#BiggBoss Day 12: மேட்டிமைவாதமும், போலி முகங்களும்!

  கார்தும்பி   | Last Modified : 01 Jul, 2018 12:43 am
biggboss-day-12

"எஜமானர்கள் எல்லாம் சேர்ந்து வேலைக்காரங்கள தேர்தெடுத்தாங்க ஆனால் காலத்தின் கோலம் பாருங்க, வேலைக்காரங்க எல்லாம் எஜமானர்கள் ஆகிட்டாங்க" என்று கமல்ஹாசன் முன்மொழியும் காட்சி, புரோமோவாக இருந்த சனிக்கிழமை சிறப்பு பிக் பாஸ் நிகழ்ச்சி திருப்தியளிக்கும் அளவு நீண்ட உரையாடல்களை கொண்டிருந்தது.

"ஏன் கண்டஸ்டண்ட்ஸ் எல்லாம் ஃபேக்கா இருக்காங்க?" எனும் ஆடியன்ஸ் கேள்வியின் தொடர்ச்சியாக அகம் வழியே இல்லத்திற்குள் நுழைந்தார்கள் கமல்ஹாசனும், பார்வையாளர்களும். ஆனந்த் வைத்தியநாதன் "இன்றொரு தகவல்" பாணியில், கேமரா பக்கத்தில் வந்து க்ளோசாக நின்று கொண்டு ஏதோ ஒரு மொக்கை தத்துவத்தை மொக்கையாக விவரித்துக் கொண்டிருந்தார். அவ்வளவு க்ளோஸ்-அப்பாக இருந்த காட்சியை என்ன தைரியத்தில் விஜய் தொலைகாட்சி ஒளிபரப்பியது என்று புரியவில்லை. 

செண்ட்ராயன் ஊறுகாயை மும்தாஜ் டிரெஸ் மீது தெரியாமல் தட்டிவிட, சில நொடிகளுக்கு கூச்சலிட்டு செண்ட்ராயனை பெருமளவு அச்சுறுத்தினார் மும்தாஜ். செண்ட்ராயன் அசடு வழிய 'சாரி சாரி' என திரும்ப திரும்ப சொல்லிக் கொண்டிருந்தார். ஒரு கட்டத்தில் ஏதோ தோன்ற "டிரெஸை விட மனுஷங்க தான் முக்கியம்.. உங்க மனசு ஒடஞ்சா அது கஷ்டம்" என்று செண்ட்ராயனிடம் மன்னிப்பும் கேட்டார் மும்தாஜ். முழு மனதோடு கேட்ட மாதிரி எல்லாம் தெரியவில்லையே என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கும் போதே, வீட்டிற்குள் இருக்கும் போலித்தனத்தை பற்றி விவாதத்தை தொடங்கினார் கமல்ஹாசன்.

தொடக்கத்தில் நான் நானாகவே இருக்கிறேன் என்று தைரியமாக எல்லாரும் சொல்லிக் கொண்டிருந்தபோது, வைஷ்ணவியை குறிப்பிட்டு பேசிய மஹத்தும், ரம்யாவும் அவரிடம் இருக்கும் போலித்தனத்தை பற்றி வெளிப்படையாகவே பேசினார்கள். அதற்கு முன்னர் வரை யாருமே போலியாக இல்லை என்று சொல்லியிருந்ததை உடனடியாக மாற்றி மமதியிடம் இருக்கும் போலித்தன்மையை சுட்டிக் காட்டினார் வைஷ்ணவி. மமதி போலியாக இருக்கிறார் என்றதுமே பெரும் கைதட்டல்.

மமதியை பற்றிய உரையாடல் அடுத்து மும்தாஜை பற்றியதாக மாறியது. சடுதியில், மும்தாஜ் மற்ற இருவருக்கு உணவு ஊட்டி விட்ட போது வராத ஆத்திரம் செண்ட்ராயனுக்கு ஊட்டி விடும் போது மட்டும் வந்ததை எள்ளலாக சொல்ல, கமலஹாசன் தனக்கே உரிய அச்சுறுத்தல் தொனியில் சிரித்துக் கொண்டே அங்கிருந்த பாகுபாட்டை சுட்டிக் காட்டினார். உடனே சுதாரித்த மும்தாஜ் 'இல்ல.. ஜோக்கா தான்' என்றதற்கும் விட்டுக் கொடுக்காமல் 'இதுவும் ஜோக்குதான்' என்றதெல்லாம் கமல்ஹாசனால் மட்டுமே செய்ய முடியும். 

