பணம் செய்ய விரும்பு - பகுதி 1 (இது பணம் காய்க்கும் மரம் வளர்க்கும் ரகசியம்)

  Newstm Desk   | Last Modified : 10 Jun, 2019 04:42 pm
panam-seyya-virumbu-special-artical-about-financial-managemet-and-savings


நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதிக்கும் பணத்தை, விதையாக மாற்றி, அதை வைத்தே, பணம் காய்க்கும் மரத்தை வளர வைப்பதே இந்த கட்டுரையின் நோக்கம். என்னடா இது... விதை என்கிறார், பணம் காய்க்கும் மரம் என்கிறார் என அங்கலாய்த்துக்கொள்ள வேண்டாம். 

இது ஒன்றும் மாயாஜாலமாே, மந்திர சக்தியோ அல்ல. நம்மில் பலரும் செய்யும் சிறிய தவறுகளே, நம் பணப் பானையில் ஓட்டையை ஏற்படுத்தி, நம் கஜானாவை காலிக்குடமாக்குகிறது என்பதை உணர்த்துவதே இந்த கட்டுரைத் தொடரின் நோக்கம்.

அட போங்க சார்... நான் சேமிப்பில் கெட்டி இல்லை, செலவழிப்பதில் மாமன்னன். அதுவும், பணம், காசு எப்படி போகிறது என்பதே தெரியாத அளவுக்கு பைனான்சியல் மேஜென்மென்ட்டில் படு வீக் என்பது எனக்கே தெரியும். இதை நீங்கள் சொல்லித்தான் தெரிய வேண்டுமா என நீங்கள் புலம்புவது என் காதில் கேட்கிறது. 

ஆம்... மணி மேஜேன்மென்ட்டில் நம்மில் பலரும் வீக்காக இருக்கிறோம் என்பது நமக்கே தெரிந்த உண்மை தான். ஆனால், அதை சரி செய்து கொள்ள எத்தனை பேர் முயன்றிருக்கிறோம். முயற்சியை விடுங்க சார்... எத்தனை பேர், அதைப் பற்றி சிந்தித்திருக்கிறோம். 

மாதத்தின் முதல் வாரம், வங்கிக் கணக்கில் சம்பளப் பணம் வந்துவிடும். உடனே, வீட்டு வாடகை அல்லது ஹவுசிங் லோன் இ.எம்.ஐ., டெபிட் ஆகிவிடும். மாத மளிகை செலவுகளுக்காக ஒரு தொகை, பால், மின் கட்டணம், கேபிள் கட்டணம், காய்கறி செலவு என கிட்டத்தட்ட, 90 சதவீத சம்பளப் பணம், முதல் வாரத்திலேயே காலி. 

மீதமுள்ள 10 சதவீதத்தில், ரெகுலர் மெடிக்கல் எக்ஸ்பென்சஸ், மாதத்தில் குறைந்தபட்சம் இருமுறை குடும்பத்தோடு ஓட்டலில் உணவு, முகூர்த்த நாள் என்றால் மாெய் எழுத பணம். இது தவிர, திடீர் வெளியூர் பயணங்கள், மிக எளிமையாக கொண்டாடினாலும், பிள்ளைகள் பிறந்த நாளுக்கென குறைந்தபட்ச செலவு. எப்போதாவது ஒரு சினிமா, வழிபாடு, பிரார்த்தனை, வேண்டுதல் இப்படி இன்னும் பல.

மேற்கண்ட செலவுகள் அத்தனையும், 10 சதவீத சம்பளப் பணத்தில் சமாளிக்க முடியுமா? சரி, செலவுக்கே போதவில்லை என்றால், இதில் எங்கிருந்து சேமிப்பு? இதை படிக்கும் போதே, முந்தைய கட்டுரையில் சரியாகத் தான் சொல்லியிருந்தார். நாம் செலவுக் கணக்கை பட்டியல் போட்டிருக்கலாமோ என நீங்கள் இப்போது யோசிப்பதும் புரிகிறது.

இப்போதும் ஒன்றும் காலம் தாழ்ந்து விடவில்லை. தொழில் செய்பவர்களுக்கு இந்த வரவு, செலவு ஏற்கனவே தெரிந்திருக்கும். ஆனால், மாத சம்பளம் பெறும் பலருக்கு இந்த செலவு பற்றிய விழிப்புணர்வு மிகவும் குறைவாகத்தான் இருக்கும். ஏனென்னறால், தொழில் புரிவோர், தாங்கள் போட்ட முதலீடு திரும்ப வந்தால் தான் அதை மீண்டும் மீண்டும் முதலீடு செய்து, தொழிலை தொடர்ந்து நடத்த முடியும். அதில் ஏதேனும் சிறிய சறுக்கல் வந்தாலும், தங்கள் வியாபாரம் எந்த பாதையை நோக்கிப் போகிறது என்பது மிக விரைவில் தெரிந்துவிடும். அதற்கு ஏற்றார் போல் அவர்கள் தங்கள் வியாபார உத்தியை மாற்றிக் கொள்வர். 

