• முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைந்தார்!
  • அமராவதியில் இருந்து வினாடிக்கு 35,000 கனஅடி நீர் வெளியேற்றம்
  • 5 மாவட்டங்களில் கனமழை - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • கூட்டத்தில் சிக்கிய ராகுல் : மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீஸ்
  • குற்றவாளிகளை தண்டிக்கவே சிலை கடத்தல் வழக்கு சிபிஐக்கு மாற்றம் - தமிழக அரசு

அஜித் - தி அன்டோல்டு ஸ்டோரி!

  பா.பிரவீன் குமார்   | Last Modified : 16 Aug, 2017 10:32 pm

"நான் தண்ணி ஊத்தி வளர்ந்த வீட்டு மரம் இல்ல, தானா வளர்ந்த காட்டு மரம்! ஒவ்வொரு நொடியும்; ஒவ்வொரு நிமிஷமும் நானே பாத்து பாத்து செதுக்கியது!” இவை சினிமாவில் வரும் வெற்று வசனங்கள் இல்லை... அஜித் தன் சினிமா வாழ்க்கையில் வெற்றிபெற ஒவ்வொரு நிமிடமும் பட்ட கஷ்டங்கள், போராட்டத்தின் வலியின் வெளிப்பாடு. சினிமாவை ரசிப்பதோடு மட்டுமல்ல; அதைக் கொண்டாடுபவர்கள் தமிழ் ரசிகர்கள். அவர்களுக்கு, ஒருமுகத்தைப் பிடித்துவிட்டால் போதும்; நதிமூலம்... ரிஷி மூலம் பார்க்காமல் உயரத்தில் தூக்கி உட்காரவைத்து அழகு பாப்பார்கள்! எம்.ஜி.ஆரை ‘மக்கள் திலகம்’ ஆக்கியதும், சிவாஜி ராவ் என்கிற ரஜினிகாந்தை ‘சூப்பர் ஸ்டார்’ ஆக்கியதும் தமிழ் சினிமா ரசிகர்கள் நிகழ்த்திக் காட்டிய மாபெரும் மேஜிக்! அந்தவரிசையில், இன்றைக்கு ரசிகர்களின் மனம் நிறைந்த ‘மாஸ் ஹீரோ’வாக உயர்ந்து நிற்பவர் ‘தல’ அஜீத்! ஒருகட்டத்தில் எம்.ஜி.ஆரும், ரஜினியும் கூட தனக்குப் பின்னால் திரண்ட ரசிகர்படையை ஒருங்கிணைத்து மன்றங்களாக மாற்றிக் கொண்டனர். ஆனால், இருந்த மன்றங்களைக் கூட கலைத்துவிட்ட இவரின் ‘விவேகம்’ குறித்து கடும் விமர்சனங்கள் எழுந்தது! ஆனாலும், ‘தல’யின் தளபதிகளாக; அஜீத் பின்னால் மாபெரும் ரசிகர்கள் கூட்டம் அணிவகுத்து நிற்பது மிகப்பெரிய ஆச்சரியம் தான்! எந்தவித பின்புலமும் இல்லாமல் தனது சொந்த முயற்சியால் மட்டுமே மிகப் பெரிய உயரத்தை அடைந்திருக்கும்,தமிழ் சினிமாவில் கால் நூற்றாண்டைத் தொட்டிருக்கும் அஜித்திஸத்தைப் பற்றிப் பேசுகிறது இந்த மினி தொடர்..! பகுதி 1 ஆணழகனாக தங்க நிறம், சராசரியான உயரம், கட்டுமஸ்தான உடற்கட்டு, ‘பைக் ரேஸ்’ வீரன்..! அந்த இளைஞனைப் பார்ப்பவர்கள், ‘அட பையன் சினிமா ஹீரோ போல இருக்கானே!’ என வாய்விட்டே சொல்லிச் சென்றனர். அந்த இளைஞனுக்கு சினிமாவில் சாதிக்க வேண்டுமென்கிற வெறி! என்ன செய்வது? அவரின் தந்தை ஒரு தயாரிப்பாளராகவோ, அண்ணன் ஒரு இயக்குநராகவோ இல்லையே! பிறகு, எப்படி சாத்தியமாகும்? சினிமாப் பின்னணி இல்லாமல் போனால் என்ன? அந்த இளைஞனுக்கு கண்கள் நிறைய கனவும், அதை நனவாக்க நெஞ்சம் நிறைய நம்பிக்கையும் இருந்தது! அதை மட்டுமே மூலதனமாக வைத்து முயற்சியில் இறங்கினார். அப்பா, பார்மசூட்டிக்கல் கம்பெனியில் வேலைபார்த்து ஓய்வு பெற்றவர். பூர்வீகம் பாலக்காடு. அம்மா, கல்கத்தாவை சேர்ந்தவர். வேலை விஷயமாக பல ஊர்களுக்குப் போய் வரும் போது கல்கத்தாவில் அம்மாவைப் பார்த்து காதலித்து திருமணம் செய்து கொண்டார். அந்த இளைஞர் பிறந்தது ஐதராபாத்... வளர்ந்ததெல்லாம் சென்னையில்தான். எழும்பூரில் உள்ள ஆசான் மெமோரியல் சீனியர் செகண்டரி பள்ளியில் 10ம் வகுப்பு வரை தட்டுத்தடுமாறி