசியமே இருக்காது. இதற்கும் மேலே படத்தில் எதுவுமே இல்லை. 

இரண்டு ஐட்டம் சாங்ஸ் எனப்படும் கவர்ச்சி நடனங்கள், இறுதிக் காட்சிக்கு முந்தி வரும் 'மன்மத ராசா' பாடல், காலின் பெருவிரலை விட அதன் அருகில் இருக்கும் விரல் பெரியதாக இருந்தால் கில்மா மேட்டரில் கைதேர்ந்தவர்கள் என்பது போன்ற ஒரு மொக்கை காட்சி, கதாநாயகனும், கதாநாயகியும் தொடர்ந்து ஒருவருக்கொருவர் ஈகோவின் காரணமாக சண்டையிடுதல்... இவ்வளவுதான் மொத்தப் படமும். 

மிகவும் மலிதான நகைச்சுவை காட்சிகள், கதாநாயகியை ஈவ் டீசிங் செய்யும் நாயகன் என மசாலா என்கிற பெயரில் அபத்தத்தை திணித்த இந்தப் படத்தை பார்த்த 'காதல் கொண்டேன் இயக்குனர்' செல்வராகவன், இயக்குனர் சுப்ரமணிய சிவாவின் மீது கோபப்பட்டதாக கூட ஒரு செய்தி உண்டு.

சந்திரமுகி

'பாபா' படத்தின் தோல்வி ரஜினியே எதிர்பாராதது. விநியோகஸ்தர்களுக்கு பணத்தை திருப்பி தரவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. பின்னர் ஒரு மேடையில் பேசிய ரஜினிகாந்த், "நான் யானை இல்ல... குதிரை. விழுந்தா டக்குனு எந்திரிச்சிருவேன்.." என்றார். அப்படி எழுந்த படம்தான் 'சந்திரமுகி'. 'மணிச்சித்ரதாழ்' என்கிற மோகன்லால், சுரேஷ் கோபி நடித்த மலையாளப்படத்தின் ரீமேக்கான இந்தப் படத்தை பி.வாசு இயக்கினார். 

ஏற்கெனவே கன்னடத்தில் 'ஆப்தமித்ரா' என்கிற பெயரில் விஷ்ணுவர்தனை வைத்து இயக்கி மிகப் பெரிய வெற்றிகண்ட பி.வாசு, தமிழில் ரஜினியை வைத்து இயக்கி அதைவிட மிகப் பெரிய பிரமாண்டமான வெற்றியை பெற்றார். ஆனால் இந்தப் படத்திற்க்கும் இதன் ஒரிஜினலான மணிசித்ரதாழுக்கும் ஏணி வைத்தாலும் எட்டாது. அதேபோல் தமிழில் அபத்தங்களுக்கும் பஞ்சமில்லை. 

முதலில் படத்தில் விரவியிருக்கும் இரட்டை அர்த்த காமெடி. வடிவேலுவின் மனைவிக்கும் ரஜினிக்குமான காட்சிகள் எல்லாம் அந்த ரகமே! அடுத்து ரஜினி படம் என்றாலே ஒரு திமிர் பிடித்த பெண் இருப்பார். 'மாப்பிள்ளை' படத்தில் ஆரம்பித்த இந்த விஷயம் பின்னர் 'மன்னன்', 'படையப்பா' என பெரிய அளவில் தொடர்ந்தது. இன்னொரு முக்கியமான விஷயம் படத்தில் ஜோதிகாவுக்கு இருப்பது ஒரு நோய். அவருக்கு பேய் பிடிக்கவில்லை என்பதை தெளிவாக சொல்லியிருக்கவே மாட்டார்கள். மந்திரவாதி, டாக்டர் என்று ஒரு குழப்பு குழப்பியிருப்பார்கள்.

