#BiggBoss Day 32: கண்ணீர்விட வைத்து டி.ஆர்.பி ஏற்றும் பிக்பாஸ்!

  Newstm Desk   | Last Modified : 20 Jul, 2018 04:06 pm

what-happened-in-biggboss-day-32

முன்பே கூறியதை போல போட்டியாளர்களின் கண்ணீரை தான் பிக்பாஸ் தனது பலமாக மாற்றிக்கொண்டு வருகிறார். அதனை நிரூபிக்கும் வகையில் நேற்றும் அழுகை, நெகிழ்ச்சியான தருணங்கள் கொஞ்சம் பழிச்சொல்லும் படலம் என கலவையாக இருந்தது நிகழ்ச்சி. கலவை சரிதான்... ஆனா நல்லா இருந்துதா?

இன்னைக்கு என்ன பாட்டு போட்டாலும் நீங்க டான்ஸ் ஆடனும் என பிக்பாஸ் உத்தரவு வந்திருக்கும் போல 32வது நாள் தொடக்கத்தில் ஒலித்த "ஊரோரம் புலியமரம்" பாட்டுக்கு வீட்டில் இருந்த முக்கால்வாசிப்பேர் நடனமாடினர். அதில் ஜனனி ஆடியதை மட்டும் நீண்ட நேரத்திற்கு காட்டிக்கொண்டு இருந்தனர். பின் உலக நியதி பாடலை ஒன்றாக நின்று பாடினர். இது டாஸ்க் முடியும் வரைதானா அல்லது தினம் தினம் பாடுவார்களா என தெரியவில்லை. தினமும் அதனை பாடுவார்கள் எனில் எடிட்டர்கள் கத்திரி அந்த சீனில் பட்டால் நலம். 

நேற்று போல இன்றும் "சென்றாயன் எப்படி டீ கேக்கலாம்" சண்டை நடந்தது. படுக்கையறையில் இருந்தப்படி ஏன் இன்னும் டீ வரல என்று வைஷ்ணவியை அவர் கேட்டுள்ளார். வைஷ்ணவி காலையில் எழுந்து நேரா கிட்சனுக்குத் தான் வராங்க என ஒட்டுமொத்த வீடும் அவர் பக்கம் நிற்க சென்றாயன் பதில் பேச முடியாமல் முழித்தார். அப்போது பாலாஜி சென்றாயனிடம் பேசிக்கொண்டு இருக்க... விடுங்கண்ணே ஏன் சண்ட போடுறீங்க என்றார் தலைவர் மகத். அவர் இந்த வாரத்தின் தலைவர் அல்லவா... அதற்கான எந்த அறிகுறிகளும் இல்லாத சிம்பிள் தலைவராக இருக்கிறார். அதனை செயல்படாத தலைவர் என்றும் கூறலாம். 

ஜனனி காய் வெட்டும் போது விரலை வெட்டிக்கொண்டாராம். பாலாஜி அவருக்கு பதிலாக காய் நறுக்க சென்றார். அந்த வழியாக வந்த பொன்னம்பலம், "ஏன் பார்த்து வெட்டியிருக்கலாம்ல" என்றார்.  "அதான் பார்த்து வெட்டலையே" என பாலாஜி கூறினார்.

உடனே, "அததான் நானும் கேக்றேன், ஏன் விரல பார்த்து வெட்டிக்கொள்ளவில்லை" என்றார். பின்னாள் நின்றுருந்த ஷாரிக், "அவளே விரல் சைஸ்ல தான் இருக்கா" என்றார். பொன்னம்பலமும் ஷாரிக்கும் கூறியது ஜோக் போல, பாலாஜி 'கலகலகல'வென சிரித்துவிட்டு சென்றார். 

