• முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைந்தார்!
  • அமராவதியில் இருந்து வினாடிக்கு 35,000 கனஅடி நீர் வெளியேற்றம்
  • 5 மாவட்டங்களில் கனமழை - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • கூட்டத்தில் சிக்கிய ராகுல் : மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீஸ்
  • குற்றவாளிகளை தண்டிக்கவே சிலை கடத்தல் வழக்கு சிபிஐக்கு மாற்றம் - தமிழக அரசு

டேனியல் ராசய்யா யாரென்று தெரியுமா?

  சுஜாதா   | Last Modified : 06 Jun, 2018 03:01 pm

ilayaraja-birthday-special

இந்திய திரைப்பட உலகில், இசை துறையில்  முடிசூடா மன்னராக விளங்கும் பிரபல இசை அமைப்பாளர் ‘இசைஞானி’ இளையராஜா பிறந்த தினத்தில் (ஜூன் 2) அவரை பற்றிய சுவாரசிய தகவல்கள்:

  தேனி மாவட்டம் பண்ணைபுரத்தில் (1943) பிறந்தவர். ஞானதேசிகனாகப் பிறந்த இவர் டேனியல் ராசய்யா என்று பெயர்மாற்றம் செய்யப்பட்டு, பள்ளியில் சேர்க்கப்பட்டார். சில காலம் கழித்து, ராஜையா என்று மறுபடியும் பெயர்மாற்றம் செய்ததால், அனைவரும் அவரை ராசய்யா என்று அழைத்தனர்.

  சிறு வயதிலிருந்தே வாத்தியங்கள் வாசிப்பதில் மிகவும் ஆர்வமாக இருந்த அவர், தன்ராஜ் மாஸ்டரிடம் வாத்தியங்கள் கற்கத் தொடங்கினார். ஆர்மோனியம், பியானோ மற்றும் கிட்டார் போன்ற இசைக்கருவிகளை மேற்கத்திய பாணியில் வாசிப்பதில் தேர்ச்சிப் பெற்ற அவரது பெயரை, அவரது மாஸ்டர் ‘ராஜா’ என்று மாற்றினார். லண்டன் டிரினிட்டி இசைக் கல்லூரியில் கிளாஸிகல் கிடார் தேர்வில் தங்கப் பதக்கம் பெற்றார்.

  இவருக்கு பாவலர் வரதராஜன், டேனியல் பாஸ்கர், அமர் சிங் என்று மூன்று சகோதரர்களும், கமலாம்மாள், பத்மாவதி என்ற இரு சகோதரிகளும் உள்ளனர். சகோதரர்கள் மூவரும் இணைந்து 'பாவலர் பிரதர்ஸ்' என்ற இசைக்குழுவை நடத்தி வந்துள்ளனர்.  

  ‘அன்னக்கிளி’ திரைப்படம் மூலம் 1976-ல் இசை அமைப்பாளராக அறிமுகமானார். படத் தயாரிப்பாளர் பஞ்சு அருணாசலம்தான் இவருக்கு ‘இளையராஜா’ என்று பெயர் சூட்டினார். இந்த படத்தின் ‘அன்னக்கிளி உன்னைத் தேடுதே’ பாடல், அனைத்து தரப்பினரையும் வெகுவாகக் கவர்ந்தது.

  1993-ல் லண்டன் ராயல் ஃபில்ஹார்மானிக் ஆர்கெஸ்ட்ராவில் சிம்பொனிக்கு இசை அமைத்த ஆசியக் கண்டத்தின் முதல் இசை அமைப்பாளர் என்ற பெருமையைப் பெற்றவர் இசைஞானி.

   பத்மபூஷண், தமிழக அரசின் கலைமாமணி விருது, லதா மங்கேஷ்கர் விருது, கேரள அரசின் விருது என பல விருதுகளைப் பெற்றுள்ளார். சிறந்த இசை அமைப்பாளருக்கான தேசிய விருதை 4 முறை பெற்றுள்ளார்.

  கதை, கவிதை, கட்டுரை எழுதுவது, பென்சில் டிராயிங் வரைவது, புகைப்படங்கள் எடுத்து அவற்றை ஃப்ரேம் செய்து மாட்டுவது ஆகியவை பொழுதுபோக்குகள். மதுரை பொன்னையா செய்துதந்த ஆர்மோனியப் பெட்டி இவரது இசைத்தோழன்.

  அவரது பெற்றோர் கிறிஸ்துவ மதத்திற்கு மாறினாலும், நடைமுறையில் அவர் இந்துமதத்தின் மீது மிகவும் ஆர்வமுடையவராகவும், ஒரு பக்திமார்க்கமான வாழ்க்கையே வாழ்ந்து வருகிறார். ஆன்மீகத்திலும், இலக்கியத்திலும், புகைப்படக்கலையிலும் மிகுந்த ஆர்வமுள்ள அவர், ‘சங்கீதக் கனவுகள்’, ‘வெட்ட வெளிதனில் கொட்டிக் கிடக்குது’, ‘வழித்துணை’, ‘துளி கடல்’, ‘ஞான கங்கா’, ‘பால் நிலாப்பாதை’, ‘உண்மைக்குத் திரை ஏது?’, ‘யாருக்கு யார் எழுதுவது?’, ‘என் நரம்பு வீணை’, ‘நாத வெளியினிலே’, ‘பள்ளி எழுச்சி பாவைப் பாடல்கள்’, ‘இளையராஜாவின் சிந்தனைகள்’ போன்ற புத்தகங்களை எழுதியுள்ளார்.

  தாய் மீது மிகுந்த பக்தி கொண்டவர். வீட்டு பூஜை அறையில் எத்தனை தெய்வங்களின் படங்கள் இருந்தாலும், அனைத்துக்கும் நடுவே உள்ள தனது அன்னையின் படத்தைக் கும்பிட்டுவிட்டே இவர் தனது நாளைத் தொடங்குவார். தாய்க்கு சொந்த ஊரில் ஒரு கோயில் எழுப்பியுள்ளார்.

  இசைஞானிக்கு கார்த்திகேயன், யுவன் ஷங்கர் என்ற இரு மகன்களும், பவதாரிணி என்ற மகளும் பிறந்தனர். இவர்கள் மூவரும் தமிழ்த் திரையுலகின் இசைத்துறையில் இசையமைப்பாளர்களாகவும், பாடகர்களாகவும் இருந்து வருகின்றனர்.

Advertisement:
[X] Close