குரங்கணி: தீக்கிரையான 11 இளம் உயிர்களின் கனவுகள்!

  ஐஸ்வர்யா   | Last Modified : 13 Mar, 2018 01:01 pm

தேனி காட்டுத்தீயில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்தது. இவர்களில் 7 பேர் பெண்கள். இறந்தவர்கள் அனைவரும் 30 வயதுக்குட்பட்ட இளைஞர்கள், இளம்பெண்கள் என்பது குறிப்பிடதக்கது. இவர்கள் ஒவ்வொருவர் பற்றிய விவரங்கள் தற்போது வெளியாகி வருகின்றன. ஒவ்வொன்றும் நெஞ்சை உருக்குவதாக இருக்கின்றன.

சென்னை மற்றும் ஈரோட்டைச் சேர்ந்த நிறுவனங்களின் ஏற்பாட்டின்பேரில் குரங்கணி வனப்பகுதிக்குச் சென்றவர்களில் 27 பேர் மீட்கப்பட்ட நிலையில் 11 பேர் தீயின் கோரப்பிடியில் சிக்கி உயிரிழந்தனர். சென்னை வேளச்சேரியை சேர்ந்த நிஷா, கன்னியாகுமரி மாவட்டம் உண்ணாமலைகடையை சேர்ந்த விபின் மற்றும் கடலூர் திட்டக்குடியைச் சேர்ந்த சுபா, மதுரையைச் சேர்ந்த ஹேமலதா, செங்கல்பட்டைச் சேர்ந்த புனிதா ஆகியோர் உயிரிழந்துள்ளனர். ஈரோடு மாவட்டம் கவுந்தம்பாடி பகுதியைச் சேர்ந்த விவேக், தமிழ்ச்செல்வன், வலையபாளையம் பகுதியைச் சேர்ந்த திவ்யா ஆகியோரும் காட்டுத்தீக்கு பலியாகி உள்ளனர். சென்னை பூந்தமல்லி பகுதியை சேர்ந்த அருண்பிரபாகரன், கும்பகோணத்தைச் சேர்ந்த அகிலா ஆகியோரும் உயரிழந்துள்ளனர்.

நிஷா:சென்னையை சேர்ந்த 25 வயதான நிஷா 1‌00 சதவிகித தீக்காயங்களுடன் மதுரை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று மாலை உயிரிழந்தார். வேளச்சேரி மெயின்ரோடு வேளச்சேரி சிபிரா அப்பாட்மென்ட் பகுதியை சேர்ந்தவர் தமிழ்ஒளி. இவரது மகள் நிஷா(30). இன்ஜினியரிங் முடித்துவிட்டு மணப்பாக்கத்தில் உள்ள ஐ.டி கம்பெனி ஒன்றில் பணிபுரிந்து வந்தார். விளையாட்டில் ஆர்வம் மிகுதியால் மலையேற்றத்திலும் அதிக ஆர்வம் கொண்ட நிஷா, சென்னை டிரக்கிங் கிளப்பில் உறுப்பினராக சேர்ந்துள்ளார்.

விவேக்: திருமணமான நூறாவது நாளை கொண்டாடிய புது தம்பதி திவ்யா- விவேக் குரங்கணி காட்டுத் தீயில் சிக்கியது பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.துபாயில் வேலை செய்து வந்த விவேக், ஈரோடு அருகே கவுந்தம்பாடியை சேர்ந்தவர். கோபிச்செட்டிபாளையத்தில் கல்லூரி விரிவுரையாளராக பணி செய்து வந்த திவ்யாவை கடந்த நவம்பர் மாதம் திருமணம் செய்து கொண்டார். திருமணமான நூறாவது நாளை கொண்டாடி முடித்த பின் இயற்கையை ரசிக்க ட்ரெக்கிங் சென்றுள்ளனர். திடீரென ஏற்பட்ட அகோரா தீயில் விவேக் சிக்கி உயிரிழந்தார். தற்போது திவ்யாவும் உயிரிழந்துள்ளார். இதனால், இருவர் குடும்பமும் சோகத்தில் மூழ்கியுள்ளது.

புனிதா: செங்கல்பட்டு பகுதியை சேர்ந்த புனிதா, ஜனவரி 28 ஆம் தேதி பாலாஜி என்பவரை திருமணம் செய்து சோழிங்கநல்லூரில் குடியேறினார். மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றி வந்த இவர், தனது நிறுவன நண்பர்களுடன் குரங்கணி மலைக்கு சென்ற போது தீ விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார். முன் அனுபவம் இல்லாத சுற்றுலா வழிகாட்டியை நம்பி மலையேறியதால் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது என்றும், முறையான அனுமதி பெற்று வனப்பகுதிக்குள் அனைவரும் செல்ல அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என புனிதாவின் தந்தை ஜெயசங்கர் கோரிக்கை விடுத்துள்ளார்.

