தோல்விகளை தள்ளிவிட்டு வெற்றியின் சிகரம் தொட்ட தொழிலதிபர்!

  Newstm Desk   | Last Modified : 11 Sep, 2019 03:02 pm
jack-ma-success

சீனாவை சேர்ந்தவர், ஜாக் மா, 55. இன்றிலிருந்து சரியாக 20 ஆண்டுகளுக்கு முன்,  இ காமர்ஸ் நிறுவனமான அலிபாபாவை,  நிறுவி, இன்று உலகின் தலைசிறந்த நிறுவனங்களில் ஒன்றாக அதை மிளிரச்செய்தவர். சீனாவின், அடுக்குமாடி குடியிருப்பின் சிறிய அறையில் துவங்கப்பட்ட அலிபாபா நிறுவனத்தை, தனது கடும் உழைப்பாலும், திறமையாலும், இன்று 33 லட்சம் கோடி மதிப்புடைய உலகின் முன்னணி நிறுவனமாக மாற்றிய வியாபார புலி. 

கடந்த ஆண்டே, சரியாக ஓராண்டுக்குப்பின் நிறுவனத்தின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக அறிவித்திருந்தார். அதன்படி, தற்போது, அலிபாபா நிறுவனத்தின் தலைவர் பொறுப்பிலிருந்து அவர் விலகி விருப்ப ஓய்வு பெற்றுள்ளார். 

அவருக்கான பிரியாவிடை நிகழ்ச்சி, சீனாவின் ஹாங்ஷௌ ஒலிம்பிக் விளையாட்டுத் திடலில் நேற்று நடைபெற்றது. அதில் பல்வேறு துறைகளின் நட்சத்திரங்களும்  பங்குபெற்று அவர் மீதான தங்கள் அன்பை வெளிப்படுத்தினர். ஆயிரக்கணக்கான பணியாளர்கள், தொழில் அதிபர்கள், மாணவர்கள், தொழில் முனைவோர் என பல்வேறு தரப்பினரும் பங்கேற்றனர். 

சீனா கல்வி முறையில் கல்வி பயின்ற இவர், அந்நாட்டு கல்வி நிறுவனங்கள் நடத்திய நுழைவு தேர்வுகளில் தோல்வி அடைந்துள்ளார். அமெரிக்காவின் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பில் சேர 10 முறை விண்ணப்பித்து, அத்தனை முறையும் ஜாக்கிங் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன. 

ஆங்கிலத்தில் பி.ஏ., பட்டம் பெற்ற இவர், வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுடன் சுற்றி சுற்றியே ஆங்கிலத்தை சரளமாக கற்றார். 30 நிறுவனங்கள் இவருக்கு வேலை தர மறுத்தன. இவ்வளவு அவமானங்களுக்கு பின்னும் மனம் தளராமல், இன்டர்நெட் மற்றும் அதன் பயன்பாட்டை பற்றி கற்றுணர்ந்த ஜாக், 20 ஆண்டுகளுக்கு முன் ஓர் சிறிய நிறுவனத்தை துவங்கினார். 

அயராத உழைப்பு, வியாபார நுட்பம், திறமை இவற்றை மூலதனமாக கொண்டு, மிகப்பெரிய உயரத்தை எட்டினார். இன்று, சீனாவின் மிகப்பெரிய நிறுவனங்களில் அலிபாபாவும் ஒன்று என சொல்வதை விட, உலகின் முன்னணி நிறுவனங்களில் ஒன்று என்பதே சரியாக இருக்கும். கிட்டத்தட்ட, இந்த நிறுவனத்தின் மொத்த சந்தை மதிப்பு, 33 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது. 

நிறுவனத்தை இத்தனை உயரத்திற்கு கொண்டு சென்ற ஜாக், பிரபல போர்ப்ஸ் மற்றும் பார்சூன் இதழ்களில், உலகின் சக்திவாய்ந்த 50 நபர்களின் பட்டியலிலும் இடம் பிடித்துள்ளார். அதிலும், முதல் 10 இடங்களுக்குள் இவர் இடம்பெற்றது, இவரது உயரத்தை எடுத்துரைக்கிறது. 

இப்படிப்பட்ட ஜாக், நேற்றுடன் விருப்ப ஓய்வு பெற்றார். தன் பெயரிலான மொத்த சொத்தான, 2.75 லட்சம் கோடி ரூபாயையும், கல்வி, சுகாதாரம் போன்ற பொது நல தேவைகளுக்காக செலவழிக்க உள்ளதாகவும் ஜாக் அறிவித்துள்ளார். தொழிலில் மட்டுமின்றி, இவர் சிறந்த பேச்சாளராகவும், நகைச்சுவை நடிகராகவும் திகழ்ந்துள்ளார்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close