டேனி தன்னைப்பற்றி மற்றவர்களிடம் தவறாக பேசுவதாக மகத், பாலாஜியிடம் கூறிக்கொண்டு இருந்தார். இந்த தகவல் யாஷிக்காவிடம் இருந்து மகத்துக்கு வந்துள்ளது. உண்மையில் அந்தவீட்டில் இருப்பவர்கள் அனைவருமே மற்றவர்களை பற்றி பேசிக்கொண்டே தான் இருக்கின்றனர். ஆனால் வாரம் ஒருவரை டார்கெட்டாக்கி அவர்கள் பேசுவதை மட்டும் குற்றம் சொல்கின்றனர். 

சென்ற வாரம் நடந்த லக்‌ஷுரி பட்ஜெட் டாஸ்கில் வென்ற திருடர்களுக்கு மட்டுமே பொருட்கள் வழங்கப்பட்டதால் தற்போது பிக்பாஸ் வீட்டில் சாப்பாடு பற்றாக்குறை. இதனால் ஏற்படும் பிரச்னைகள் குறித்து கிட்சன் அணியினரும் தலைவரும் பேசினர். முதல் வாரத்தின் குக்கிங் அணி தலைவர் மும்தாஜ், "யாரும் மற்றவர்களுக்கு சாப்பாடு இருக்கிறதா என்பதை நினைத்து சாப்பிடுவது இல்லை"என்றார். கடைசி நாள் வரை இந்த வீட்டில் சாப்பாட்டு பிரச்னை நடந்து கொண்டு  தான் இருக்கும். 

அந்த பேச்சுவார்த்தையின் நடுவே சென்றாயன் சமையல் டீமில் இருந்தால் சுத்தமாக உணவை செய்யமாட்டார் என்று மும்தாஜ் கூறினார். அதை எப்படி நீங்கள் சொல்லலாம். டோன்ட் அஸ்யூம் திங்ஸ் என மற்றவர்கள் அறிவுரைகளை தொடங்கினர். அதானே..

இதெல்லாம் நடந்து கொண்டு இருக்க ரித்விகா டீச்சர் ரிப்போர்ட் கார்ட் தயார்  செய்து கொண்டு இருந்தார். ஆங்கில மீடியம் பள்ளி போல அட்டென்டிவ், ஹைஜீன் என எல்லாமே ஆங்கில சொற்கள். அந்த ரிப்போர்ட் கார்ட்டை தயாரித்து அனுப்பிய பிக்பாஸ் தான் போட்டியாளர்களை தமிழில் பேச சொல்லிக்கொண்டு இருக்கிறார். 

ரித்விகா தயாரித்த ரிப்போர்ட் கார்ட் படி சென்றாயன் முதல் இடம் பிடித்தார். அவருக்கு எல்லா பிரிவுகளிலும் முழு மதிப்பெண் கொடுத்திருந்தார். இதற்கு வீட்டில் பலத்த எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. ரித்விகா அவருக்கு பாவம் பார்த்து தான் முதல் ரேங்க் கொடுத்தார் என குற்றம்சாட்டினர்.  என் பார்வையில் அது தான் சரி என்று ரித்விகா விளக்கமளித்தார். பின் அவர் பார்வையில் மட்டும் தான் அது சரி ஆனால் உண்மை அது அல்ல என டேனி கூறியதும் அதற்கு போட்டியாளர்களிடம் அமோக ஆதரவு கிடைத்தது. 

சென்றாயனை பார்த்து பரிதாபப்படுவது தொடர்ந்தால் மற்றவர்களுக்கு அவர் மீது இன்னும் கோபம் அதிகமாகும் என்று பாலாஜி கூறிக்கொண்டு இருந்தார். 

அப்போது பள்ளி டாஸ்க் முடிந்தது. பின் சென்னையில் இருக்கும் ஆதரவற்றோர் இல்லங்களில் இருந்து குழந்தைகள் சிலர் பிக்பாஸ் வீட்டின் விருந்தாளிகளாக வந்திருந்தனர். அவர்களை பார்த்ததும் செம குஷியான போட்டியாளர்கள் குழுந்தைகளை தூக்கி கொஞ்சிக்கொண்டு இருந்தனர். பின் அவர்களுக்கு பாயாசம் கொடுப்பது, பரிசுகள் கொடுப்பது என நெகிழ்ச்சியான காட்சிகள் நடந்தன. 