அருண் பிரபாகர்: குரங்கணி காட்டுத்தீயில் சிக்கி உயிரிழந்த சென்னை பூந்தமல்லியைச்சேர்ந்த அருண் பிரபாகரின் குடும்பத்தினர் துயரத்தில் மூழ்கியுள்ளனர். சென்னையில் ட்ரெக்கிங் கிளப் மேலாளராக இருந்த அருண் பிரபாகர், கடந்த 15 ஆண்டுகளாக மலையேறும் பயிற்சியில் ஈடுபட்டு வந்தவர். அவரது சாதனைகளை பாராட்டி லிம்கா உள்ளிட்ட விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. ஆனால்‌ குரங்கணிக்குச்சென்று காட்டுத்தீக்கு இரையாகிவிட்டார் அருண் பிரபாகர்.

சுபா: தீவிபத்தில் பலியானவர்களில் சுபா என்ற பெண் சென்னையை அடுத்த சோழிங்கநல்லூரில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் பணியாற்றி வந்தது தெரியவந்தது. சுபாவின் சொந்த ஊர் கடலூர் மாவட்டம் திட்டக்குடியாகும். மலையேற்ற பயிற்சியில் ஆர்வம் கொண்ட சுபா தனது தோழிகள் சிலருடன் தேனி மலைப் பகுதிக்கு சென்றிருப்பது தெரியவந்துள்ளது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு ஓடி வந்த பெற்றோர், காபியைக்கூட சூடா குடிக்க மாட்டாளே... இந்த நெருப்பை எப்படித் தாங்கினாளோ என கதறி அழுதது அங்கிருந்தவர்களின் கண்களிலும் கண்ணீரை வரவைத்தது.

விபின்- திவ்யா தம்பதி: கோவை மாவட்டம், கிணத்துக்கடவு பகுதியைச் சேர்ந்தவர் திவ்யா, 27; பி.டெக். ஐ.டி., படித்துள்ளார். கல்லுாரி காலத்தில் இருந்து, திவ்யா அடிக்கடி மலையேற்றத்துக்கு சென்று வந்தார். இதேபோல், கன்னியாகுமரி மாவட்டம், மார்த்தாண்டம் பகுதியைச் சேர்ந்த விபின், 31, பி.டெக்., - ஐடி., படித்து, சென்னையில் உள்ள, ஐ.டி., கம்பெனியில் பணியாற்றி வந்தார். அங்குள்ள நண்பர்களுடன் அடிக்கடி மலையேற்றம் சென்றுள்ளார். மலையேற்றத்தின் போது, விபின், திவ்யா இடையே காதல் ஏற்பட்டது. இரண்டு ஆண்டுகளுக்கு முன், திருமணம் செய்துள்ளனர். குரங்கணி காட்டுத்தீயில் சிக்கி, விபின் உயிர் இழந்தார். தீ காயங்களுடன் மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த திவ்யாவும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். பலியான விபினை நண்பர்கள், 'வனக்காதலன்' என செல்லமாக அழைப்பர் என்பது குறிப்பிடதக்கது.

அகிலா: காட்டுத்தீயில் சிக்கி கும்பகோணத்தைச் சேர்ந்த அகிலா என்ற இளம்பெண் உயிரிழந்தார். ஒரே மகளின் இறப்பை தாங்கிக்கொள்ள முடியாமல் பெற்றோர் கதறி அழுதனர். கும்பகோணம் பகவத் விநாயகர் கோயில் பகுதியைச் சேர்ந்தவர், அகிலா. 24 வயதாகும் இவர், சென்னை டி.சி.எஸ்-ஸில் ஐடி ஊழியராகப் பணிபுரிந்துவருகிறார். அகிலாவின் பெற்றோர் வயதானவர்கள், அகிலாவின் வருமானத்தில் தான் அவரது குடும்பமே இயங்குகிறது. அகிலா, இயற்கையை ரொம்பவும் நேசிப்பவர் என்றும், அகிலாவுக்கு மலை என்றால் மிகவும் பிடிக்கும் என்று அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர். மலை பகுதிக்குச் செல்லும்போது, அங்குள்ள காட்சிகளைப் போட்டோ எடுத்து, மலைப்பகுதியை ஆய்வும் செய்பவர் அகிலா இன்று தீயில் கருகியது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஹேமலதா: மதுரை மாவட்டம், புதுவிளாங்குடியைச் சேர்ந்தவர், ஹேமலதா (30) . சென்னையில் தங்கி, மென்பொருள் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இவர் மலை ஏற்றத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர்.

தமிழ்செல்வன்: ஈரோடு மாவட்டம் கவுந்தம்பாடி பகுதியைச் சேர்ந்த தமிழ்ச்செல்வனும் (26) காட்டுத்தீயில் சிக்கி உயிரிழந்தார். இதனை தொடர்ந்து தமிழ்ச்செல்வன் உடல் தேனியில் இருந்து அவர்களது சொந்த ஊரான மகாத்மபுரத்துக்கு கொண்டு வரப்பட்டது.

..
Advertisement:
[X] Close