#BiggBoss Day 38: யாஷிக்கா மடியில் அமர்ந்த பொன்னம்பலம்... இது மட்டும் சரியா?

  Newstm Desk   | Last Modified : 26 Jul, 2018 01:02 pm

what-happened-in-biggboss-day-38

இத்தனை வாரங்களில் இல்லாதது போல நேற்றைய நிகழ்ச்சியில் முதன்முதலாகரீகேப் போடப்பட்டது. பிரோமோவை பார்த்து புது ஆடியன்ஸ் வருவார்கள் என்று பிக்பாஸ் நினைத்திருக்கலாம். 

37ம் நாள் இன்னும் முடியவில்லை. ரித்விகா மற்றும் ஐஸ்வர்யாவுக்கு இடையே நடந்த பிரச்னை பற்றிய விவாதம் தொடர்ந்தது. பிக்பாஸ் நினைக்கிறது நடக்கவே மாட்டுது என்று பாலாஜி கூறிக்கொண்டு இருந்தார். பிக்பாஸ் நினைப்பது தற்போது தான் நடந்து கொண்டு இருக்கிறது என்பதே உண்மை. 

இந்த பிரச்னை வைஷ்ணவியிடம் இருந்து தான் தொடங்கியது என்று பாலாஜி கத்திக்கொண்டு இருந்தார். அவர் கோபத்தில் மீண்டும் தவறான வார்த்தைகளை பயன்படுத்த மற்ற போட்டியாளர்கள் கோபமடைந்தனர். டேனி, "இனி இப்படி பேசினா நானே அசிங்கமா கேட்ருவேன்" என்றார். 

மற்றவர்கள் கேட்டதும் கொஞ்சம் சுதாரித்துக்கொண்ட பாலாஜி, பிறகு வார்த்தைகளை கவனித்து பேச தொடங்கினார். அவர் குறிப்பிட்டு வைஷ்ணவியை மட்டும் திட்டிக்கொண்டு இருக்க, "நான் பிறந்தது தான் பிரச்னைனு சொல்லுங்க" என டென்ஷனானார் வைஷ்ணவி. தவறு ஐஸ்வர்யா மீது இருப்பதாலோ என்னவோ எப்போதும் நியாயம், தர்மம் என பேசும் மும்தாஜ் இந்த முறை பெரிதாக எதுவும் பேசிக்கொள்ளவில்லை. அதையே பெரிய குற்றமாக மற்ற போட்டியாளர்கள் பேசத் தொடங்கினர். மும்தாஜ் எதிரணியில் இருந்தால் இப்படி பேசுவாரா, அவருக்கு சாதகமாக பேசிக்கொள்கிறார் என சென்றாயன் குற்றம் கூறிக்கொண்டு இருந்தார். மும்தாஜ் குறித்து பேச்சுக்கள் தொடர அந்த நாள் முடிந்தது. 

பழைய பாடல்களை தேர்வு செய்து காலையில்  போடுகிறார்கள். 38ம் நாள் தொடக்கத்தில் முன் தினம் நடந்த பிரச்னையால் யாரும் காலையில் நடனமாடவில்லை. பிக்பாஸ் தட்டிக்கேட்டதற்கு பிறகு போட்டியாளர்கள் தமிழில் பேச வேண்டும் என்பதில் கொஞ்சம் கவனமாகவே இருக்கின்றனர். 

உணவுக்காக கொடுக்கப்படும் டாஸ்க்குகளை பார்க்கும்போது வருத்தமாக தான் இருக்கிறது. அதுவும். காலையில் குடிக்கும் டீக்கு கூட டாஸ்க் செய்ய வேண்டுமாம். அது போல வந்து நின்ற மும்தாஜிடம், "நான் ஒரு தோத்தாங்கோளி" என கூறிக்கொண்டு கார்டன் ஏரியவை சுற்ற வேண்டும். அவ்வாறு சுற்றும் போது இஞ்சி துண்டுகளை சாப்பிட வேண்டும் என்ற டாஸ்க்கை எதிர் அணி கொடுத்தது. இஞ்சி துண்டுகளை சாப்பிட முடியாது என்று கூறிய மும்தாஜ், எதிரணி இறங்கி வராததால் சாப்பாடே வேண்டாம் என்று சென்றுவிட்டார். 