படித்தார். பிறகு படிப்பு ஏறவில்லை! புத்தியெல்லாம் நடிப்பில் இருந்தபோது படிப்பு எப்படி ஏறும்? அப்பா, வேலை செய்த கம்பெனியின் ‘பாஸ்’ ஒரு ‘பைக் ரேஸ்’ பிரியர். சோழவரம் ரேஸ்களில் கலந்துகொள்வார். அவரைப் பார்த்து தான் அந்த இளைஞருக்கும் ‘பைக் ரேஸ்’ ஆர்வம் வந்தது. வேலைக்குப் போகாமல், ‘பைக் ரேஸ்’களுக்கும், சினிமா கம்பெனிகளுக்கும் போய் வந்த மகனை, வலுக்கட்டாயமாக என்பீல்டு கம்பெனியில் ஆட்டோ மொபைல் இன்ஜினீயரிங் பயிற்சி பெற அனுப்பிவைத்தார் தந்தை. ஆனால்; அதில் அவர், ரொம்ப நாள் நீடிக்கவில்லை! பிறகு, எக்ஸ்போர்ட் கார்மெண்ட்ஸ் கம்பெனி வேலை! இதையும் கோட்டை விட்டால் தந்தையின் கோபத்துக்கு ஆளாகவேண்டுமே! ஆகவே, ‘சினிமா சான்ஸ்’ தேடுவதற்கு வசதியாக ‘நைட் ஷிப்ட்’ கேட்டுவாங்கிக் கொண்டார். இரவில் வேலை, பகலில் ‘வாய்ப்பு வேட்டை’ ! இப்படியே நாட்கள் ஓடியது. ‘நடிகர்-நடிகை தேவை’ விளம்பரம் கொடுத்து ஆளை வரவழைத்து பணம் பறிக்கும் ‘உப்புமா கம்பெனி’ தொடங்கி, பெரிய படக் கம்பெனி வரை சினிமா கம்பெனிகள் பல ஏறி இறங்கி அலுத்துப் போனாலும், நம்பிக்கை மட்டும் வற்றிப் போகவில்லை! ‘வாய்ப்பு வரும்போது வரட்டும்’ என செய்துவந்தத் தொழிலை ஆர்வமாகக் கற்றுக்கொண்டு, சொந்தமாக கார்மெண்ட்ஸ் தொடங்கும் அளவுக்கு அந்த இளைஞரிடத்தில் முன்னேற்றம் தெரிந்தது. கார்மெண்ட்ஸ் கம்பெனியை கவனித்தபடியே; இடைப்பட்ட நேரங்களில் ‘நடிப்பு சான்ஸ்’ தேடினார். சினிமாவில் வழிகாட்ட யாரும் இல்லாமல், யாரை அணுகி வாய்ப்புக் கேட்பது? என தெரியாமல் ரொம்பவே தடுமாறித்தான் போனார். இப்போது இருப்பதைப் போல, வீட்டில் இருந்தபடியே, ‘வாட்ஸ் ஆப்’பில் விவரக் குறிப்புகளை சொல்லியோ, ‘லேப் டாப்’பில் உள்ள புகைப்படங்களை மெயில் அனுப்பியோ ‘சான்ஸ்’ பிடிக்கும் நவீன தொழில்நுட்ப வசதி எதுவும் இல்லாத காலம் அது! ஆகவே, வித விதமான தோற்றங்களில் ‘புகைப்பட ஆல்பம்’ தயார் செய்து, அதை சினிமா கம்பெனிகளில் காட்டி ‘வாய்ப்பு வரம்’ கேட்க வேண்டும்! அங்கு கொடுத்துவிட்டு வந்த புகைப்படத்தைப் பார்த்து; உதவி இயக்குநர்கள் யாரவது மனம் இறங்கி நடிக்க கூப்பிடுவார்கள். அதுவும் கூட்டம் கும்பலில் வந்துபோகும் சின்ன சின்ன வேடமாகவே இருக்கும்! நடிகர் திலகம் மாதிரி, முதல் படத்திலேயே ஹீரோவாகும் அதிர்ஷ்டம் எல்லோருக்கும் அமையுமா? ஆனானப்பட்ட மக்கள் திலகத்துக்கே முதல் சான்ஸ் கூட்டம் கும்பலில் வந்து போகும் ‘போலீஸ் வேடம்’ தானே! ஆனா, நம்ம ஆளு, ‘கிடைக்கும் வாய்ப்பை கெட்டியாகப் பிடித்துக் கொண்டு முன்னேற நினைக்காமல், ‘நடிச்சா ஹீரோ சார்’ என சிங்கப் பாதையை தேர்ந்தெடுத்து; பதுங்கிப் பாய காத்திருந்தார். பிறகு, மறுபடியும் ‘வேதாளம்’ முருங்கை மரம் ஏறியது! பழையபடி ‘பைக் ரேஸ்’ மீது கிரேஸ் ஏற்பட்டது. ஒப்புக்கு சப்பாணியாக தொழிலை பார்த்தபடி, ‘பைக் ரேஸ்’ என்கிற வீர விளையாட்டில் இறங்கினார். அது அவருக்கு ‘மரண விளையாட்டாக’ மாறியது! ஆம், மோட்டார் பந்தயத்தில் பங்கேற்ற அந்த இளைஞன், விபத்தில் சிக்கினான்! சினிமாவில் சாதிக்கும் துடிப்பில் இருந்த அவரைத் துள்ளத் துடிக்க மருத்துவமனைக்கு தூக்கிப் போனார்கள்..! இதில் இருந்து எப்படி மீண்டுவந்தார்... முதல் படம் எப்படி அமைந்தது என்பதைப் பற்றி நாளை பார்க்கலாம். - தொடரும்

Advertisement:
[X] Close