தர்பார் படம் யாருக்கு உண்மையான லாபம்? கள நிலவரம் என்ன?

  சாரா   | Last Modified : 10 Jan, 2020 05:36 am
is-dabar-loss-or-profit-movie

சூப்பர் ஸ்டார் ரஜினியின் ஒவ்வொரு பட ரிலீஸின் போதும் படத்தின் தயாரிப்பாளர்களும், திரையரங்கு உரிமையாளர்களும், திரைப்பட விநியோகஸ்தர்களும் படத்தை வாங்குவதற்கும், வெளியிடுவதற்கும் மாஸ் காட்டுவார்கள். படம் ரிலீஸாகி ஒரு வாரம் சென்றதும் படம் பெரிய நஷ்டம் என்று கணக்கு காட்டி கண்ணீர் வடிப்பார்கள். படம் எத்தனை கோடிகளை வசூலித்தாலும், படம் நஷ்டத்தை ஏற்படுத்தியது என்று நீலி கண்ணீர் வடிப்பதையே இத்தனை நாட்களாக ரஜினி படங்களின் வெளியீட்டில் வாடிக்கையாக கொண்டிருந்தார்கள்.

இந்நிலையில், இன்று பலத்த வரவேற்புடன் தர்பார் ரிலீஸான நிலையில், படம் பெரிய நஷ்டத்தைச் சந்திக்கும் என்று புள்ளிவிவர கணக்கை எடுத்து வைக்கிறார்கள் திரையுலக நிபுணர்கள்.

லைகா தயாரிப்பில், முருகதாஸ் இயக்கத்தில், ரஜினிகாந்த், நயன்தாரா மற்றும் பல நட்சத்திர பட்டாளங்களே நடித்துள்ள 'தர்பார்' இன்று அதிகாலை சிறப்பு காட்சிகளுடன் வெளியானது. ரஜினி ரசிகர்கள், தங்கள் தலைவரின் ஸ்டைலிஷ்ஷான நடிப்பையும், இளமை ததும்பும் காட்சிகளையும் பார்த்து படத்தைக் கொண்டாடி வருகிறார்கள். படம் முழுக்கவே ரஜினி ரசிகர்களை மனதில் வைத்தே முருகதாஸ் இயக்கியிருக்கிறார். படம் ரஜினி ரசிகர்களுக்கு முழு விருந்தாக அமைந்திருக்கிறது என்பதில் சந்தேகமேயில்லை. ஆனாலும், முதல் பாதி மட்டுமே வெகு ஜன ரசிகர்களைக் கவர்வதாகவும், படத்தின் பிற்பகுதி தியேட்டரில் ரசிகர்களை நெளிய வைப்பதாகவும் கருத்துக்கள் வெளியாகியிருக்கின்றன.

சரி.. இனி படத்தின் பட்ஜெட் விஷயத்துக்கு வருவோம். தர்பார் படத்தின் பட்ஜெட் சுமார் 200 கோடியையும் தாண்டியுள்ளது என்கிறார்கள். தர்பார் படத்தில் நடிப்பதற்காக ரஜினிக்கு சம்பளம் மட்டுமே 100 கோடி ரூபாய் கொடுத்திருப்பதாகச் சொல்கிறார்கள். அதன் பிறகு படத்தின் இயக்குநர் முருகதாஸுக்கு 25 கோடி ரூபாய் சம்பளம். நயன்தாராவுக்கு 4 கோடி, இசையமைப்பாளர் அனிருத்துக்கு 5 கோடி என்று படத்தில் பணியாற்றியிருப்பவர்களின் சம்பளங்கள் மட்டுமே 150 கோடியைத் தாண்டியுள்ளது என்று புள்ளிவிவரக் கணக்கை எடுத்து வைக்கிறார்கள்.

இது தவிர படத்தின் ஷூட்டிங், இசைக் கோர்பு, பப்ளிசிட்டி செலவுகள் தனி. இந்த செலவுகளை எல்லாம் ஈடுகட்டும் அளவிற்கு செலவு செய்த பணத்திற்கும் மேல் படத்தின் வியாபாரம் அமைந்தால் தான் படம் வெற்றி. தர்பார் படத்தின் வியாபாரம் மொத்தமாக 200 கோடியைத் தொடுவதே சிரமமாக இருந்த நிலையில் தர்பார் ரிலீஸாகியிருக்கிறது. அதுவும் சுமார் 7,000 திரையரங்குகளில் ரிலீஸாகியிருக்கிறது. தமிழகத்தில் இதுவரையில் பிகில் படம் தான் அதிக தியேட்டர்களில் ரிலீஸாகியிருந்தது. அந்த சாதனையைத் தகர்த்து, இதுவரையில் வெளியான தமிழ் படங்களிலேயே அதிக எண்ணிக்கையிலான திரையரங்குகளில் வெளியிடப்பட்ட படம் என்கிற பெருமையையும் தர்பார் அடைந்திருக்கிறது. 

தமிழ்நாடு 60 கோடி, இந்தி உரிமை 15 கோடி, கேரளா 6 கோடி, கர்நாடகா கோடி9, ஆந்திரா, தெலங்கானா 10கோடி, சாட்டிலைட் உரிமை 33கோடி, டிஜிட்டல் ரைட்ஸ் 23கோடி, வெளிநாட்டு உரிமை 30 கோடி என்று சுமார் 185 கோடி வரை தான் வியாபாரம் நடைபெற்றுள்ளதாகச் சொல்கிறார்கள். 

படத்தின் ரிலீஸ் நாள் நெருங்க நெருங்க, வினியோகஸ்தர்களிடம் அதிகமான அட்வான்ஸ் தொகை கேட்டு நெருக்கியதாலும்,  வினியோக முறையில் தயாரிப்பாளருக்கான சதவீதத்தை அதிகமாக நிர்ணயித்திருந்ததாலும் தமிழகத்தின் பல ஊர்களில் தர்பார் ரிலீஸ் அதிக எண்ணிக்கையில் நடைப்பெறவில்லை. 

வேலை நாளில் படம் வெளியிட்டது சரியில்லை என்று படம் வெளியான முதல் நாளிலேயே வினியோகஸ்தர்கள் புலம்ப துவங்கியிருக்கிறார்கள். படம் வெளியான இன்றும், நாளையும் வேலை நாள் என்பதால் முந்தைய ரஜினி படத்தின் வசூலைக் கூட இந்த இரண்டு நாளில் எடுப்பது சிரமம் தான் என்றும், படத்தின் டிக்கெட்டுகளை அதிக விலைக்கு விற்க சொல்வதால் திரையரங்குகளிலும் இழுபறி நீடிக்கிறதாகச் சொல்கிறார்கள்.  படம் வெளியான இன்றே இணையதளங்களிலும் அதே தரத்துடன் படத்தை திருட்டுத்தனமாக வெளியிட்டு தமிழ் ராக்கர்ஸும் திரையரங்கு உரிமையாளர்களின் வயிற்றில் புளியைக் கரைத்திருக்கிறது. தர்பார் படத்தை தயாரித்தவர்களுக்கும், படத்தில் நடித்திருப்பவர்களுக்கும் மட்டுமே லாபகரமானதாக இருக்கும் என்றும், மற்றவர்களுக்கு சந்தேகம் தான் என்பதே இப்போதைய நிலையாக உள்ளது. 

newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close