அவர் நேற்று முன்தினமும் சாப்பிடவில்லை. மும்தாஜ் சாப்பிடாமல் இருப்பதை பற்றி கூறி வருத்தப்பட்டுக்கொண்டு இருந்தார் ஐஸ்வர்யா. சாப்பிடாமல் நல்ல பெயர் எடுப்பது கூட அவரது டாஸ்காக இருக்கலாம் என்று ஜனனியும் டேனியும் கூறிக்கொண்டு இருந்தனர். டாஸ்க்கை எப்படியாவது வெல்ல வேண்டும்  என்ற அவர்களின் எண்ணம் பேச்சில் தெரிந்தது. ஆனால், மனிதாபிமானம் துளி கூட இல்லாத அவர்களின் செயல் வெறுப்பைத்தான் ஏற்படுத்தியது.

பின் கார்கில் வெற்றி நாள் நினைவாக இந்திய ராணுவர்களை நினைவு கூறும் டாஸ்க் கொடுக்கப்பட்டது. இந்த டாஸ்கின் படி ஒவ்வொரு போட்டியாளர்களும் தனி தனியாக ராணுவ வீரர்களுக்கு வாழ்த்து கூற வேண்டும். இது போல அனைவரும் தங்களது நாட்டுப்பற்றை வெளிக்கொண்டு வந்து கூறினர். அதில் டேனி கூறியது நன்றாக இருந்ததாக நடுவர் கூறினார். அதற்காக டேனிக்கு ஒரு பைக் பரிசாக கொடுக்கப்பட்டது. கிட்டத்தட்ட வீட்டில் இருந்த அனைவரும் டேனிக்கு பரிசு கிடைத்ததை நினைத்து மகிழ்ச்சியடைந்தனர். 

ஆனால் வைஷ்ணவியும் மும்தாஜும் கடுப்பானதாக மகத் கூறினார். வைஷ்ணவி ரம்யா சென்றதில் இருந்தே அப்படி தான் இருக்கிறார். மும்தாஜ் பரிசு அறிவிப்பு வந்ததில் இருந்து டேனி டேனி என கத்திக்கொண்டு தான் இருந்தார். 

மீண்டும் கிட்சன் பக்கம் சென்று சாப்பாட்டிற்காக என்ன டாஸ்க் செய்ய வேண்டும் என்று கேட்டார் மும்தாஜ். இந்த முறை கிட்சனை 25 முறை சுற்ற வேண்டும் என்று கருணை அடிப்படையில் கூறினார்கள் எதிர் அணியினர். அதையும் மிகவும் சோர்ந்து போய் செய்தார் மும்தாஜ். ஆனால் டீயை தானே தயார் செய்து கொள்வதாக கூறினார். அதற்கு எதிரணி ஒத்துழைக்கவில்லை. மீண்டும் சாப்பாடே வேண்டாம் என கூறிவிட்டு சென்று விட்டார். 

மும்தாஜிடம், எது சொன்னாலும் செய்ய மாட்ரீங்க என்று நடுவர் ஷாரிக் பேச்சுவார்த்தை நடத்தினார். டீ விஷயத்தில் இதுவரை தான் காம்பிரமைஸ் செய்து கொண்டது இல்லை என பதில் அளித்தார் மும்தாஜ். ஆனால் ஒரு போட்டிக்காக இதையெல்லாம் ஏற்றுக்கொண்டு தான் ஆக வேண்டும் என்று ஷாரிக் கூறியும் அவர் புரிந்து கொள்வதாக இல்லை. நீங்க ரொம்ப அடம் பிடிக்கிறீங்க என நடுவர் கூறியதும், "நான் மட்டும்தானா" என கேட்டார் மும்தாஜ். 

