தவிர்க்க முடியாத இயக்குநர்களின் காதல் பிம்பங்கள்!

  சாரா   | Last Modified : 14 Feb, 2020 06:57 pm

"மனிதர்களை ஒன்றுமில்லாதவர்களாக உணரச் செய்வதற்காக வாழ்த்து அட்டை நிறுவனங்கள் உண்டாக்கிய விபரீதம்தான் காதலர் தினம்" என்றொரு வசனம் 'எட்டர்னல் சன்ஷைன் ஆஃப் தி ஸ்பாட்லெஸ் மைண்ட்' படத்தில் வந்து போகும். காதலர் தினத்தின்போது சிங்கிளாக இருக்கும் பலரும் இதே மனநிலையில்தான் 'கெத்து சிங்கிளாக' இருப்பதாக உலகிற்கு பறைசாற்றிக் கொண்டிருப்பார்கள். காதலை இழந்ததாக உணரும்பொழுதுகளில் எல்லாம் இந்த வசனம் பலருக்கும் பெரிய ஆறுதலாக இருக்கலாம். ஆனால், சில பிம்பங்கள் அந்த ஆறுதலின் ஆழமின்மையை அசைத்து பார்க்கவல்லவையாக இருக்கும். திரையில் தோன்றும் அந்த ஒரு காட்சி, நீங்கள் இப்போதே காதலிக்கப்பட வேண்டும் என்றொரு பேராவலையும், மன வலியையும் ஒருசேர தரும். கண நேரத்தில் பதற்றம், தவிப்பு என கலவையான உணர்ச்சிகளை கடக்கச் செய்யும்.

உலகம் முழுதும் இருக்கும் காதல் கலைஞர்கள் இப்படி காதலைத் தொழுது சினிமாவாக்கி அழகு பார்த்திருந்தாலும், தமிழ் சினிமாக்களுக்கும் காதலுக்கும் இருக்கும் பந்தத்தை பற்றி எழுத வேண்டும்தானே? தமிழ்த் திரை உலகில் தவிர்க்க முடியாத 7 இயக்குநர்கள் படைத்த மனக்கிளர்ச்சியை உண்டாக்கும் காதல் பிம்பங்களின் ஒரு தொகுப்பு.

1. வண்ண வண்ண பூக்கள் - பாலு மகேந்திரா: காட்டில் தற்கொலை செய்துகொள்ளப் போகும் பெண்ணொருத்தியை காப்பாற்றுவார் சிவா. காட்டில் ஒன்றாய் வாழ்க்கை நடத்த நேர்கையில் இயல்பாய் இருவரும் காதலில் இருப்பார்கள். மீதிக்கதையை தெரிந்துகொள்ள விரும்புவர்கள் படத்தை பாருங்கள். எனக்கு படத்தில் பிடித்தது காதலர்களுக்கு இடையே இருக்கும் நெருக்கம்; தங்கள் உலகில் வேறு யாருமே இல்லாதது குறித்த நினைவேயின்றி, காதலின் அருகாமையையும் வெம்மையையும் கொண்டாடக் கூடிய இருவரைப் பார்ப்பதே ஆச்சரியமாக இருக்கும். வினோதினியின் கால்கள், மௌனிகாவின் கண்கள், இளையராஜாவின் இசை என ஒரு முழு படைப்பாக, விருந்தாக அமைவது 'வண்ண வண்ண பூக்கள்'.

2. சலங்கை ஒலி - கே.விஸ்வநாதன்: ஒன்று சேர்ந்து வாழ முடியாத காதலியின் குங்குமம் கூட அழியக் கூடாது எனும் ஒருவரின் பெருந்தன்மையை ரசிக்கும் அளவு எனக்கு மனப்பக்குவம் வந்துவிடவில்லை. நான் பார்த்து பிரமித்தது, கமல்ஹாசனும் ஜெயப்பிரதாவும் பரிமாறிக் கொள்ளும் பார்வைகளும், இருவரின் இளமையும். படத்தைப் பார்க்கும் போதெல்லாம் 'இருவரும் குறுகிய காலமே நெருக்கமாக இருந்தாலும், எப்படி இந்தக் காதல் போதுமானதாகவே இருக்கிறது?' எனத் தோன்றும். கமல்ஹாசனின் காதல் பார்வைகள், ஜெயப்பிரதா மற்றும் 'மௌனமான நேரம்' பாடல் உண்டாக்கும் கிறக்கம் நின்று பேசும்.

