படையப்பாவுக்கு பாயை விரி... ரசிகர்களுக்கு கையை விரி... ’Money' வழியில் ரஜினி!

  ஆர்.எம்.திரவியராஜ்   | Last Modified : 19 Jul, 2018 02:37 am

rajinikanth-on-way-to-money

அரசியல் அறிவிப்புக்குப் பிறகு இமயமலைக்கு ஆன்மிகப் பயணம் சென்ற ரஜினிகாந்த், ‘காலா’ ஷூட்டிங் முடிந்ததும் அமெரிக்காவுக்குச் சென்று வந்தார். அமெரிக்காவில் இருந்து சென்னை திரும்பிய ரஜினி, ‘காலா’ பாடல் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டபோது தீவிர அரசியல் அறிவிப்பை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால்,‘காலா’ ரிலீஸ், கார்த்திக் சுப்புராஜ் படத்தில் கமிட்மெண்ட் என்று ரஜினியின் சினிமா ஷெட்யூல்டே பரபரப்பாக நடந்து வருகிறது.

ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்த ‘2.0’ படம் ரிலீஸ் ஆன சில வாரங்களிலேயே குறுகியகால தயாரிப்பான கார்த்திக் சுப்புராஜ் படமும் ரிலீஸ் ஆகிவிடும். இந்த இரண்டும் நடந்தேறிய பிறகு ரஜினி சினிமாவுக்கு முழுக்குப் போட்டுவிட்டு தீவிர அரசியலில் இறங்குவார் என காத்திருந்தால் அதிலும் அவரது ரசிகர்களில் கழுத்தில் கத்தி வைக்கிறது சினிமா உலகம்! ரஜினி அடுத்தடுத்து நான்கு படங்களில் நடிக்க கால்ஷீட் கொடுத்துள்ளார் என்ற செய்தி அவரது ரசிகர்களை வாட்டி வதைக்கிறது.

 

அதாவது, கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ஒரு படம், லிங்குசாமி இயக்கத்தில் ஒரு படம், சங்கிலி முருகன், சூப்பர்குட் ஆர்.பி.சௌத்ரி ஆகியோருக்கு தலா ஒரு படம் நடிக்கப்போவதாக சொல்லப்படுகிறது. ஆனால் சினிமா வட்டாரங்களில் விசாரித்தால், கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் நடிக்கப்போவது மட்டும் உண்மை என்ற தகவல் உறுதி செய்யப்படுகிறது.

அப்படியெனில் இப்போதைக்கு ரஜினி தீவிர அரசியலில் ஈடுபடப் போவதில்லையா? ‘’எங்க தலைவர் எதைச் செய்தாலும் தெளிவான முடிவோடுதான் செய்வார். அரசியலுக்கு வரப்போவதாக அவர் அறிவித்து ஆறு மாதங்கள் ஆகியிருக்கலாம். ஆனால் அறிவிப்புக்குப் பிறகு மன்றத்துக்குள் எத்தனையோ வேலைகள் நடந்திருக்கின்றன. தொடர்ந்து நடந்துகொண்டிருக்கின்றன. கட்சிக்கொள்கைகள் வகுக்கப்பட்டு, தமிழக மக்களுக்கான பல நலத் திட்டங்கள் தீட்டப்பட்டு தயார் நிலையில்தான் இருக்கிறோம். தலைவர் படப்பிடிப்புத் தளத்தில் இருந்தாலும் மக்கள் மன்றப் பணிகள் பற்றி அடிக்கடி கேட்டுக் கொண்டு அவ்வப்போது ஆலோசனை கொடுத்துக்கொண்டும்தான் இருக்கிறார். எதிர்கட்சிகள், மீடியாவின் குரலுக்கு செவிசாய்த்து பதில் கொடுத்துக் கொண்டிருக்காமல் மக்கள் மன்றப் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துங்கள் என்று எங்களுக்கு வாய்மொழி உத்தரவு கொடுத்திருக்கிறார்.

தலைவரின் அமெரிக்கா பயணத்திலும் அரசியல் செயல்திட்டங்கள் இருந்தன. அங்குள்ள பொருளாதார நிபுணர்களை சந்தித்து மக்களுக்கு, தான் செய்ய விரும்பும் நலத் திட்டங்களை சொல்லி அவர்களின் ஆலோசனைகளையும் கேட்டிருக்கிறார். ஆக, அவர் எந்த இடத்தில் இருந்தாலும் என்ன செய்துகொண்டு இருந்தாலும் மக்கள் பணி பற்றியேதான் யோசித்துக்கொண்டிருக்கிறார். தொடர்ந்து சினிமாவில் நடித்தாலும் தீவிர அரசியலுக்கான வேலைகளையும் செய்துகொண்டுதான் இருக்கிறார்" என்கின்றனர் அவரது மக்கள் மன்றத்தினர். 