மும்தாஜ் நட்சத்திர அந்தஸ்தோடு இருக்க நினைக்கிறாரா என்று காட்டமாகவே அடுத்த தலைப்பிற்கு போனார் கமல்ஹாசன். அந்த விவாதம் தலையை சுற்றி மூக்கை தொடுவதாகவே இருந்தது. என்றாலுமே, மும்தாஜின் மேட்டிமைவாதமும், அதன் விளைவாய் அவரே கையில் எடுத்திருக்கும் அதிகாரமும்தான் அங்கு விவாதத்திற்கு உள்ளானது. 

வழக்கமாக, ஒடுக்கப்படுவோரின் உரிமைகளை மறுத்துப் பேசுபவர்கள், முட்டாள்தனமாக எதையாவது சொல்லிவிட்டு உடனேயே "இது என்னுடைய கருத்து, இதைச் சொல்வதற்கு எனக்கு பேச்சு சுதந்திரம் இருக்கிறது" என்று உளறுவார்கள் இல்லையா? அதே தொனியில் தான் கடைசி வரை மும்தாஜ் பேசிக் கொண்டிருந்தார். பேச்சளவில் மரியாதையை திரும்ப திரும்ப வரவழைத்துக் கொண்டு, கிடைக்கும் கேப்பில் கமலுக்கு ஜால்ரா அடிக்க முயற்சி செய்து கொண்டிருந்த மும்தாஜின் முகத்தில் கொஞ்சம் கூட பணிவோ, மரியாதையோ தெரியவே இல்லை. பொன்னம்பலம், பாலாஜி, டேனியல், ஜனனி, வைஷ்ணவி, ரித்விகா என பலரும் இதை மறைமுகமாக சொல்ல முயற்சிக்கிறார்கள்.

வழக்கம் போலவே, பாலாஜி - நித்யா இருவருக்கும் இடையே உண்டாகிக் கொண்டே இருக்கும் பிரச்னைகளை நோக்கி திரும்பியது விவாதம். இல்லத்தில் இருக்கும் பாகுபாட்டை சுட்டிக் காட்ட 'நித்யா வெங்காயம் போடாததுக்கு திட்டுனீங்களே? மும்தாஜ் மைக் போடாததுக்கு ஏன் எதுவும் சொல்லல?' என்று கேட்டபோது யாருமே பதில் சொல்லவில்லை. பாலாஜி கொஞ்சம் கூட உரிமையே இல்லாமல், நித்யாவை அவமரியாதை செய்ததை, இரண்டு குறும்படங்கள் போட்டு காட்டி, மேலும் ஒருமுறை பாலாஜி யார் என்பது பார்வையாளர்களுக்கு காண்பிக்கப்பட்டிருக்கிறது. 

பாலாஜி - நித்யா கதை இரண்டு விஷயங்களை ஆணி அடித்தது போல உணர வைக்கிறது. 

1. ஆணாய் இருக்கும் பாலாஜி சொல்லும் அநியாய விளக்கங்களை இந்த உலகம் காது கொடுத்து கேட்கும். 

2. பெண்ணாய் இருக்கும் நித்யா, எவ்வளவு தூரம் எகிறி அடிக்காமல் பணிந்து செல்கிறாரோ அவ்வளவு தூரமும் அவர் மீதே கற்கள் வீசப்படும். 

"உன்னோடான என்னுடைய உறவு முடிந்து விட்டது.. என்னை அசிங்கமாக பேச உனக்கு ஒரு உரிமையும் இல்லை" என்பதை நித்யாவால் சத்தமாக பாலாஜியிடம் சொல்லவே முடியவில்லை. அடங்கி, அடங்கி - குரலே இல்லாத ஒருத்தியாக, பஞ்சாயத்து செய்பவர்களிடம் மட்டுமே "பாருங்க, நான் இதை தான் எட்டு வருஷமா அனுபவிக்கிறேன்" என்னும் ஒருத்தராக, தமிழகத்தின் பெரும்பாலான மனைவிகளை பிரதிபலிப்பவராக தான் நித்யா இருந்து கொண்டிருக்கிறார். இதை கமல்ஹாசனும் அழகாய் சுட்டிக் காட்டி, 'அவரிடம் தான் மாற்றத்தை உண்டு பண்ண வேண்டும், என்னிடம் சொல்வதனால் அது நடக்காது' என்று சொன்னது ஆச்சரியமாகத் தான் இருந்தது. 

