ஹனிமூன் ஜோடிக்கு மட்டுமல்ல எல்லோருக்கும் பிடித்த குலு மணாலி

  முத்துமாரி   | Last Modified : 20 Apr, 2018 01:09 pm


இந்தியாவின் வடமாநிலமான இமாச்சல் பிரதேசம் என்றாலே நமக்கு நியாபகம் வருவது சிம்லா தான். அதிலும் குலு-மணாலி என்றாலே நமக்கு உடம்பெல்லாம் சிலிர்க்கும் அளவுக்கு ஒரு பூரிப்பு வரும். எங்கு பார்த்தாலும் பசுமை படர்ந்த பள்ளத்தாக்குகள், காண்போரை உருக வைக்கும் வெண்பனிச் சிகரங்கள், மென்மையான புல்வெளிகள், ஆங்காங்கே ஏரிகள் என ஒரு சிறிய சொர்க்கமாகவே தோன்றும். இந்த கோடைக்காலத்தில் சுற்றுலாவுக்கு உகந்த இடமாகவும், தேனிலவுக்கான புதுமணத் தம்பதியினரின் கனவு இடங்களில் ஒன்றாகவும் திகழ்வது குலு-மணாலி தான். இந்தியாவின்  குளுகுளு பிரதேசங்களில் மிகமுக்கியமான குலு-மணாலியில் அவசியம் பார்க்க வேண்டிய இடங்கள் குறித்து இங்கு காணலாம். 

சிம்லாவில் இரண்டு முக்கிய இடங்களான குலு, மணாலிக்கு இடையே வெறும் 40 கிமீ தூரம் தான். இந்த இரண்டு பகுதிகளுக்கும் பொதுவாக நிறைய இடங்கள் உள்ளன. 

‘தேவர்கள் வசிக்கும் பூமி’ எனப்படும் குலு மாவட்டத்தின் ஒரு அங்கமாக உள்ள இந்த மணாலி, மாநிலத்தலைநகரான சிம்லாவிலிருந்து 250 கி.மீ தூரத்தில் உள்ளது. ஏழு முக்கிய ரிஷிகள் வசித்த புனித பூமியாக கருதப்படும் இந்த நகரம் இந்து புராணத்தில் கூட இடம்பெற்றுள்ளதாம்.  இமாச்சல பிரதேசத்தின் முக்கிய மலைப்பகுதி சுற்றுலாத்தலமாக மணாலி விளங்குகிறது. இங்கு செல்லும் பயணிகள் ஹதிம்பா கோயில், சோலங் பள்ளத்தாக்கு, ரோஹ்டாக் பாஸ், ரஹலா ஃபால்ஸ் மற்றும் பியாஸ் குயின்ட் ஏரி,  கிரேட் ஹிமாலயன் நேஷனல் பார்க்’ போன்றவை வாழ்க்கையில் கண்டிப்பாக பார்க்க வேண்டிய இடங்கள். மேலும், மா ஷாவரி கோயில், கிளப் ஹவுஸ், ரகுநாத் கோயில் மற்றும் ஜகந்நாதி தேவி கோயில் என மேலும் பல இடங்கள் உள்ளன. 

ஹதிம்பா குகைக் கோவில்: 

16ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட மிகப்பழமையான குகைக்கோயில் இது. மணாலியில் காண வேண்டிய முக்கியமான இடம் இந்த ஹதிம்பா கோவில். மலையின் உச்சியில் அமைந்துள்ள இந்த கோவில் அப்பகுதியில் உள்ள ஆன்மிகவாதிகளுக்கு புனித தலமாகவே திகழ்கிறது. பாண்டவர்களின் துணைவியான திரௌபதியே இந்த தலத்தில் துர்கையின் வடிவமாக 'ஹதிம்பா' என்ற பெயரில் அருள் பாலிக்கிறாள். மணாலிக்கு செல்லும் நபர்கள் ஹதிம்பா அம்மனின் அருளையும் பெற இத்தலத்தை விசிட் செய்யலாம். 

ரஹலா ஃபால்ஸ்

பூமியில் இருந்து சரியாக 8500 அடி உயரத்தில் அமைந்துள்ள இந்த  ரஹலா ஃபால்ஸ் பார்ப்பதற்கு கண்கொள்ளாக்காட்சியாக இருக்கும். மணாலி மெயின் ஏரியாவில் இருந்து 16 கிமீ தொலைவில் உள்ளது. 'ரோஹ்டாங் பாஸ்' செல்லும் வழியில் தான் இந்த ஃபால்ஸ் அமைந்துள்ளது. பனிக்கட்டிகள் உருகி தான் இந்த அருவியில் நீர் பாய்வதால், நீர் மிகவும் குளிச்சியாகவே இருக்கும். மணாலியின் மெயின் ஏரியாவில் இருந்து இந்த பகுதிக்கு பஸ், கார் என அனைத்து போக்குவரத்து வசதிகளும் உள்ளன. எனவே இந்த இடத்திற்கு செல்வது மிகவும் சுலபமானது தான். 