ஆனால், மணி மேனேஜ்மென்ட்டில் விழிபிதுங்குவோர், மாத சம்பளக்காரர்களே. முதலில் உங்கள் மாத சம்பளம் எவ்வளவு வருகிறது என்பதை எழுதுங்கள். அதன் பின், அதிலிருந்து அத்தியாவசிய செலவுகள் என்னென்ன செய்கிறோம் என்பதை எழுதுங்கள். 

அதாவது, கட்டாயம் இந்த செலவுகள் இல்லாமல் அன்றாட பிழைப்பே ஓடாது என்பது தான் அத்தியாவசிய செலவு. அதில், வீட்டு வாடகை, இ.எம்.ஐ., மளிகை பொருட்கள், பால், காய்கறி, மருந்துகள் உள்ளிட்டவை அடங்கும்.

அதையடுத்து குறைத்துக்கொள்ளக் கூடிய செலவுகள். அதாவது போக்குவரத்து. தனி வாகனமா, பொதுப்போக்குவரத்தா? எது சிக்கனம்? எதில் நேரம் அதிகம் செலவாகிறது. தனி வாகனத்தால் பணம் அதிகம் செலவாகி, நேரம் மிச்சமாகிறது என்றால், அந்த நேரத்தை எப்படி பயனுள்ள வகையில் பயன்படுத்துகிறோம்? 

இவற்றையெல்லாம் சிந்தித்து, டைரியில் எழுதுங்கள். ஆம்... பணம் முக்கியம் தான். ஆனால், மணி மேனேஜ்மென்ட்டுக்கு ஆணி வேர், டைம் மேனேஜ்மென்ட் தான் என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். கிடைக்கும் நேரத்தை எப்படி பயனுள்ள வகையில் நம் பொருளாதார முன்னேற்றத்திற்கு பயன்படுத்த முடியும் என்பதையும் யோசித்து அதன் படி செயல்பட வேண்டும். 

மாெபைல் போன் கட்டணம். டிஸ் அல்லது கேபிள் கட்டணம், இன்டர்நெட் பயன்பாடு, ஏசி பயன்பாடு இவற்றை மறுபரிசீலனை செய்யலாம். இவையெல்லாம் சிறு சிறு செலவுகள் தானே என நீங்கள் கூறினாலும், சிறு துளி பெருவெள்ளம் ஆகும் என்பதை மறுக்கவே முடியாது. 

குறைந்த பணத்தில் அதிக ஆபர் தரும் இன்டர்நெட் கனெக்ஷனை பெறலாம். அல்லது, தேவைப்படும் விஷயங்களுக்கு மட்டும் இன்டர்நெட் பயன்படுத்தி, அதற்காக செலவிடும் பணத்தையும், பணத்தை விட மதிப்பு மிக்க நேரத்தையும் மிச்சப்படுத்தலாம். இப்படி சிறுக சிறுக நீங்கள் மிச்சப்படுத்தும் பணமும், நேரமும் தான், உங்கள் பண விருச்சத்திற்கான விதையாக மாறும் என்பதை காலப்போக்கில்  உங்களால் உணர முடியும் என்பது திண்ணம். 

பணத்தையும், நேரத்தையும் எப்படி மிச்சப்படுத்தலாம் என்பது குறித்த முக்கிய மூல மந்திரம், அடுத்த தொடரில் தொடரும். அதற்கு முன், இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன், நம் வள்ளுவப் பெருந்தகை சொன்னதை உங்களுக்காக நினைவுபடுத்த விரும்புகிறேன். 

செய்தக்க அல்ல செயக்கெடும் செய்தக்க
செய்யாமை யானும் கெடும்.

பொருள்: செய்யக் கூடாததை செய்தாலும், செய்ய வேண்டியதை செய்யாமல் விட்டாலும் நிச்சயம் கேடு விளையும் என்கிறார் திருவள்ளுவர்.

ஆம்... செய்யக் கூடாத அல்லது தேவைக்கு அதிகமாகன செலவுகளை செய்வதாலும், செய்ய வேண்டிய காரியமான, வரவு, செலவை எழுதி வைக்காமல் விடுவதாலும் நிச்சயம் நம் பொருளாதாரம் மெல்லச் சரியும் என்ற வகையிலும் பொருள் கொள்ளலாம். 

மீண்டும் சந்திப்போம்... 

- சுப்பிரமணியன் நடேசன் -

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
t1
Advertisement:
[X] Close