#BiggBoss Day 35: ஜால்ரா அடிக்கிறதுனா என்ன சார்?

  Newstm News Desk   | Last Modified : 23 Jul, 2018 12:33 pm

what-happened-in-biggboss-day-35

நேற்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியில் பிக்பாஸுடன் சேர்ந்து கமலும் போட்டியாளர்களை டிரிக்கர் பண்ண தொடங்கிவிட்டார். அப்படி என்ன நடந்தது...

நீங்க தூங்கும் போது யாராவது கத்தினா சும்மா இருப்பீங்களா, அது போல தான்.. என்று பொன்னம்பலம் அணியினர் மும்தாஜை கேட்டனர். 

முன்னதாக ஐஸ்வர்யாவுக்கு மும்தாஜ் ஆதரவு தெரிவித்து இருந்ததால் அவரை நோக்கி இந்த கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு, "அமைதியா இரு பேட்டானு சொல்லுவேன்" என கூலாக பதில் அளித்தார் மும்தாஜ். அப்படியும் அவர்கள் அமைதியாகவில்லை என்றால் அந்த இடத்தை விட்டு சென்று விடுவேன். மற்றவர்கள் எப்படி இருக்க வேண்டும் என்று நாம் முடிவு செய்ய முடியாது. அது அவர்கள் விருப்பம் என்றார். 

அதுபோல தான் அவர்கள் செய்வது எரிச்சல் அடைய வைக்கிறது என்று கூறுவது எங்கள் விருப்பம் என்று மற்றவர்கள் ஒருமித்தமாக கூறினர். 

இந்த பஞ்சாயத்து இப்போதைக்கு முடிய போவதில்லை என்றே தோன்றுகிறது. இந்த பிரச்னையில் மற்றவர்கள் தங்களுக்குள் இருக்கும் வெறுப்பையும் வெளிப்படுத்தி விடுகின்றனர். அவர் ஐஸ்வர்யாவிடம் சென்று இப்படியெல்லாம் பண்ணாத என்று கூறியதே இல்லை என மும்தாஜ் கூறினார். அதற்கு உங்களுக்கு தெரியுமா அவர் சொல்லலைனு என்றார் ஜனனி. எப்போது மும்தாஜ் மீது குற்றச்சாட்டு வைக்கலாம் என்று அவர் காத்திருப்பது தெரிகிறது. 

பின் கமல் எதுவும் பேசமால் நேராக போட்டியாளர்களை அகம் டிவி வழியே பார்த்தார். தொடக்கமே எதையோ பேச வேண்டும் என்று முடிவெடுத்து வந்திருந்தார் போல. அதற்கு லீட் எடுப்பதற்காக கடந்த வாரம் நடந்த பள்ளி குழந்தைகள் டாஸ்க் பற்றி ரித்விகாவிடம் கேட்டார். யார் கேள்வி தாள்களை தயார் செய்தார்கள் என்றார். கேள்வி தாளே வரல.. என்று போட்டியாளர்கள் கூறினர். ஓ.. கேள்வி தாளே வரலையாம் என்று பார்வையாளர்களை நோக்கி கேட்டார். உடனே கைத்தட்டல்கள் பறந்தன. நீட் தேர்வைப்பற்றி பேசுகிறாராம். 

பின் எந்த அடிப்படையில் சென்றாயனுக்கு முதல் ரேங்க கொடுத்தீர்கள் என்ற கேள்வி எழுந்தது. டாஸ்க்கின் போது எதிர்ப்பு தெரிவித்த போட்டியாளர்கள் யாரும் கமல் கேள்வி எழுப்பிய போது எதுவும் பேசவில்லை. இவங்க எதர்க்கும் வேலைக்காக மாட்டார்கள் என்று யோசித்து அவரே, "சென்றாயனால் முடியும் என்றால் அனைவராலும் முடியும்" என்றார். இதை தான் சொல்ல வருகிறார் என்றால் முதலிலேயே சொல்லியிருக்கலாமே.

பின் சென்ற வாரத்தில் தலைவன் மகத் பற்றி பேசினார்கள். மகத் தானாகவே முன் வந்து "நான் அரைமணி நேரம் தூங்கிடேன் சார்" என்று அப்புரூவர் ஆனார். உடனே அரை மணி நேரம் தூங்குனீங்க.. அரை மணிநேரம் அழுதீங்க.. நான்லாம் அழுதா என்னை தேர்த்த அத்தனை பேர் வரமாட்டார்கள் என்று வாரினார். 

பின் ஐஸ்வர்யாவும்  யாஷிக்காவும் இந்தியில் பேசியது குறித்து கேட்டார். அவர்கள் பொன்னம்பலம் பற்றி பேசிக்கொண்டு இருந்தார்கள் என்பதை ஒப்புக்கொண்டனர். அவர்கள் உண்மையை கூறியதால் குறும்படமெல்லாம் போடாமல் மன்னித்து விட்டார் கமல். 

அடுத்து எவிக்‌ஷன் பிராசஸ் தொடங்கியது. இதில் எதிர்ப்பார்த்து போல பாலாஜி, ஜனனி, ஐஸ்வர்யா காப்பாற்றப்பட்டனர். மக்கள் ஆதரவு தனக்கு இருக்கிறது என்று தெரிந்தது, எழுந்து நின்று தமிழர்களுக்கு நன்றி கூறினார் ஐஸ்வர்யா. ஒரு நிமிடம் ஓவியா கண்முன் வந்துசென்றார்.