அதேபோல் சம்பந்தமே இல்லாமல் ஒரு பெரிய பாம்பு படத்தில் தோன்றும். வெறும் அதிர்ச்சி மதிப்பீட்டுக்காக மட்டுமே அந்த பாம்பு இருக்குமே அன்றி வேறெந்த நன்மையும் அதனால் இல்லை. ஏகப்பட்ட லாஜிக் மீறல்களும் கொண்ட இந்தப் படம் இவ்வளவு பெரிய வெற்றியை பெறும் என்று நான் நினைத்தும் பார்க்கவில்லை. குறிப்பாக இந்தப் படத்தின் காமெடிக் காட்சிகள் மிகவும் புகழ்பெற்றன. மக்களை முட்டாளாக்கி அடைந்த ஒரு வெற்றிப் படம் என்று தாராளமாக இதைச் சொல்லலாம்.

சுந்தரபாண்டியன்

இயக்குநர் சசிக்குமார் நடிகராக மாறிய பின்னர் தொடர்ந்து நட்பின் பெருமைகளை பேசும் படங்களில் நடித்தார். அப்படி நட்பின் பெருமையை பேசுகிறேன் பேர்வழி என்று ஆதிக்க சாதிப்பெருமை பேசிய ஒரு படமே 'சுந்தரபாண்டியன்'. படத்தின் ஆரம்ப காட்சியிலேயே தென்தமிழக ஆதிக்க சமூகம் ஒன்றின் பெருமையை பேசும் வசனங்கள் இடம்பெற்றுவிடும். அதன்பின் நாயகனும், நாயகனும் சந்திப்பது, இருவரும் ஒரே சாதியாக இருப்பது, பின்னர் சில பல சாதிப்பெருமை வசனத்திற்கு பிறகு திருமணம் நிச்சயமாதல், பின்னர் நண்பர்களுக்குள் ஏற்படும் பகையும், அதன் பின் அதனால் நிகழும் சண்டையும் இறுதியில் சுபமும். 

சாதாரணமாக பார்த்தால் இந்தப் படம் ஒரு சுவாராசியமான கதைக்களத்தையும், திரைக்கதையையும் கொண்ட வெற்றிப் படம் என்கிற தோற்றத்தைதான் கொடுக்கும். ஆழ்ந்து நோக்கினால் படம் முழுக்க கதாநாயகன் மூலம் தொடர்ந்து வெளிப்படுத்தப்படும் சாதிப் பெருமையும், ஒரு தாழ்த்தப்பட்ட சாதி இளைஞன் நாயகியை காதலிக்க, அதனால் ஏற்படும் பிரச்சினைகளும், அந்த பிரச்சினையில் ஆதிக்கசாதி பெருமை பேசும் நாயகனே வெல்வதும் இப்படி சமூகத்தில் மக்கள் மனதில் ஏற்கெனவே புரையோடிப்போயுள்ள ஒரு அழுக்கை கொம்புசீவி விட்டே இந்தப் படம் ஜெயித்திருப்பது தெளிவாக புரியவரும். 

பெரும்பான்மையான மக்களின் மனதில் பதிந்திருக்கும் சில சமூக ஏற்றத் தாழ்வுகள், பிரிவுகள் இவையனைத்தும் மனதின் ஓரத்தில் எங்கேனும் பதுங்கியிருக்க, 'சுந்தரபாண்டியன்' போன்ற படங்கள் அதை சுரண்டி விட்டு சுகம் காண வைக்கும் படைப்புகளாகத்தான் இங்கே காணக்கில் எடுத்துக்கொள்ளப்பட வேண்டும். 

இப்படியான படங்கள் வெற்றிபெறுவதன் மூலம், அதை வெற்றிபெற வைப்பதன் மூலம் நமக்கே தெரியாமல் ஓர் ஆதிக்க சாதியின் அடிமையாக நாமே மாறிநிற்கும் அவலமும் கூட உண்டு இதில். இந்த மெல்லிய புரிதல் நமக்கு இருந்தாலே இங்கே சாதி புகழ் பாடும் படங்கள் காணாமல் போய்விடும்.

