சோமவார விரத கதை தெரியுமா?

  கோமதி   | Last Modified : 09 Jul, 2018 09:45 am

do-you-know-the-somavara-fasting-story

சிவபெருமானுக்கு உகந்த நாள் சோமவாரம் என்னும்  திங்கட்கிழமை. ‘சோம’ என்ற சொல்லுக்கு இரண்டு பொருள்கள் உண்டு. பார்வதியுடன் கூடிய சிவபெருமான்,மற்றும்  சந்திரன் என்று பொருள்படும். 

ஒரு முறை சந்திரன் கொடிய நோயால் துன்பப்பட்டான். நோய் குணமாக சிவனை வேண்டி தவம் இருந்த சந்திரன், சிவபெருமானின் அருளால் நோய் நீங்கப் பெற்றதுடன் ,நவக்கிரகங்களில் ஒருவனும் ஆனான்.  அவன் பெயரால் தோன்றியதே சோமவாரம் (திங்கட்கிழமை) 

சந்திரனின் வேண்டுகோளின்படி  அவனது பெயரால் அவனது வாரத்தில்  அதாவது திங்கள்கிழமை அன்று விரதம் இருந்து  சிவபெருமானை வேண்டிக்கொண்ட நாளே சோமவார விரதம் என பெயர் பெற்றது. 

பிரிந்த குடும்பம் ஒன்று சேர விரும்புபவர்கள்,திங்கட்கிழமையன்று பயபக்தியுடன் சாம்ப பரமேசுவரரை நினைத்து இந்த சோமவார விரதத்தை  கடைப்பிடித்து,வந்தால் வெகுதூரத்தில் உள்ளவர்கள் கூட தங்கள் இருப்பிடத்தை நாடி வந்து சேருவர். 

இந்த விரதம் எந்த அளவிற்கு மகத்துவம் வாய்ந்தது என்றால், இதனால் மனைவி, குழந்தைகளை விட்டு பிரிந்து சென்ற கணவன், மனம் மாறி வீடு  வந்து சேருவான். மேலும்  மாங்கல்ய தோஷம், களத்திரதோஷம், நீங்கும் 

சோமவார கதை 

 ஆர்யா வர்த்தா நாட்டை ஆண்ட சித்ரவர்மன் என்ற மன்னனின்  ஒரே மகள் சீமந்தினி. மகள் மீது அளவு கடந்த அன்பு வைத்திருந்த மன்னன் சித்ரவர்மன், சிறந்த ஜோதிடர்களை வரவழைத்து தனது மகளுக்கு ஜாதகம் கணிக்க  உத்தரவிட்டான்.

அந்த ஜோதிடர்களில் ஒருவர் ‘மன்னா! உன்மகள் அழகில் லட்சுமி, கலைகளில் கலைமகள், வீரத்திலும் தீரத்திலும் சிறந்து விளங்குவாள். உலகமே போற்றி புகழும் படி கணவனுடன் பலகாலம் சேர்ந்து வாழ்வாள்’ என்றார்.

ஆனால் இன்னொரு ஜோதிடர் முகம் வாட்டமாக இருந்ததை கவனித்த மன்னன், அவருடைய கருத்தையும் கேட்டார். அதற்கு அவர், ‘மன்னா! நான் சொல்வதற்காக வருத்தப்படக்கூடாது. உங்கள் மகள் திருமணம் ஆன சிலநாட்களில் மாங்கல்ய பாக்கியத்தை இழப்பாள். இது ஜாதக வாக்கு’ என்றார். 

இதைக்கேட்ட மன்னர் எல்லையில்லா வேதனை அடைந்தார். காலம் கடந்தது. மன்னரின் மகள் சீமந்தினி மணப்பருவம் அடைந்தாள். அவளது தோழிகள் மூலம் அவளுடைய ஜாதகத்தில் வர விருக்கும் ஆபத்தைக் அறிந்தாள்.

மன தைரியத்தை விடாமல் ,மாமுனிவராகிய யாக்ஞவல்கிய முனிவரின் மனைவி, யானமைத்ரேயியை அடைந்து அவளை வணங்கி மனக்கவலையை தெரிவித்தாள். 