தொடர்ந்து நான்கு சினிமாவில் நடிக்கப்போவது உண்மையா?" என்று ரஜினிக்காகவே நடத்தப்படும் ‘என் வழி’ இணையதள ஆசிரியர் சங்கரிடம் கேட்டபோது, இந்த விஷயத்தில் ரஜினி சார் எம்ஜிஆரை ஃபாலோ செய்கிறார். அதாவது, முதலமைச்சர் ஆகும்வரைக்கும் எம்.ஜி.ஆர்., சினிமாவில் நடித்துக் கொண்டிருந்ததுபோல ரஜினி சாரும் நடிப்பார். கார்த்திக் சுப்புராஜ் படம் முடிந்ததும் கே.எஸ்.ரவிகுமார் இயக்கும் படத்தில் நடிக்கப்போவதும் அதைத் தொடர்ந்து சில படங்கள் நடிக்கப்போவதும் உண்மைதான். ஆனால், லிங்குசாமி இயக்கத்தில் நடிக்க வாய்ப்பில்லை. ‘உத்தம வில்லன்’ படத்தை தயாரித்த லிங்குசாமி அந்தப் படம் ரிலீசுக்குப் பிறகு ‘ரஜினி முருகன்’ படத்தின் டைட்டிலில் ரஜினி சார் பெயரை பயன்படுத்த அனுமதி கேட்பதற்காக அவரை சந்திக்கச் சென்றார்.

இதற்குமுன் தனது பெயரை சினிமா தலைப்புகளில் பயன்படுத்த சம்மதிக்காத ரஜினி சார் ‘ரஜினி முருகன்’ டைட்டிலுக்கு சம்மதம் கொடுத்தார். அப்போது சில விஷயங்களை லிங்குசாமியிடம் கேட்டுத் தெரிந்துகொண்டார் ரஜினி. அந்த சமயத்தில் லிங்குசாமிக்கு ஒரு படம் நடித்து தரும் எண்ணம்கூட அவருக்கு இருந்திருக்கலாம். ஆஸ்கார் பிலிம்ஸ் தயாரிப்பில் லிங்குசாமி இயக்கப் போகிறார் என்றும் அப்போது பேசப்பட்டது. அதன்பிறகு அது நடக்கவில்லை. அதேபோல் சங்கிலி முருகன், ஆர்.பி.சௌத்ரி தயாரிப்பில் நடிக்க இதுவரை ரஜினி சார் கமிட் ஆனதாக தெரியவில்லை.

ஆனால் ‘அருணாச்சலம்’ படத்தில் எட்டு தயாரிப்பாளர்களை பார்ட்னர் ஆக்கியதுபோல நான்கைந்து தயாரிப்பாளர்களை பார்ட்னராக்கி ஒரு படத்தில் நடிக்க ரஜினி சாருக்கு திட்டம் இருக்கிறது. எந்தப் படம் கமிட் பண்ணினாலும் 40 நாட்கள் கால்ஷீட் என்ற அடிப்படையில்தான் ஒப்பந்தம் செய்துகொள்கிறார். ஒருபக்கம் படங்களை கமிட் பண்ணினாலும் அரசியல் வேலையும் அனல் பறந்துகொண்டுதான் இருக்கிறது. அநேகமாக நவம்பர் மாதம் கட்சிப் பெயரையும் தீவிர அரசியல் அறிவிப்பையும் நாட்டுக்குச் சொல்வார் என்று நம்பலாம்" என்கிறார். 

விடுகதையைப்போல குழப்பமாக இருக்கிறது ரஜினி அரசியல்..? இரட்டை குதிரை சவாரி செய்ய ரஜினியிடம் வேண்டுமானால் சக்தி இருக்கலாம்... ஆனால் எத்தனை காலம் காத்திருந்த அவரது ரசிகர்கள் இன்னும் சோர்ந்து விட்டார்கள்! படையப்பா 2வுக்கு பாயை விரி, ரசிகர்களுக்கு தற்போது கையை விரி என மணி வழியில் சென்று கொண்டிருக்கிறார் என்கிறார்கள் விரக்தியாகும் அவரது ரசிகர்கள் சிலர். 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close