தினம் ஒரு திருப்பாவை - திருவெம்பாவை - 9

  பா.பிரவீன் குமார்   | Last Modified : 24 Dec, 2017 12:02 am

திருவெம்பாவை - 9

முன்னைப் பழம்பொருட்கும் முன்னைப் பழம்பொருளே

பின்னைப் புதுமைக்கும் பேர்த்துமப் பெற்றியனே

உன்னைப் பிரானாகப் பெற்றஉன் சீரடியோம்

உன்னடியார் தாள்பணிவோம் ஆங்கவர்க்கே பாங்காவோம்

அன்னவரே எம்கணவ ராவார் அவர்உகந்து

சொன்ன பரிசே தொழும்பாய்ப் பணிசெய்வோம்

இன்ன வகையே எமக்கெங்கோன் நல்குதியேல்

என்ன குறையும் இலோமேலோ ரெம்பாவாய்.

விளக்கம்:

முற்பட்டனவாகிய பழமையான பொருள்களுக்கும் முற்பட்ட பழமையான பொருளே! பிற்பட்டனவாகிய புதிய பொருள் களுக்கும் புதிய பொருளாகி நின்ற அத்தன்மையனே! உன்னை ஆண்டவனாகப் பெற்ற உன் சிறப்பு மிக்க அடிமைகளாகிய யாங்கள் உன் தொண்டர்களின் திருவடிகளை வணங்குவோம்; அங்கே அவர்களுக்கு உரிமை உடையவர்களாவோம்; அவர்களே எங்கள் கணவராவார்கள். அவர்கள் விரும்பிக் கட்டளையிட்ட வண்ணமே, அவர்கட்கு அடிமையாய் நின்று ஏவல் செய்வோம்; எங்கள் பெருமானே! எங்களுக்கு இம்முறையே கிடைக்குமாறு அருள் புரிவாயாயின் எவ்வகையான குறைபாடும் இல்லாதவர்களாய் இருப்போம்.


திருப்பாவை - 9

தூமணி மாடத்து சுற்றும் விளக்கெரிய

தூபம் கமழத் துயிலணை மேல் கண்வளரும்

மாமன் மகளே! மணிக்கதவம் தாள் திறவாய்

மாமீர்! அவளை எழுப்பீரோ? உன்மகள் தான்

ஊமையோ அன்றிச் செவிடோ, அனந்தலோ?

ஏமப்பெருந்துயில் மந்திரப்பட்டாளோ?

மாமாயன் மாதவன் வைகுந்தன் என்றென்று

நாமம் பலவும் நவின்றேலோர் எம்பாவாய். 

பொருள்:

பிரகாசமான நவரத்தினங் களால் கட்டப்பட்ட மாளிகையில், சுற்றிச்சூழ விளக்கெரிய, நறுமணதிரவியம் மணம் வீச, அழகிய பஞ்சுமெத்தையில் உறங்கும் எங்கள் மாமன் மகளே! உன் வீட்டு மணிக்கதவைத் திறப்பாயாக. எங்கள் அன்பு மாமியே! அவளை நீ எழுப்பு. உன் மகளை எத்தனை நேரமாக நாங்கள் கூவி அழைக்கிறோம்! அவள் பதிலே சொல்லவில்லையே! அவள் ஊமையா? செவிடா? சோம்பல் அவளை ஆட்கொண்டு விட்டதா? அல்லது எழ முடியாதபடி ஏதாவது மந்திரத்தில் சிக்கி விட்டாளா? உடனே எழு. எங்களுடன் இணைந்து மாயங்கள் செய்பவன், மாதவத்துக்கு சொந்தக்காரன், வைகுண்டத்துக்கு அதிபதி என்றெல்லாம் அந்த நாராயணனின் திருநாமங்களைச் சொல்.

Advertisement:
[X] Close