அஜித் - தி அன்டோல்டு ஸ்டோரி 7: அஜித்தின் வாழ்க்கையையே புரட்டிப் போட்ட ' அந்த' ஒரு படம்!

  பா.பிரவீன் குமார்   | Last Modified : 22 Aug, 2017 07:48 pm

நடித்த படங்கள் எதுவுமே கை கொடுக்கவில்லை; தொடர் தோல்விகள், விபத்தில் சிக்கிய வேதனை வேறு! இதனால், கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகி, கிட்டத்தட்ட சினிமாவே வேண்டாம் என்கிற முடிவுக்கு வந்து விட்டார் அஜித். ஆனால், பிரச்னைகளிலிருந்து விலகி ஓடுவது அவரின் இயல்பு இல்லையே! சோதனைச் சூறாவளியையும், புரட்டிப்போட வரும் புயலையும் எதிர்த்து நின்று சிரிப்பவர் அவர்! அப்படித்தான் ‘பவித்ரா’ படத்தில் நடிக்கக் கிளம்பினார். தினமும் வீல் சேரில் வந்து படப்பிடிப்பில் பங்கேற்று, ‘பவித்ரா’ படம் முடியும் வரை படுத்துக்கொண்டே நடித்தார். வாஹிணி ஸ்டுடியோவின் ஒரு ஃபுளோரையே மருத்துவமனையாக மாற்றி ‘பவித்ரா’ படப்பிடிப்பு நடந்துகொண்டிருந்தது. அந்த ‘செட்டு’க்கு திடீரென ஒரு இயக்குநர் ‘விசிட்’ அடித்தார். ஹிட் படம் கொடுத்தவர் என்பதால், அவரை புன்னகையோடு வரவேற்றார் ‘பவித்ரா’ பட இயக்குநர் கே.சுபாஷ். அவரின் இயக்கத்தில் நடித்துள்ள ராதிகா வந்து; அவருடன் மனம் விட்டுப் பேசிக் கொண்டிருந்தார். அந்த இயக்குநரை அடையாளம் தெரிந்தாலும், அறிமுகம் இல்லாததால் ‘ஹாய் சார்...’ மட்டும் சொல்லிவிட்டு தனது வேலையில் பிஸியானார் அஜித். அஜித்தை கிராஸ் செய்தபடியே, “பையனோட பெர்ஃபார்மன்ஸ் எப்படி?” என அந்த இயக்குநர் கேட்க, “ ஹ்ம்ம்... பிண்றான். நல்ல ஃபியூச்சர் இருக்கு” என ராதிகா சர்டிபிகேட் கொடுத்தார். பிறகு, ஆபரேசன் செய்த உடம்பு பூரணமாக குணமாகும் முன்; வலி தாங்கி, வீல் சேரில் வந்து நடிக்கும் அஜித்தின் அர்ப்பணிப்பை நினைத்து நெகிழ்ந்து போனார் அந்த இயக்குநர். அஜித்தை நலம் விசாரித்த அவர், "தம்பி...வளர்ந்து வர்ற நேரத்துல ‘ரிஸ்க்’ எடுக்காதீங்க! சுவர் இருந்தாத்தான் சித்திரம் வரைய முடியும்! உடம்பு பத்திரம்” என சொல்லி சென்றார். உள்ளபடியே, அந்த இயக்குநர் அங்கு வந்ததே அஜித்துக்காகத் தான், அவரை ரகசியமாகக் கண்காணிப்பதற்காகத் தான். ஆனால், அதை அவர்; வெளிப்படையாகக் காட்டிக்கவே இல்லை! ‘பவித்ரா’ வின் பட வேலைகள் முடிந்து, ஃபர்ஸ்ட் காப்பி ரெடியானது! அப்போதும் அந்த இயக்குநர் வந்தார், முழுப்படத்தையும் பார்த்துச் சென்றார். படம் தயாரிப்பாளரின் கையைக் கடிக்காமல் ஓடியது... அதன்பிறகு 'ராஜாவின் பார்வையிலே' என்று சென்று கொண்டிருந்தது அஜித் வாழ்க்கை... ஒருநாள், ஆலயம் பட நிறுவனத்திலிருந்து அஜித்துக்கு அழைப்பு வந்தது! இயக்குநர் மணிரத்னத்தின் தயாரிப்பில், அஜித் அறிமுகமாக இருந்த அதே பட நிறுவனம் தான். முதல் வாய்ப்பு தட்டிப் போனதால், மறுவாய்ப்பு தருவதற்காக வந்த அழைப்பு அது. அடித்துப் புரண்டு ஆலயம் பட கம்பெனிக்கு ஓடினார் அஜித். அங்கே, அஜித்துக்கு ஒரு இன்ப