எஸ்பிஐ வங்கிக்கணக்கின் இருப்புத்தொகை குறைகிறதா?

  முத்துமாரி   | Last Modified : 05 Jan, 2018 05:43 pm


சேமிப்புக் கணக்கின் குறைந்தபட்ச இருப்புத்தொகையை அதிகபட்சம் 1,000 ரூபாயாக குறைக்க பாரத ஸ்டேட் வங்கி திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவின் மிகப் பெரிய பொதுத் துறை வங்கி நிறுவனமான எஸ்பிஐ வங்கி, கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் சேமிப்புக்கணக்கின் இருப்புத்தொகை அளவை மாற்றி அமைத்தது. அதன்படி, அதிகபட்சமாக மெட்ரோ நகரங்களில் குறைந்தபட்ச இருப்புத்தொகை 5,000 ரூபாய் எனவும், புறநகர் பகுதிகளில் 3,000 ரூபாய் எனவும் விதிக்கப்பட்டது.

ஆனால் இதற்கு வாடிக்கையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து, அதே ஆண்டு செப்டம்பர் மாதம் மெட்ரோ நகரங்களில் 5,000 ரூபாய் புறநகர் பகுதிகளில் 3,000 ரூபாய், கிராமப்புற பகுதிகளில் 1,000 ரூபாய் என மீண்டும் ஒருமுறை மாற்றி அமைத்தது.


தற்போதுள்ள நிலவரப்படி, சேமிப்புக்கணக்கில் குறைந்த பட்ச இருப்புத்தொகை இல்லையெனில், மெட்ரோ, புறநகர் பகுதி வாடிக்கையாளர்கள் ரூ.30 முதல் ரூ.50 வரையிலும், கிராமப்புற வாடிக்கையாளர்கள் ரூ.20 முதல் ரூ.40 வரையிலும் அபராதமாக செலுத்த வேண்டும். 

இந்த நிலையில், சமீபத்தில் வெளியான செய்தி எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் மத்தியில் ஒரு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதாவது 2017ம் ஆண்டில் ஏப்ரல் முதல் நவம்பர் மாதம் வரையில் மட்டும் வங்கி கணக்கில் குறைந்தபட்ச இருப்புத் தொகை இல்லை என கூறி எஸ்பிஐ வங்கி, 1,771 கோடி ரூபாயினை தனது வாடிக்கையாளர்களிடம் இருந்து அபராதமாக வசூல் செய்துள்ளது. ஜூலை முதல் செப்டம்பர் மாத காலாண்டில் எஸ்பிஐ வங்கி பெற்ற வருவாயான 1,581.55 கோடி ரூபாயினை விட அபராத தொகை அதிகம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதனால் மீண்டும் சேமிப்புக் கணக்கின் குறைந்தபட்ச இருப்புத்தொகையைக் குறைக்க  எஸ்பிஐ வங்கிமுன்வந்துள்ளது. இதன் அடிப்படையில் அதிகபட்ச இருப்புத்தொகையாக 1,000 ரூபாய் இருக்கும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement:
[X] Close