ஆதவன்

மறுபடியும் ஒரு கே.எஸ்.ரவிக்குமார் படம். ஆனால் இந்த முறை கொஞ்சம் பெரிய அளவில், நல்ல பொருட்செலவில் எடுக்கப்பட்ட ஒரு குப்பை படமே ஆதவன். நடிகர் சூர்யா தொடர்ந்து ஹிட்டுகள் கொடுத்துக்கொண்டிருந்த காலகட்டம். உதயநிதி ஸ்டாலின் தனது ரெட் ஜெயன்ட் நிறுவன சார்பில் எடுத்த படமே ஆதவன். வடிவேலு என்னும் மகா கலைஞன் மட்டும் இல்லாவிட்டால் படம் ஆரம்பித்த பத்தே நிமிடத்தில் தியேட்டரை விட்டு ரசிகர்கள் எகிறிக் குதித்து ஓடிவந்திருப்பார்கள். முழுப் படமும் ரசிகர்கள் அமர்ந்து பார்க்க முழுமுதற் காரணம் வடிவேலு மட்டுமே. 

ஒரு வாடகை கொலைகாரன் ஒரு பெரிய நீதிபதியை கொல்லப் போகும்போது அது அவன் தந்தை என்று தெரியவருகிறது. பின்னர் தந்தையை காப்பாற்ற அவன் செய்யும் செயல்களே படம். வடிவேலு காமெடியை மட்டும் தவிர்த்துவிட்டு பார்த்தால் படத்தில் எந்தவித சுவாரசியமும், எந்தவித புதுமையும் அறவே கிடையாது. 

கதாநாயகனின் அறிமுகக் காட்சி, நாயகியுடனான காதல் காட்சி, தந்தையை கொல்ல அவனே ஒவ்வொருமுறையும் முயற்சி செய்து பின்னர் அதிலிருந்து பின்வாங்க அவன் சொல்லும் காரணம், குறிப்பாக இறுதிக்காட்சியில் நடக்கும் சண்டை என எல்லாமே ஏதோ வேற்று கிரகத்தில் நடப்பது போன்ற ஒரு தோற்றத்தை உண்டாகும் லாஜிக்கே இல்லாத மொக்கையே இந்தப் படம். ஆனால் படம் சூப்பர் ஹிட். 

மசாலா படங்கள் என்பது பொழுதுபோக்கின் ஒரு வடிவம்தான் என்றாலும் இப்படி கதையே இல்லாத, திரைக்கதையில் மயக்குகிறேன் பேர்வழி என்று வெறும் ஊறுகாய் மட்டுமே வாழையிலையில் கொட்டி வைக்கப்பட்ட விருந்தாக மட்டுமே இந்தப் படம் இருந்தது. படத்தின் பாடல்கள் எல்லாம் வெற்றிபெற, பாடல்களுக்காகவும், நகைச்சுவைக்காகவும் மீண்டும் பார்க்க வந்த ரசிகர்களும் அதிகம். ஆயினும் இந்த மாதிரியான படங்களின் வெற்றி ஒரு மோசமான முன்னுதாரணமே அன்றி வேறொன்றும் இல்லை.

ரெமோ

நடிகர் சிவகார்த்திகேயனின் வளர்ச்சி அபாரமானது. தொலைக்காட்சியில் இருந்து திரைக்கு வந்து வெற்றி பெறுதல் அவ்வளவு எளிதல்ல. அதைத் திறம்பட செய்தார் சிவகார்த்திகேயன். அவரின் 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்', 'மான் கராத்தே', 'ரஜினி முருகன்' எல்லாம் நல்ல பொழுதுபோக்குத் திரைப்படங்கள். ஒன்றிரண்டு குறைகள் இருந்தாலும் ஏற்றுக்கொள்ளக் கூடியவை. இந்தப் படங்களின் வெற்றியில் அதீத தன்னம்பிக்கை கொண்டு அவர் நடித்த 'ரெமோ' மிகப் பெரிய வெற்றியை பெற்றது. 