டாஸ்க்கை தான் செய்வதில்லை.. நான் கொடுக்கும் தண்டனையை செய்யுங்கள் என தனக்கு தெரிந்த உடற்பயிற்சிகளை செய்ய சொன்னார் ஷாரிக். தனது உடல்நிலையை காரணம்காட்டி அதையெல்லாம் பண்ண மாட்டேன் என விடாபிடியாக நின்றார் மும்தாஜ். அவர்கள் வாக்குவாதம் தொடர, மும்தாஜ் குரலை உயர்த்தினார். "கத்தி பேசாதீங்க" என ஷாரிக் கூற இன்னும் டென்ஷனான மும்தாஜ். காதில் ஊசி போட்டுக்கோங்க, காதை மூடிக்கோங்க என்றெல்லாம் பேசிக்கொண்டு இருந்தார். உடனே நான் ஏன் காதை மூடனும், உங்க வாய்க்கு தான் பிளாஸ்டிரி ஒட்டனும் என பதிலுக்கு விட்டுக்கொடுக்காமல் ஷாரிக்கும் பேசினார். எங்க தொடு பார்ப்போம் என சென்ற சீசனில் சக்தி முன் நின்ற ஓவியா போல ஷாரிக் முன் நின்றார் மும்தாஜ். தொட்றேன் பாரு என மும்தாஜின் முதுகில் ஒரு விரலால் தொட்டார் ஷாரிக். 

அவரிடம் உரையாடிக்கொண்டு இருந்தபோதே மும்தாஜின் கண்கள் கலங்கின. ஷாரிக்கின் மீது தனி பாசம் இருப்பதால் அவர் தன்னை எதிர்த்து பேசுவதை மும்தாஜால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஷாரிக்கிடம் திரும்பி, "வேணாம் ஷாரிக்" என கண்கள் கலங்கி கோபமாக கூறினார். அவர் கூறிய வேகத்தில் பளார் என்று சத்தம் வந்திருக்கும்... ஆனால் அதற்குள் பாய்ந்து வந்த போட்டியாளர்கள் அவரை சமாதானப்படுத்திவிட்டு சென்றனர். 

மும்தாஜ் அணியில் இருப்பவர்களுக்கும் அவர் டாஸ்க்கை செய்யாமல் அடம் பிடிப்பது பிடிக்கவில்லை. அவர் ஏன் இப்படி செய்கிறார் என்று பேசிக்கொண்டு இருந்தனர். 

இதெல்லாம் நடந்து கொண்டு இருக்க, எதிரணி சாப்பாடு தயார் செய்ய தாமதமானதால் ஒரே ஒரு வாழைப்பழம் கிடைக்குமா என்று கிட்சன் முன் நின்றார் வைஷ்ணவி. அதற்கும் டாஸ்க் கொடுப்பேன் என வீம்பாக இருந்தனர் எதிர் அணியினர். 3 கிளாஸ் தண்ணீர் குடித்துவிட்டு பழம் சாப்பிடுங்கள் என்ற கொடூரமான டாஸ்க்கை கொடுத்தது எதிரணி. அந்த அணியில் இருக்கும் ஒரே பாசக்காரியான ஐஸ்வர்யா, ஒரு கிளாசில் கால்வாசி மட்டுமே தண்ணீரை கொடுத்து வைஷ்ணவிக்கு உதவினார். 