சிறந்த பதிவிரதையான மைத்ரேயி சீமந்தினியிடம், ‘அம்மா! கவலைப்படாதே! சோமவார விரதத்தை கடைப்பிடி. மலைபோல் துன்பம் வந்தாலும், பனிபோல விலகும்’ எனக்கூறி உபதேசம் செய்தாள். 

சீமந்தினியும் முறையாகச் சோமவார விரதத்தை கடைப்பிடித்தாள். அதன் பயனாக சீமந்தினிக்கு நளன் பேரனும், இந்திரசேனன் மகனுமான சந்திராங்கதனுடன் திருமணம் நடந்தது. தம்பதிகள் சந்தோஷமாக வாழ்ந்து வந்தனர். 

ஒருநாள் நண்பர்களுடன் நதியில் நீராடச்சென்ற சந்திராங்கதன் தண்ணீரில் மூழ்கினான். எங்கு தேடியும் அவன் கிடைக்கவில்லை. ஆனால் மனநிலை சற்றும் குலையாத சீமந்தினி சோமவார விரதத்தை விடாமல் கடைப்பிடித்தாள். பரமேஸ்வரனையும், பார்வதியையும் மனதார பிரார்த்தனை செய்தாள். அவள் விரதத்திற்கு பலன் விரைவிலேயே கிடைத்தது. 

திடீரென்று ஒருநாள் நீரில் மூழ்கிய அவளது கணவன் சந்திராங்கதன் திரும்பி வந்தான். தண்ணீரில் மூழ்கிய அவனை சில நாகர்கள் அழைத்துப்போனதாகவும், சிலநாட்கள் அவர்களிடம் இருப்பிடத்தில் தங்க வைத்து உபசரணை செய்து சீமாந்தினி செய்யும் சோமவார விரதம் பற்றி கேட்டு தெரிந்து கொண்டு, மறுபடியும் தன்னை கொண்டு வந்து விட்டதாக கூறினான். 

சக்தி வாய்ந்த சோமவார விரதம் இருப்பது எப்படி?

சோமவார விரதத்தை சித்திரை, வைகாசி, ஆவணி, மார்கழி முதலான மாதங்களில் முதல் திங்கட்கிழமை தொடங்கி தொடர்ந்து கடைப்பிடிக்கலாம். ஆண், பெண்கள் இருவரும் கடைப்பிடிக்கலாம். 

 விடியற்காலையிலேயே ராகு காலத்துக்கு முன்பே விநாயகர் பூஜை செய்து சங்கல்பம் செய்து கொள்ள வேண்டும். மஞ்சள்பிள்ளையார் பிடித்து வைத்து தேங்காய் உடைத்து கற்பூரம் காட்டவேண்டும். கலசத்தில் தண்ணீர் பிடித்து அதில் நாணயம், மஞ்சள்பொடி கலந்து கலசத்துக்கு மேலே மாவிலைக்கொத்தை செருகி, மையத்தில் மஞ்சள் தடவிய தேங்காயை வைத்து சந்தனகுங்குமம் வைத்து அலங்கரிக்க வேண்டும். பின்னர் பூஜையை தொடங்க வேண்டும். 

நைவேத்தியமாக சாதம், நெய், பருப்பு, பாயாசம், தேங்காய், வாழைப்பழம் போன்றவற்றை படைக்க வேண்டும். சிவநாமங்களை சொல்லி  கற்பூர ஆரத்தி காட்ட வேண்டும். 

பூஜை முடிந்த பின்னர் வயதான தம்பதியரை பார்வதி பரமேஸ்வரனாக மனதில் நினைத்து சந்தனம், குங்குமம் அளித்து நமஸ்காரம்  செய்து, அவர்களுக்கு புதுவேட்டி, ரவிக்கைதுணி, வெற்றிலைப்பாக்கு ,பழம் இவற்றுடன் தட்சணை ஆகியவை கொடுத்து, அவர்களை வணங்கி ஆசி பெறவேண்டும்.

ஓம் நமசிவாய
 

Advertisement:
[X] Close