ஆனால், முழுக்க முழுக்க மிகத் தவறான ஒரு முன்னுதாரணத்தை இளைஞர்களுக்கு கற்பித்த இந்தப் படம் வெற்றியடைந்தது என்பது மிகவும் வேதனைக்குரிய ஒரு விஷயம். காதல் புனிதமானது என்றும், ஒரு பெண்ணை காதலிக்க, காதலிக்க வைக்க எந்த தகிடுதத்தம் வேண்டுமானாலும் செய்யலாம் என்றும் திரைக்கதை, பாடல்கள், காட்சிகள், வசனங்கள் என எல்லாவற்றிலும் ஒரு சமூக விரோத படத்தை மொத்த குழுவும் வழங்கியிருக்கும். 

குறிப்பாக ஓர் ஆணை காதலிப்பதா வேண்டாமா என்று முடிவு எடுக்கும் உரிமை ஒரு பெண்ணுக்கு இருக்கிறது. இதில் மாற்றுக்கருத்தே இல்லை. ஏற்கெனவே காதலிக்க மறுத்த பெண்ணின் மேல் ஆசிட் ஊற்றுவது, மன உளைச்சல் கொடுப்பது, சிலர் ஒருபடி மேலே போய் கொலையே செய்வது என இளைஞர்கள் ஒரு மோசமான பாதையை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கையில், ஒரு பிரபலமான நடிகர் படம் முழுக்க அதையே செய்வது மட்டுமில்லாமல் அதை நியாயப்படுத்தவும் செய்வது கண்டிப்பாக கண்டிக்கப்பட வேண்டியது. 

ஆனால் துரதிர்ஷ்டவசமாக இந்தப் படங்களை மக்கள் வெற்றிபெற வைத்து விடுகிறார்கள். இது பெண்கள் மீதான அடக்குமுறையை இன்னும் அதிகரிக்க செய்யுமே அன்றி வேறொன்றும் செய்யாது. அதேபோல் காதல் என்கிற போர்வையில் பெண்களை பின்தொடர்தல், அவர்களின் இயல்பு வாழ்க்கையை பாதிக்கும் வகையில் செயல்படுதல், அந்தப் பெண்ணுக்கு பிடித்தவனை அசிங்கப்படுத்தி அதில் சுகம் காணுதல் போன்ற இழிவான செயல்களும் இந்த மாதிரியான படங்களில் தொடர்ந்து ஊக்குவிக்கப்படுகின்றன. இவை யாவும் வெளியிலிருந்து பார்த்தால் மட்டுமே வேடிக்கை. அனுபவித்து பார்க்கும் மனிதர்களுக்கே தெரியும் அதன் வேதனை.

காஞ்சனா 1&2 

தமிழ் சினிமாவில் திடீரென பலருக்கும் பேய் பிடிக்க ஆரம்பித்தது. இதில் நடன இயக்குனர் ராகவா லாரன்ஸுக்கு பேயோடு சேர்ந்து கொஞ்சம் அதிர்ஷ்டமும் பிடித்துக்கொண்டது. 2007-ல் அவர் இயக்கி நடித்து வெளிவந்த 'முனி' மிகப்பெரிய வெற்றியை அடைந்தது. இந்த வெற்றியில் ருசி கண்ட அவர் 'முனி'யின் இரண்டாம் பாகம் என்கிற பெயரில் 2011-ல் 'காஞ்சனா' என்றொரு படமெடுத்து வெளியிட அதுவும் மெகா ஹிட் ஆனது. 