ஆனால், இது பெண்களுக்கான உலகம் இல்லை என்பது அடுத்த நிமிடங்களிலேயே புரிந்தது. 'நித்யா மூஞ்சியை அப்படி வெச்ச அதனால எனக்கு கோபம் வந்துச்சு,கெட்ட வார்த்த பேசுனேன்', 'நித்யா என் புள்ளைய எட்டு மாசம் கண்ணுல காட்டல.. அதனால் கெட்ட வார்த்த பேசுனேன்' என பாலாஜியின் விளக்கவுரைகளுக்கு நேரம் கொடுக்கப்பட்டது அதிருப்தியை மட்டுமே உண்டாக்குகிறது. 

என்ன செய்வது? கமல்ஹாசனும் ஒரு ஆண் தானே? 

எப்படியோ ஒரு வழியாக அவர் பாலாஜியின் வாயை மூடியது பாராட்டுதலுக்குரியது.

இடையில், பாலாஜியை நோக்கி தன்னுடைய தனிப்பட்ட வாழ்வை பற்றியும் பேசிய கமல் "நான் சந்திக்காத பிரிவையா நீங்கள் சந்தித்து இருக்கப் போகிறீர்கள்? மனசு சுக்குநூறு ஆகும் அளவு பிரிவின் வேதனையை நான் அனுபவித்திருக்கிறேன், ஆனால் நான் யாரையுமே அசிங்கமாக பேசியதில்லை. பிரிவும் மரியாதையோடு இருக்க வேண்டும்" என்று பிரிவை பற்றி பகிர்ந்தது திடீர் பரிவை உண்டாக்கியது. கமல்ஹாசன் எந்நேரமும் உல்லாசமாகவேதான் இருப்பார் எனும் ஒரு பொதுப்புத்திக்கு எதிராக, கமல்ஹாசனும் காதல் பிரிவில் உழல்வார் எனும் அந்த வெளிப்பாடு அழகாய் இருந்தது.

அதன்பிறகு, ஆங்கிலத்திலேயே அதிகம் பேசுவதால் ஐஸ்வர்யா, யாஷிகாவை தமிழில் திட்டப்போவதாக சொல்லிவிட்டு, 

கற்க கசடறக் கற்பவை கற்றபின் 
நிற்க அதற்குத் தக

என்ற திருக்குறலை சொல்லியது இனிமை. இதன் அர்த்தம் அவர்களுக்குப் புரியவில்லை. அதற்கு இந்தி மொழி திணிப்பை வைத்து கமல் சொன்ன விளக்கம் கொஞ்சம் வழவழ கொழகொழ டைப். இருந்தாலும் கமல் செய்தது ரசிக்கும்படியாகவே இருந்தது. அடுத்தது எலிமினேஷன்...

வெளியேற்றுப் படலத்திற்காக நாமினேட் செய்யப்பட்டிருந்த பொன்னம்பலம் இம்முறை காக்கப்பட்டிருக்கிறார். மும்தாஜ், மமதி மற்றும் ஆனந்த் வைத்தியநாதன் ஆகிய மூன்று பேரில் ஒருவர் மட்டுமே எலிமினேட் ஆக வாய்ப்பிருக்கிறது. தமிழ் மக்கள் எப்படியும், க்ளோஸ்-அப்பில் வந்து சுகி சிவத்தை போன்று பேசுவதாக நினைத்து மொக்கையாக கருத்து சொல்லும் ஆனந்த் வைத்தியநாதனை கைவிடுவார்கள் என நம்புவோம்.

 

பிக்பாஸ் முந்தைய பகுதிகளைப் படிக்க...

பிக்பாஸ் 2 : றிமுக நாள்  I முதல் நாள்   I  2ம் நாள்   I   3ம் நாள்   I   4ம் நாள்   I   5ம் நாள்  I   6ம் நாள்  I   7ம் நாள்  I  8ம் நாள் I 9ம் நாள்  I

10ம் நாள்   I   11ம் நாள்

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close