அதிர்ச்சி காத்திருந்தது. ‘பவித்ரா’ படப்பிடிப்புக்கு வந்த அதே இயக்குநரை அங்கு எதிர்பார்க்கவில்லை அஜித். ஆலயம் பட நிறுவனத்துக்காக அவர் இயக்கப் போகும் படத்தில் ஹீரோவாக நடிக்கத் தான் வரவழைத்திருந்தனர் எனத் தெரிய வந்ததும் இன்ப அதிர்ச்சி அலை அதிகமானது. அந்த இயக்குநர் வஸந்த்! மணிரத்னம் படத்தில் நடிக்கும் ஆசையை நிறைவேற்றிய அந்தப் படம் ‘ஆசை’. இந்தக் கதைக்கு ஒரு அழகான இளைஞனைத் தேடிய இயக்குநர் வஸந்த், ‘பவித்ரா’ படத்தின் ‘ரஷ்’ பார்த்து அஜித்தை 'டிக்' செய்ய, ஏற்கனவே தேர்வான இளைஞன் என்பதால்; தயாரிப்பாளர் என்கிற வகையில் மணிரத்னமும் ‘ஓகே’ செய்தார். அஜித்துக்கு, அப்படி அடித்த யோகம் தான் ‘ஆசை’. அதுவரை அமாவாசை இருள் சூழ்ந்திருந்த அஜித்தின் வாழ்க்கையில் ‘விடியல்’ வந்தது. ‘ஆசை’ படம் வந்து தான் பிரகாசமான எதிர்காலத்துக்கு அஸ்திவாரம் போட்டுக் கொடுத்தது. 1996-ல் வெளிவந்த இந்தப் படம் ரசிகர்களின் அமோக ஆதரவோடு பல சென்டர்களில் 200 நாட்கள் ஒடி வசூலை அள்ளியது. அஜித்தின் திரைப் பயணத்தில் அவர் சந்தித்த முதல் வெள்ளி விழாப் படம் இது தான். இதில் அஜித்துக்கு ஜோடியாக வந்த ‘கல்கத்தா ரசகுல்லா’ சுபலட்சுமிக்கும் இது தான் முதல் படம். ‘மச்சினிச்சி மேல ஆச வச்ச மதுரவீர சாமிக்கு மாறு கால் மாறு கை போச்சாம்..!’ -கவிஞர் விக்கிரமாதித்யனின் இந்த சத்தான கவிதை தான் ஆசை படத்தின் கதைக்கு வித்தாக இருந்தது. இதில், சுபலட்சுமியின் காதலன் கதாப்பாத்திரத்தில் அஜித் நடிக்க, ‘மச்சினிச்சி மேல ஆச வச்ச’ அக்கா கணவராக வந்து வில்லத்தனம் செய்தார் பிரகாஷ்ராஜ். “மச்சினிச்சி மேல ஆச வைக்கறதெல்லாம் ‘அதரப் பழசு’னு சொல்லி பல பேர் இடது கையால் தள்ளிய இந்தக் கதைக்குள் இருந்த உன்னதமான உணர்வுகளை மணி சாரால மட்டும் தான் இனம் கண்டுபிடிக்க முடிஞ்சது. ஒரு திறமசாலிய அடையாளம் கண்டுக்க இன்னொரு திறமசாலியால தான முடியும்! இது எனக்கு மட்டுமல்ல, அஜித்துக்கும் பொருந்தும்! அவருக்கு, ‘ஆசை’ தான் முதல் ‘பிரேக்’! இதுல எனக்கு பெருமைதான். ஆனா, இன்று அவர் தொட்டிருக்கற உயரம் முழுக்க முழுக்க அவரோட முயற்சிக்கு கிடச்சது. ‘ஆசை’ படத்துக்கு ஒரு அழகான பையன் தேவைப்படவே; நிறைய பேரப் பாத்தோம். ஆனா, அஜித்தை பாத்ததுமே, ‘இவர் தான் ஹீரோ’ன்னு முடிவு பண்ணிட்டேன். ‘16 வயதினிலே’ மாதிரி வில்லன்-ஹீரோ ரெண்டுபேருமே பேசப்படுவாங்க. ஒங்கிட்ட அந்த ஃபயர் இருக்கா?’னு கேட்டேன். அந்த நெருப்பு இப்ப வரை அவர்கிட்ட அணையாமலே இருக்கு!” என பெருமை பொங்க ‘ஆசை’ நினைவுகளை அசை போட்டார் இயக்குநர் வஸந்த். ‘பவித்ரா’ என்கிற தோல்விப் படத்தால் அஜித்துக்கு, ‘ஆசை’ என்கிற ஒரு சூப்பர் ஹிட் அமைந்தது போல, இன்னொரு ‘சூப்பர் ஹிட்’ படம் கிடைக்கவும், ஒரு தோல்விப் படம் தான் காரணமாக இருந்தது! எவை அந்தப் படங்கள்? நாளை பார்க்கலாம்...

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.