நீட் விவகாரம் ; எதிர்க்கட்சிகள் இன்று போராட்டம்

Last Modified : 24 Aug, 2017 08:55 am

நீட் தேர்வு விலக்கு விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இன்று எதிர்க்கட்சிகள் சார்பில் போராட்டம் நடைபெற உள்ளது. நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு பெற்று தந்து விடுவோம் என தமிழக மாணவர்களுக்கு நம்பிக்கை ஊட்டிய தமிழக அரசு அதற்காக அவசர சட்டம் ஒன்றையும் கொண்டு வந்தது. இந்த அவசர சட்டத்திற்கு மத்திய அரசின் மூன்று அமைச்சகங்கள் ஒப்புதல் அளித்த நிலையில், நேற்று முன்தினம் உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்ற நீட் தேர்வு தொடர்பான வழக்கில் தமிழக அரசின் நீட் விலக்கு அவசர சட்டத்திற்கு அனுமதி அளிக்க முடியாது என மத்திய அரசு தெரிவித்தது. இதனை தொடர்ந்து நீட் அடிப்படையில் மருத்துவ கலந்தாய்வை நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன் பேரில், இன்று தமிழகத்தில் நீட் அடிப்படையிலான மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வானது துவங்க உள்ளது. இந்நிலையில் நீட் விவகாரத்தில் தமிழக மாணவர்களுக்கு மத்திய மாநில அரசுகள் துரோகம் இழைத்து விட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின. மேலும் இதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் இன்று போராட்டம் நடத்தப்படும் எனவும் தெரிவித்திருந்தன. அந்த வகையில் இன்று சென்னை சேப்பாக்கம் மைதானம் அருகே காலை 10 மணி அளவில் போராட்டம் நடைபெற உள்ளது. இதில் திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட், விசிக உட்பட அனைத்து எதிர்க்கட்சிகளும் கலந்து கொள்ள உள்ளன.

..
Advertisement:
[X] Close