முனிக்கும் காஞ்சனாவுக்கும் ஆறு வித்தியாசங்களை கண்டுபிடி என யாராவது போட்டி வைத்தால் கண்டிப்பாக அனைவரும் தோற்று ஓடுவது நிச்சயம். அந்தளவிற்கு அ முதல் ஃ வரை எல்லாமே முனியின் அட்டகாப்பிதான். படத்தின் ஒரே ஆறுதல் மூன்றாம் பாலின மனிதர்களின் முன்னேற்றம் பற்றி பேசியதுதான். ஆனால் இதே காஞ்சனாவின் இரண்டாம் பாகத்தில் ஊனமுற்றவர்கள் மேல் பரிதாபம் வரவைப்பதற்க்காக அவர் வைத்த காட்சிகள் மொக்கையாகி போனது. ஆனால் இந்தப் படமும் மிகப் பெரிய வெற்றி பெற்றது. இந்தப் படத்தின் கதையும் முதல் இரண்டு பாகங்களின் நகலே! 

ஓர் அப்பாவி, எல்லாவற்றிற்கும் பயம் கொள்ளும் இளைஞன் மேல் சதிகாரர்களால் அநியாயமாக கொல்லப்பட்ட ஓர் ஆவி வந்து  இறங்குவதும், எதிரியை பழிவாங்குவதுமே மூன்று படங்களின் கதையும். எந்தப் புதுமையும் இல்லாத இந்த பேய் படத்தை பார்த்து பயந்தவர்களை விட சிரித்தவர்களே அதிகம். காமெடி காட்சிகள் கைகொடுக்க படமும் ஹிட்டானது. 

அரண்மனை 1&2 

ரஜினிகாந்த் நடித்த 'சந்திரமுகி' மற்றும் ஆயிரம் ஜென்மங்கள் படத்தின் காப்பியான 'அரண்மனை'யும் 'காஞ்சனா' வகையறாதான். ஒரு பெரிய அரண்மனை வீடு. ஒரு கிராமம். அதில் கயவர்களால் அநியாயமாக கொல்லப்பட்ட ஒரு பெண். அந்தப் பெண் பேயாக வந்து பழிவாங்குவது. அப்படி பழி வாங்குகையில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் நல்லவனை காப்பாற்ற வரும் நண்பன். ஸ்ஸ்ஸ்ஸ்.... அப்பப்பா...!! இந்த கதைக்குள் சில மொக்கை காமெடிகள், க்ளாமர் காட்டும் பெண் கதாபாத்திரங்கள், சில பல சண்டை காட்சிகள், முடிவில் சுபம். போங்கடா டேய்!! 

இந்த இரண்டு பட சீரியஸ்கள் செய்த பெரும் உதவிகளில் ஒன்று பேயின் மீதிருந்த மரியாதையையே கெடுத்தது. அடுத்து பேய் படங்கள் என்றாலே பயந்த பலரையும் திரையரங்குக்குள் வெற்றிகரமாக வரவழைத்து அவர்களை சிரிக்க வைத்து அனுப்பியது. ஆனால் உண்மையில் பிரசினை என்னவென்றால் பேய் படங்கள் என்பது ஓர் அற்புதமான ஜானர். திரையரங்கிற்கு வந்து பயந்து போய் வீட்டிற்கு செல்ல ஒருவன் காசு கொடுக்கிறான் என்பது சினிமா என்கிற விஷயத்திற்கான மரியாதை. ஏனெனில் பேய் என்பது நிரூபிக்கப்படாத ஒன்று. உண்மையில் இல்லாத ஒன்றை காண்பித்து அதற்கு பயப்பட வைத்து ஜெயிப்பது என்பது மிகப்பெரிய திறமை. ஆனால் அதில் காமெடி நுழைத்து, எதற்காக இது உருவாக்கப்பட்டதோ அதற்கான நியாயமே செய்யப்படவில்லை என்றால்... சுத்தம்!

- பாலகணேசன், கட்டுரையாளர், தொடர்புக்கு vinolishan@gmail.com

Advertisement:
[X] Close