இயல்பு நிலைக்கு திரும்பும் தூத்துக்குடி: 144 வாபஸ்

  Newstm Desk   | Last Modified : 27 May, 2018 09:53 am

தூத்துக்குடியில் பிறப்பிக்கப்பட்டு இருந்த 144 தடை உத்தரவு வாபஸ் பெறப்பட்டது.

கடந்த 22ந் தேதி நடந்த ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டதால் போலீசார் தடியடி மற்றும் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 13 பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து ஆயிரக்கணக்கில் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

நேற்று முதல் தூத்துக்குடியில் மாவட்டத்தில் இயல்புநிலை திரும்பியுள்ளது. 20 சதவீத பேருந்துகள் நேற்று இயக்கப்பட்ட நிலையில், இன்று அனைத்து பேருந்துகளும் வழக்கம்போல் இயங்கி வருகின்றன. பிரச்சினைக்குரிய பகுதிகளில் மட்டும் பேருந்து போக்குவரத்து தொடங்கப்படாமல் உள்ளது. பெரும்பாலான கடைகள் வழக்கம்போல் செயல்படுகின்றன.

இதனால் மக்களுக்கு பால் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் தடையின்றி கிடைக்கின்றன. நாளை முகூர்த்த நாள் என்பதால் சுபகாரியங்களுக்கு காய்கறி உள்ளிட்ட பொருட்கள் வாங்குவதற்காக மக்கள் கடைத்தெருக்களுக்கு செல்லத் தொடங்கியுள்ளனர்.

ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் இயக்காமல் இருப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி உறுதியளித்துள்ளார். இதனை தொடர்ந்து, ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டால், உயிரிழந்தவர்களின் உடல்களை பிரேத பரிசோதனை செய்ய ஒத்துக்கொள்வதாக, அவர்களது உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் உடனான பேச்சுவார்த்தைக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய மக்கள் இதனைத் தெரிவித்தனர்.

இந்நிலையில் தற்போது இயல்பு நிலை திரும்பி உள்ளதால் 144 தடை உத்தரவு வாபஸ் பெறப்பட்டுள்ளது. மேலும் இன்று அமைச்சர் கடம்பூர் ராஜு தூத்துக்குடியில் மாவட்ட ஆட்சியருடன் ஆய்வு நடத்தினார். அப்போது கலவரத்தின் போது எரிக்கப்பட்ட வாகனங்களை அவர் பார்த்தார். 

..
Advertisement:
[X] Close