3. சிந்து பைரவி - கே.பாலச்சந்தர்: ஜேசுதாஸ் குரலில் ஒலிக்கும் பாடல்களை விட இந்தப் படத்தில் அழகானதாக நான் நினைப்பது பைரவி எனும் ஆளுமையை. சிந்துவோடு இருக்கும்போது தான் ஜே.கே.பி சந்தோஷமாக இருக்கிறான் என தெரிந்ததும், சிந்துவிற்கும் தன் கணவனுக்கும் திருமணம் செய்துவைக்க நினைக்கும் பைரவியை அவ்வளவு எளிதாக புரிந்து கொள்ள முடியாது. நிச்சயமாக சஞ்சலம் இருக்கத்தான் செய்யும்; எனினும், திருமணத்திற்கு ஏற்பாடு செய்து, சிந்துவை சமரசம் செய்ய முயற்சிக்கும் துணிச்சல் அசாத்தியமானது. சிந்து - ஜேகேபி; ஜேகேபி - பைரவி; பைரவி - சிந்து என மூன்று காம்போக்களில் வரும் காதலும் ஈர்ப்பவையாகவே இருக்கும்.

4. ஆசை - வசந்த்: வசந்தின் பெரும்பாலான சினிமாக்களில் எப்போதுமே பெண்மைதான் ஹைலட்டாக இருந்திருக்கிறது. படத்தில் இருக்கும் மிதமிஞ்சாத யதார்த்தம், காட்சி செய்யப்பட்டிருக்கும் காதலின் தொடக்கத்தில் உண்டாகும் படபடப்பு, அவ்வளவு குறும்புத்தனம் - இதெல்லாம் இன்று #RelationshipGoals. சுவலட்சுமிக்கு இணையாக அஜித் கண்களில் இருக்கும் குறுகுறு பார்வையும் அதற்கு பிறகு பார்க்கவே இல்லை.

5. இருவர் - மணிரத்னம்: மோஹன்லால் - கௌதமி, ஐஸ்வர்யா ராய் (எந்த பாத்திரம் என்பதை நீங்கள் தேர்வு செய்து கொள்ளலாம்); பிரகாஷ் ராஜ் - ரேவதி; தபு - பிரகாஷ்ராஜ்; மோஹன்லால் - பிரகாஷ் ராஜ்... இப்படி மாறி மாறி திரையில் தோன்றும் இணைகளே கண்ணுக்குப் பெரும் விருந்தாக இருக்கும். ஆனாலும் ஹைலாட்டாவது என்னவோ காதல்தான். பெரிதும் மெனக்கெட்டு, அழகியலோடு எடுக்கப்பட்டிருக்கும் படத்தில் , அரவிந்த்சுவாமியின் குரலில் ஒலிக்கும் கவிதை ஒன்று போதும், நீங்கள் இல்லாத காதல் நினைத்து கரைய!

6. டும் டும் டும் - அழகம்பெருமாள்: விருப்பமில்லாமல் நடத்தப்படும் திருமணத்தை நடத்த கூட்டு சேரும் இருவர் காதல்கொண்டு இணைய விரும்புவதுதான் கதைக்களம். ஜோதிகா, மாதவன், முரளி, எம்.எஸ்.பாஸ்கர், மணிவண்ணன் என பல ஆளுமைகள் களமிறங்கியிருந்தாலும், ஹீரோ என்னவோ ரொமான்ஸ்தான். கல்யாணத்தை நிறுத்த செய்யும் விஷமங்களும், கல்யாணம் நடக்கட்டுமே என அற்பமாய் ஆசைப்படுவதும், அதன்பிறகு காதலிப்பதும் அட்ரினலினை அதிகமாகவே சுரக்கச் செய்யும். கங்கா, ஆதித்தியா உடன் சேர்ந்து அதிகம் வசீகரீப்பது படத்தில் இருக்கும் பாடல்களும், திரைக்கதையும். அழகம்பெருமாளை திரையில் பார்க்க நேர்ந்தாலும் கூட, அவர் தொடர்ந்து படம் இயக்காதது அங்கலாய்ப்பு.

7. கற்றது தமிழ் - ராம்: நாம் எல்லோரும் தேடி தேடிச் சலித்துப் போகிற ஒரு கிறுக்குத்தனமாக, ஃபேண்டஸியான காதலை சொல்லியிருக்கும் படம் இது. படத்தை பார்த்துக் கொண்டிருக்கும் போதே நீங்கள், திடீரென பெயர் தெரியாத ஏதோ வறண்ட மாநிலத்தில் நின்றுகொண்டு காதலைத் தேடுவதாக உங்களுக்கு தோன்றும் - பயணமும், காதலும் எப்போதுமே நல்ல காம்போ தானே?! காதலைக் கண்டதாய் நம்பி மீள்வீர்கள்.

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close