மணாலி கொம்பா:

1960ல் திபெத்தியன் அகதிகளால் கட்டப்பட்டது. மணாலியில் கவரக்கூடிய இடங்களில் இதுவும் முக்கியமான ஒன்று.  புத்தர்களின் பிரசித்தி பெற்ற ஆன்மிகத்தலம் இது. திபெத், லடாக், நேபாளம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து இந்த தலத்திற்கு ஆன்மிகவாதிகள் விஜயம் செய்கின்றனர். இங்குள்ள பெரிய புத்தர் சிலை, ஸ்தூபங்கள் மக்களை பெரிதும் கவர்வதாக உள்ளது. 

சோலங் பள்ளத்தாக்கு: 

மணாலியின் 'ஸ்னோ பாயிண்ட்' என்று அழைக்கப்படும் இப்பகுதியில் ஸ்கையிங், பாரா கிளைடிங், ட்ரெக்கிங், பாராஷூட்டிங் ஆகியவற்றுக்கு ஏற்ற இடம். இப்பகுதியில் குளிர்கால பனிச்சறுக்கு திருவிழா நடைபெறுகிறது. இதற்காக பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான சுற்றுலா வாசிகள் வருகின்றனர். கடல் மட்டத்தில் இருந்து சுமார் 2560 கிமீ தொலைவில் அமைந்துள்ள இந்த பள்ளத்தாக்கின் உச்சியில் ஒரு சிவன் கோவில் அமைந்துள்ளதும் இப்பகுதியின் சிறப்பு. ட்ரெக்கிங் செல்லும் பிரியர்களுக்கு இது பெஸ்ட் பிளேஸ் என்றே சொல்லலாம். இந்த பள்ளத்தாக்கில் இருந்து பார்த்தால் அனைத்து பனிப்பாறைகளும் வெண் படலங்கள் போல் அழகாக காட்சியளிக்கும். 


பியாஸ் குயின்ட்: 

பஞ்ச சீல நதிகளில் ஒன்றான பியாஸ் ஆறு உருவாகும் இடமாக இது கருதப்படுகிறது. இந்த ஆற்றில் நீராடினால் தோல் வியாதிகள் குணமாகும் என இந்துக்கள் நம்புகின்றனர். இப்பகுதியில் மலையேற்றத்துக்கான அடித்தளமாகவும் இது திகழ்கிறது. 

ரோஹ்டாக் பாஸ்: 

மணாலியில் இருந்து 51கிமீ மற்றும் கடல் மட்டத்தில் இருந்து 3980 மீட்டர். எந்த பகுதியில் இருந்து பார்த்தாலும் கவரக்கூடிய அழகை பெற்றுள்ளது.  ஸ்கையிங், பாரா கிளைடிங், ட்ரெக்கிங், உள்ளிட்டவற்றுக்கு ஏற்ற இடம். ஏப்ரல் மாதம் முதல் அக்டோபர் மாதம் வரை பொதுமக்கள் அனுமதிக்கப்படுகின்றனர். இந்த ரோஹ்டாக் பாஸ் பகுதி காஷ்மீரின் லடாக் பகுதிக்கு செல்லும் நெடுஞ்சாலையில் இணைகிறது. ஒவ்வொரு வருடமும் இப்பகுதிக்கு 25 லட்சம் பார்வையாளர்கள் வருகின்றனர். ஆனால் பனிப்பொழிவு அதிகம் இருக்கும் நேரங்களில் பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவதில்லை. 


செல்லும் வழி:

வட இந்தியாவின் முக்கிய நகரங்களான சண்டிகர், சிம்லா, டெல்லி மற்றும் பதான்கோட் போன்ற நகரங்களில் இருந்து இமாச்சல பிரதேச சுற்றுலா வளர்ச்சிக்கழகம் (HPTDC) சார்பில் சொகுசுப் பேருந்துகள் இயக்கப்படுகிறது. 

ரயில் நிலையம்:  ஜோகீந்தர் நகர் ரயில் நிலையம் மணாலியில் இருந்து 165 கி.மீ தொலைவில் உள்ளது.  இந்த ரயில் நிலையம் 310 கி.மீ தூரத்தில் சண்டிகர் ரயில் நிலையம் உள்ளது.  

மணாலி சுற்றுலா பகுதியில் இருந்து குலு மணாலி விமான நிலையம் 50 கி.மீ தூரத்தில் உள்ளது. இங்கிருந்து சிம்லா, சண்டிகர், பதான்கோட், தரம்சாலா மற்றும் டெல்லி போன்ற நகரங்களுக்கு விமான சேவைகள் உள்ளன. 

Advertisement:
[X] Close