பின் பிள்ளைகள் அனைவரும் தங்களைப்பற்றி தனித்தனியாக வந்து அறிமுகம் செய்தனர். அம்மா வேணும் என மகத் கூறியதற்கே அழுத போட்டியாளர்கள் குழந்தைகளை பார்த்து அழமாட்டார்களா என்ன? மற்ற போட்டியாளர்கள் அனைவரும் குழந்தைகளுடன் ஒன்றி விளையாடிக்கொண்டு இருக்க பாலாஜி மட்டும் ஒதுங்கியே இருந்தார். பேசிய குழந்தைகளில் பாதிப்பேர் தமிழ் பிடிக்கும் என்று கூறிய போது நமக்குமே கேட்க நன்றாக தான் இருந்தது. டேனி கொஞ்சம் எக்ஸ்டிராவாக கைத்தட்டிக் கொண்டாடினார். பின் பிள்ளைகள் அனைவரும் வெளியே வரலாம் என்று அறிவிக்கப்பட்ட பின் மனமில்லாமல் அவர்களை வழியனுப்பி வைத்தனர். 

பின் அனைவரும் அவர்களை பற்றி மனம் வருந்தி பேசினர். வெளியே சென்றதும் கும்பலாக போய் நாம பார்க்கலாம் என ரித்விகா கூறிக்கொண்டு இருந்தார். பொன்னம்பலம் ஏதோ அவர்களை பற்றி பேசிக்கொண்டுஇருந்தார். நீண்ட நேரத்திற்கு அந்த பிள்ளைகளின் தாக்கம் போட்டியாளர்களிடம் தெரிந்தது. 

பாலாஜி தனியாக ஒதுங்கி இருந்ததற்கு போஷிக்காவின் நியாபகம் காரணமாக இருக்கும் நினைத்தால் அதற்கு அவர் வேறு விளக்கம் அளித்தார். போட்டியாளர்கள் சிலர் குழந்தைகள் வந்ததும் போலியாக நடித்ததாக கூறினார். குழந்தைகள் தமிழ் பிடிக்கும் என்றதும் அவன்(டேனி) அப்படி கத்துறான். தமிழ வாழ வைக்க அவன் என்ன வைரமுத்துவா? என்றார். தமிழைத் தனியாளாக வைரமுத்து வாழ வைத்துக்கொண்டு இருக்கிறார் என்று அறிந்த தருணம் அது. இப்படி தனித்தனியாக போட்டியாளர்கள் பேசிக்கொண்டு இருக்க நிகழ்ச்சி முடிந்தது. 

பிக்பாஸ் வீட்டை விட்டு போட்டியாளர்கள் வெளியேறுவதற்குள் 4, 5 ஞானிகளை உருவாக்கும் முயற்சியில் பிக்பாஸ் இருக்கிறார் என்பது தெரிகிறது. அதற்கான ஏற்பாடுகள் தான் இப்படி தினம் தினம் உணர்வுப்பூர்வமான சம்பவங்களை நடக்க வைக்கிறார். ஆனால் இதுவே தொடர்ந்தால்.. டவுட்டு தான் பிக்பாஸ்.. 

பிக்பாஸ் 2 : றிமுக நாள்  I முதல் நாள்   I  2ம் நாள்   I   3ம் நாள்   I   4ம் நாள்   I   5ம் நாள்  I   6ம் நாள்  I   7ம் நாள்  I  8ம் நாள் I 9ம் நாள் 

10ம் நாள்  I  11ம் நாள் I   12ம் நாள்   I  14ம் நாள்   I   15ம் நாள்   I   16ம் நாள்   I   17ம் நாள்   I   18ம் நாள்   I   19ம் நாள் I   20 நாள்

 21 நாள்  I   22 நாள்  I   23 நாள்  I   24 நாள்  I   25 நாள்  I   26 நாள்  I   27 நாள்  I   28 நாள்  I   29 நாள்  I   30 நாள்  I   31 நாள்

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.