உலகக் கோப்பையை வெல்ல இது தான் கடைசி வாய்ப்பு: மெஸ்ஸி

  SRK   | Last Modified : 19 Mar, 2018 09:15 pm


கால்பந்து உலகின் தலைசிறந்த வீரராக கருதப்படும் லியோனல் மெஸ்ஸி, தனக்கு எட்டாக் கனியாகவே இருந்து வரும் உலகக் கோப்பையை வெல்ல இதுதான் கடைசி வாய்ப்பு என கூறியுள்ளார். 

30 வயதான அர்ஜென்டினா வீரர் லியோனல்  மெஸ்ஸி, பார்சிலோனா அணிக்காக விளையாடி வருகிறார். கடந்த 10 வருடங்களாக உலகின் தலைசிறந்த வீரராக இருந்து வரும் மெஸ்ஸி, க்ளப் போட்டிகளில் உள்ள அத்தனை கோப்பைகளை விருதுகளையும் சாதனைகளையும் படைத்தது விட்டார். ஆனால்,  அர்ஜென்டினா தேசிய அணிக்காக பெரிய அளவில் எந்த கோப்பையையம் வெல்லவில்லை. 

பெரும்பாலான கால்பந்து வீரர்களும், விமர்சகர்களும், கால்பந்து சரித்திரத்திலேயே சிறந்த வீரர் மெஸ்ஸி என கருதினாலும், சிலர் உலகக் கோப்பையை வென்றால் தான், மெஸ்ஸி அவ்வாறு கருதப்பட முடியும் என கூறுகின்றனர். 

தனது 18வது வயதில் கால்பந்தில் ஒலிம்பிக்ஸ் தங்கப் பதக்கத்தை மெஸ்ஸி வென்றார். அதன்பிறகு நடந்த உலகக் கோப்பைகளிலும், தென் அமெரிக்க கோப்பைகளிலும் அர்ஜென்டினா ஜெயிக்கவில்லை. கடைசியாக நடந்த 2014 உலகக் கோப்பையில் மெஸ்ஸி அர்ஜென்டினாவை வெற்றி பாதைக்கு அழைத்து செல்வார் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். 

அதேபோலவே, அற்புதமாக விளையாடிய அவர், 4 கோல்கள் அடித்து, 4 முறை ஆட்டநாயகனாக தேர்ந்தேடுக்கப்பட்டார். இறுதிப் போட்டி வரை தனது அணியை அழைத்து சென்றார் மெஸ்ஸி. ஆனால், இறுதி போட்டியில் ஜெர்மனியிடம் அர்ஜென்டினா தோல்வியடைந்தது. ஆனால், 2014 உலகக் கோப்பையின் சிறந்த வீரருக்கான விருது மெஸ்ஸிக்கு கிடைத்தது.


தற்போது 30 வயதான மெஸ்ஸி, ரஷ்யாவில் நடக்கும் உலகக் கோப்பையில் விளையாட உள்ளார். கடந்த ஆண்டு நடந்த 2018 உலகக் கோப்பைக்கான தகுதிச் சுற்று போட்டிகளில் மோசமாக விளையாடி வந்தது அர்ஜென்டினா. உலகக் கோப்பையில் இருந்து அர்ஜென்டினா வெளியேறுமோ என ரசிகர்கள் பயந்திருந்த நேரம், கடைசி போட்டியில் விஸ்வரூபம் எடுத்த மெஸ்ஸி, ஹேட்ரிக் கோல்கள் அடித்து உலகக் கோப்பை இடத்தை அர்ஜென்டினாவுக்கு உறுதி செய்தார்.


உலகக் கோப்பை குறித்து பேசிய மெஸ்ஸி, "இது தான் எனக்கும் இந்த தலைமுறை வீரர்களுக்கும் உலகக் கோப்பை வெல்ல கடைசி வாய்ப்பு. எப்படி ஆடினாலும், உலகக் கோப்பையை வென்றே ஆக வேண்டும். இதை ஜெயிக்கா விட்டால், அடுத்த உலகக் கோப்பைக்கு வாய்ப்பு உண்டா என தெரியவில்லை" என கூறினார்.

Advertisement:
[X] Close