2019 ஆசிய கோப்பை: இந்திய கால்பந்து அணி பயிற்சியாளர் பதவி காலம் நீடிப்பு

  நந்தினி   | Last Modified : 07 Feb, 2018 07:01 pm


இந்திய கால்பந்து அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் கான்ஸ்டான்டினின் ஒப்பந்த காலத்தை, 2019ம் ஆண்டு ஆசிய கோப்பை வரை நீடிக்க, இன்று மும்பையில் நடந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. 

55 வயதாகும் கான்ஸ்டான்டின், சமீபத்தில் இந்திய அணிக்கு பல வெற்றிகளை பெற்று தந்துள்ளதால், அவரது பதவிக்காலம் நீடிக்கப்பட்டு இருக்கிறது. கடந்த 13 ஆட்டங்களில் இந்திய அணி தோற்கடிக்கப்படாமல் இருந்துள்ளது. இதில், 11 போட்டிகளில் வெற்றியையும், இரண்டு ஆட்டத்தை டிராவும் செய்திருந்தது இந்தியா. 1996ம் ஆண்டுக்கு பிறகு, கடந்த ஜூலை மாதம் ஃபிபா தரவரிசையில் 96-வது இடம் வகித்தது இந்திய அணி. 

ஆசிய அளவில் இந்தியா 15-வது இடத்தில் இருக்கிறது. கடந்த 2011ம் ஆண்டு நடந்த ஆசிய கோப்பை போட்டியில், ஒரு வெற்றியை பெறவே திணறியது. இந்த நிலையில், தற்போது தனது ஆட்டத்தை மேம்படுத்தி இருக்கும் இந்திய அணி, 2019 ஆசிய கோப்பை போட்டியில் சிறப்பாக செயல்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

2015ம் ஆண்டு ஜனவரி மாதம் கான்ஸ்டான்டினின் ஒப்பந்தம் 14 மாதங்கள் நீடிக்கப்பட்டிருந்த நிலையில், இரண்டாவது முறையாக அவரது பதவிக்காலம் நீடிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement:
[X] Close