குரங்கணி காட்டுத் தீ: சென்னை ட்ரெக்கிங் கிளப் விளக்கம்

  முத்துமாரி   | Last Modified : 13 Mar, 2018 03:23 pm


குரங்கணி வனப்பகுதிக்கு சென்ற போது காட்டுத் தீ ஏற்பட்டதற்கான எந்த அறிகுறியும் இல்லை, காய்ந்த புற்களுக்கு விவசாயிகள் தீ வைத்ததனால் இந்த விபத்து நிகழ்ந்திருக்கலாம் என சென்னை ட்ரெக்கிங் கிளப் முதல் முறையாக விளக்கம் அளித்துள்ளது. 

குரங்கணி காட்டுத் தீ ஏற்பட்டதற்கு ட்ரெக்கிங் கிளப் முறையான அனுமதி பெறாமல் சென்றது தான் காரணம் என குற்றம் சாட்டப்பட்டு வருகிறது. இந்நிலையில் சென்னை ட்ரெக்கிங் கிளப் இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ளது. அதன்படி, "ட்ரெக்கிங் என்பது வழக்கமாக செல்லக்கூடியது தான். முறையான பயிற்சி பெற்றவர்கள் வழிகாட்டிகளாக அனுப்பி வைக்கப்படுகிறார்கள். பணத்திற்காக ட்ரெக்கிங் நடத்தப்படுவதில்லை.

இந்த குழுவில் சென்ற நிஷா, திவ்யா மலையேற்றத்திற்கு முறையாக பயிற்சி பெற்றவர்கள். வழிகாட்டிகள் அருண், விபின் ஆகியோரும் 7 ஆண்டுகள் பயிற்சி பெற்றவர்கள். வனத்துறைக்கு கட்டணம் செலுத்தி முறையான அனுமதி பெற்று தான் ட்ரெக்கிங்கிற்கு சென்றுள்ளார்கள். உள்ளூர் வழிகாட்டி ரஞ்சித் என்பவரும் உடன் சென்றுள்ளார்.

குழுவினர் மலையேறும் போது அங்கு காட்டுத் தீ ஏற்பட்டதற்கான எந்த அறிகுறியும் இல்லை. அந்த பகுதியில் விவசாயிகள் சிலர் காய்ந்த புற்களுக்கு தீ வைத்து கொண்டிருந்ததை குழுவினர் பார்த்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது. இதனால் கூட காட்டுத் தீ ஏற்பட்டிருக்கலாம்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.  

..
Advertisement:
[X] Close