பொன்னம்பலமா.. ரம்யாவா என்று ரொம்ப நேரம் யோசிக்கவைக்காமல் ரம்யாதான் என்று அறவித்தார் கமல். ரம்யா வீட்டில் இருப்பவர்கள் நாமினேட் செய்து எவிக்ட்டாக வில்லை. அவர் டாஸ்க்கில் தவறிழைத்ததால் நாமினேட் செய்யப்பட்டவர் எனவே கிட்டத்தட்ட வீட்டில் இருக்கும் அனைவருக்கும் ரம்யா வெளியேறியது வருத்தத்தை தான் ஏற்படுத்தி இருந்தது. அழுது முடித்து பின் வழியணுப்பி வைத்தனர். 

வெளியே வந்த ரம்யா.. கடந்த வாரம் பிடித்தவர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொள்ள வேண்டும் என்ற டாஸ்க்கில் பலரும் என்னுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். அதுவே எனக்கு நிறைவாக இருந்தது என்று நெகிழ்ந்தார். 

நீங்க இந்தபோட்டிக்கு செட் ஆக மாட்டீர்கள் என்பதை நாசுக்காக கூறினார் கமல். ரம்யா தொடர்ந்து தனக்கு சண்டை பிடிக்காது.. சத்தம் பிடிக்காது என கூறிக்கொண்டு இருந்தார். அதனால் தான் வெளியே இருக்கிங்க என்றார் கமல். 

பின் ஒவ்வொரு போட்டியாளர்களின் நடவடிக்கைகளுக்கு ஏற்றார் போல பொம்மைகள் அவர்கள்  படம் முன் வைக்க வேண்டும் என்று கமல் கூறினார். 

தூங்கு மூஞ்சி மகத், சத்தம் போடும் டேனி, கூல் வைஷ்ணவி, டாக்டர் பொன்னம்பலம், முகமூடி சென்றாயன், ஆங்கிரி பேர்ட் பாலாஜி, லவ் ரம்யா, தலையாட்டி பொம்மை ஐஸ்வர்யா, அழகைப்பற்றியே யோசிக்கும் ஜனனி, அழுமூஞ்சி மும்தாஜ், குழந்தை ஷாரிக், ஹேப்பி யாஷிக்கா, கண்ணாடி ரித்விகா என ரம்யா கூறியது ஏற்றுக் கொள்ளும் வகையில் தான் இருந்தது. 

எப்போதும் எவிக்டாகிறவர்கள் இது போன்ற டாஸ்க்கை செய்ததும் வெளியேறி விடுவார்கள்.ஆனால் இந்த முறை அவர்கள்ள வெளியே இருக்கும் போதே அகம் டிவி ஆன் செய்யப்பட்டது. 

இதெல்லாம் முன்னாடி நீங்க பண்ணதே இல்லையே என அதிர்ந்தார் ரம்யா.. நமக்கும் அதெ ஃபீல் தான். 

ரம்யாவை பார்த்து உற்சாகமான போட்டியாளர்கள் அவர் தேர்வு செய்த பொம்மைகளை பார்த்ததும் சீரியசானார்கள். குறிப்பாக சென்றாயன் நான் முகமூடியெல்லாம் போடவில்லை என்று வருத்தப்பட்டார். அதோடு ரம்யாவை வழியனுப்பி வைத்துவிட்டு மீண்டும் போட்டியாளர்களிடம் கமல் பேசினார். 

ரம்யாவுக்கு கொடுக்கப்பட்ட பொம்மைகளில் இரண்டு பொம்மைகள் மீதம் இருந்தன. ஜால்ரா, தற்பெருமை.. இந்த பொம்மைகள் யாருக்கு வழங்க வேண்டும் என்று கமல் கேட்டார். இதில் இரண்டு கேட்டகிரியிலும் அதிகம் கூறப்பட்டது மும்தாஜ் மற்றும் வைஷ்ணவியின் பெயர். 

இப்படி புகார் கூறிக்கொண்டே இருக்கிறீர்களே சென்ற வாரம் சில குழந்தைகள் வீட்டிற்கு வந்தார்கள் அவர்களை பார்த்து நீங்கள் எதையும் கற்றுக்கொள்ளவில்லையா என்பது போல நாட்டாமை கேட்டார். 

உடனே அனைவரும் தாங்கள் கற்றுக்கொண்டதைப் பற்றி கூறினர். தனக்கு திருமணமாகி குழந்தையே இல்லை எனவும் ஒரு குழந்தையை தத்தெடுத்துக்கொள்ள இருப்பதாகவும் சென்றாயன் கூறினார். அதைப்பற்றி பேசிவிட்டு டாடா சொல்லி கிளம்பினார் கமல்.

வீட்டில் இருந்த அமைதி புறா ரம்யா வெளியேறிவிட்டார். மக்கள் பொன்னம்பலத்திற்கும் ஆதரவு தெரிவிக்கிறார்கள் ஐஸ்வர்யாவுக்கும் ஆதரவு தெரிவிக்கிறார்கள். எனவே இருவரும் தங்கள் தவறுகளை மாற்றிக்கொள்ள போவதில்லை.. அப்போ இனி என்ன நடக்கும்.. அதே தான் சண்ட நடக்கும். 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close