ஐசிசி தரவரிசை: மீண்டும் முதலிடத்தில் ரபாடா!

  நந்தினி   | Last Modified : 13 Mar, 2018 04:24 pm


ஐசிசி வெளியிட்டுள்ள புதிய தரவரிசைப் பட்டியலில் தென் ஆப்பிரிக்காவின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் காகிஸோ ரபாடா முதலிடம் பிடித்துள்ளார். 

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 11 விக்கெட் வீழ்த்தியதன் மூலம், பந்துவீச்சாளர்கள் பட்டியலில் முதலிடத்தை பிடித்திருக்கிறார் ரபாடா. முதலிடத்தில் இருந்த இங்கிலாந்தின் ஜேம்ஸ் ஆண்டர்சன் இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்டார். கடந்த ஜனவரி மாதம் முதலிடத்தை பிடித்திருந்த ரபாடா, இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் போது 2ம் இடத்துக்கு தள்ளப்பட்டார். அதனால், அந்த இடத்தை ஆண்டர்சன் பிடித்திருந்த நிலையில், தற்போது மீண்டும் முதலிடத்தை ரபாடா தக்கவைத்துக் கொண்டுள்ளார்.

மேலும், 900 புள்ளிகளை ரபாடா கடந்துள்ளார். சர்வதேச அளவில் 900 புள்ளிகள் என்ற மைல்கல்லை கடக்கும் 23-வது பந்துவீச்சாளர் ரபாடா ஆவார். வெர்னோன் பிளந்தார், ஷான் பொல்லாக், டேல் ஸ்டெய்னுக்கு பிறகு 900 புள்ளிகளை கடக்கும் நான்காவது தென் ஆப்பிரிக்கா பந்துவீச்சாளராவார்.

ஜடேஜா 3-வது, அஷ்வின் 4-வது, ஜோஷ் ஹசல்வுட் 5-வது இடங்களில் உள்ளனர். 

பேட்ஸ்மேன்கள் வரிசையில், ஏபி டி வில்லியர்ஸ், ஐந்து இடங்கள் முன்னேற்றம் கண்டு 7-வது இடத்தை பிடித்தார். ஸ்டீவ் ஸ்மித், விராட் கோலி, ஜோ ரூட், கேன் வில்லியம்சன், டேவிட் வார்னர் ஆகியோர் முதல் ஐந்து இடங்களை பிடித்திருக்கின்றன.  

அணிகள் வரிசையில் இந்தியா முதலிடத்தில் நீடித்து வருகிறது.  

..
Advertisement:
[X] Close