2018 ஐபிஎல்: 5 சாதனைகளை முறியடிக்க தயாராகும் எம்.எஸ்.தோனி!

  நந்தினி   | Last Modified : 12 Mar, 2018 05:46 pm

11-வது ஐபிஎல் போட்டி வருகிற ஏப்ரல் 7ம் தேதி முதல் தொடங்க இருக்கிறது. ஏற்கனவே 2018 ஐபிஎல் போட்டி குறித்த நிறைய தலைப்புச் செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. இந்த நிலையில், ஐபிஎல் அணி உரிமையாளர்கள் இந்த ஆண்டு போட்டியை விளம்பரப்படுத்த போட்டோஷூட்டில் இறங்கியுள்ளது. தவிர அணிகளும் பயிற்சியில் தீவிரமாக இறங்கியுள்ளன. இதனுடன், எம்.எஸ்.தோனி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டனாக களம் இறங்க இருப்பது கூடுதல் சிறப்பாக அமைந்துள்ளது. தோனியை வரவேற்க சென்னை ரசிகர்களும் உற்சாகமாக காத்திருக்கின்றனர். அவர்களுக்கு மேலும் உற்சாகம் தரும் வகையில் இந்த ஆண்டு ஐபிஎல்-ல் தோனி, ஐந்து சாதனைகளை முறியடிக்க இருக்கிறார். அந்த சாதனைகள் என்னவென்று இங்கே பார்க்கலாம்..

ஐபிஎல் வரலாற்றில் அதிக ரன்: ரசிகர்களின் ஆல்-டைம் ஃபேவரைட் டி20 லெவன் அணியில் எப்போதும் விக்கெட் கீப்பராக தோனி தான் இடம் பிடிப்பார். 159 ஐபிஎல் போட்டிகளில் விளையாடியுள்ள தோனி, இதுவரை 3561 ரன்கள் குவித்துள்ளார். அவரது சராசரி 37.88. ஸ்ட்ரைக் ரேட் 136.75 ஆக உள்ளது. ஐபிஎல் வரலாற்றில் அதிக ரன் குவித்த வீரர்களில் ராபின் உத்தப்பாவுக்கு (3735) அடுத்து, தோனி இருக்கிறார். இதனால், இந்த ஆண்டு ஐபிஎல் போட்டியில் உத்தப்பாவைவிட அதிக ரன் குவிக்கும் பட்சத்தில், ஐபிஎல்-ல் அதிக ரன் அடித்த விக்கெட் கீப்பர் என்ற பெருமையை தோனி பெறுவார்.

விக்கெட் கீப்பராக அதிக அரைசதம்: ஐபிஎல் போட்டியில் ரன்னுக்கு அடுத்து அதிக அரைசதம் அடித்த விக்கெட் கீப்பராகவும் தோனி சாதனை படைக்க இருக்கிறார். இதுவரை தோனி 17 ஐபிஎல் அரைசதம் அடித்துள்ளார். உத்தப்பா 22 அரைசதம் அடித்திருக்கிறார். இம்முறை உத்தப்பாவை, தோனி முறியடிப்பாரா என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதிக ஸ்டம்பிங்ஸ்: சிறந்த விக்கெட் கீப்பராக திகழ்ந்து வரும் தோனி, 776 விக்கெட்கள் வீழ்த்திய முதல் இந்திய விக்கெட் கீப்பர் என்ற பெருமையை பெற்றிருக்கிறார். விக்கெட் கீப்பிங்கில் அடுத்தடுத்து சாதனை படைத்து வரும் தோனி, இந்த ஐபிஎல் போட்டியில் உத்தப்பாவின் 32 ஸ்டாம்பிங்ஸை முறியடிக்க காத்திருக்கிறார். தற்போது வரை ஐபிஎல்-ல் 30 ஸ்டம்பிங் செய்துள்ளார் தோனி.

அதிக கேட்ச்கள்: ஐபிஎல் போட்டியில் ஒரு வீரராக 76 கேட்ச் பிடித்து தோனி இரண்டாம் இடத்தில் இருக்கிறார். 86 கேட்ச்களுடன் முதல் இடத்தில் சுரேஷ் ரெய்னா உள்ளார். ஒரு மாதம் வரை நீடிக்கும் ஐபிஎல் போட்டியில், சக அணி வீரரின் இந்த சாதனையை தோனி முறியடிக்க அதிக வாய்ப்பு இருக்கிறது.

அதிகபட்ச வெற்றி சதவீதம்: சிறந்த ஃபினிஷர், சிறந்த விக்கெட் கீப்பரையும் தாண்டி தோனியின் பெயர் கேட்டாலே அவரது சிறந்த கேப்டன்ஷிப் நம் மனதுக்கு முதலில் தோன்றும். உலக கிரிக்கெட்டில் தோனி சிறந்த கேப்டன்களுள் ஒருவராக திகழ்ந்து வருகிறார். சர்வதேச போட்டிகளில் கேப்டனாக பல சாதனைகளை படைத்துள்ள அவர், ஐபிஎல் போட்டியிலும் தனது கேப்டன்ஷிப்பால் சாதனை படைக்க இருக்கிறார். 75 ஐபிஎல் போட்டிகளில் 60.66 என்ற வெற்றி சதவீதத்தை தோனி கொண்டுள்ளார். ரோஹித் ஷர்மாவும் அதே சதவீதத்தையே பெற்று, தோனியின் இடத்தை பகிர்ந்து கொண்டிருக்கிறார். சச்சின் டெண்டுல்கர் (58.82) இந்த பட்டியலில் இரண்டாம் இடம் வகிக்கிறார். இதனால், 2018 ஐபிஎல் போட்டியில் வெற்றி சதவீதத்தை உயர்த்தி பட்டியலில் முதலிடத்தை தோனி பிடிப்பாரா என்று பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர். கூடுதலாக, இந்த முறை ஐ.பி.எல் கோப்பையை வென்றால், அதிக முறை கோப்பையை வென்ற அணி, பெற்ற கேப்டன் என்ற பெருமையும் தோனிக்கு கிடைக்கும்.

..
Advertisement:
[X] Close