இந்த டாஸ்க் தொடங்கியதில் இருந்து மும்தாஜ் எதுவும் சாப்பிடவில்லை. இது அந்த அணியில் இருப்பவர்களுக்கு வருத்தமளிக்க நடுவரிடம் சென்று எப்படியாவது சாப்பிட வைங்க என கேட்டுக்கொண்டு இருந்தனர். ஆனால் மும்தாஜோ.. நான் சாப்பிட மாட்டேன் என்பதில் உறுதியாக இருந்தார். குறிப்பாக சாப்பாடு கொடுப்பதற்கு முன் ஜனனி தனக்கு டாஸ்க் கொடுப்பது அவருக்கு பிடிக்கவில்லை. அதனை வெளிப்படையாகவே கூறிவிட்டார். 

அடுத்து பெட்ரூம்மை சொந்தமாக்கி கொள்வதற்கான டாஸ்க் கொடுக்கப்பட்டது. அதன் படி எதிரணியில் இருக்கும் ஒருவர் அணிந்திருக்கும் கோட்டில் பல சாவிகள் ஒட்டப்பட்டு இருக்கும். அந்த சாவிகளை பறித்து தங்கள் அணிக்கு கொடுக்கப்பட்ட பூட்டுக்களை திறக்க வேண்டும். இதற்காக ஜனனி அணியில் இருந்து டேனியும், மும்தாஜ் அணியில் இருந்து யாஷிக்காவும் வந்திருந்தனர். இதே போல சாவியை தராமல் காப்பாற்றும் போட்டியாளர்களாக பொன்னம்பலம் மற்றும் வைஷ்ணவி வந்திருந்தனர். 

மும்தாஜ் அணியில் இருந்து வந்திருந்த இருவருமே பலம் வாய்ந்தவர்கள். அதுவும் யாஷிக்காவை சமாளிக்க பொன்னம்பலத்தால் முடியவில்லை. ஒருகட்டத்தில் யாஷிக்காவை கீழே தள்ளி மேலே அமர்ந்து விட்டார் சித்தப்ஸ். வெறும் போட்டிக்காக கூட தமிழ் கலாச்சாரத்தை மீறக்கூடாது என்று பேசிக்கொண்டு இருந்த பொன்னம்பலம் தற்போது செய்தது சரி என்று வேறு விளக்கமளித்துக்கொண்டு இருந்தார். இருந்தும் யாஷிக்கா விட்டுக்கொடுப்பதாய் இல்லை. முட்டி மோதி அந்த டாஸ்க்கை வென்றார். தற்போது பெட்ரூம் மும்தாஜ் அணியினருக்கு தான் சொந்தம். எதிர் அணியை போல நாம் தவறாக நடந்து கொள்ள கூடாது என்று பெட்ரூம் ஓனர்கள் பேசிக்கொண்டு இருந்தனர். 

பின் சிறையில் இருக்கும் மகத் தங்கள் அணிக்கு வேண்டும் என்றால், ஒருவரை சிறைக்கு அனுப்ப வேண்டும் என்று பிக்பாஸ் அறிவித்தார். உடனே பாலாஜி தானே முன் வந்து கூறியதால் அவரை அனுப்பிவிட்டு மகத்தை எடுத்துக்கொண்டனர். நடுவில் வைஷ்ணவியை சிறையில் அடைங்க அப்போது தான் நான் வெளியே வருவேன் எனக் கத்திக்கொண்டு இருந்தார் அப்போதைய சிறை கைதி மகத். அதை எல்லாம் யாரும் காதுக் கொடுத்து கேட்பது போல தெரியவில்லை. மகத் வெளியே வந்து பாலாஜி உள்ளே சென்றார். வைஷ்ணவி இருக்கும் டீமில் நான் சென்றாலும் டாஸ்க் செய்ய மாட்டேன். மாற்றி செய்வேன் என்று எல்லாம் சொல்லிக்கொண்டிருந்தார் மகத். கிட்டத்தட்ட சிம்பு பேசுவது போலவே பேசி கடுப்பாக்கிக்கொண்டு இருக்கிறார். தயவு செய்து அவரை வெளியே அனுப்பிடுங்க பிக்பாஸ்...

ஒரு டாஸ்க்கை கொடுத்து போட்டியாளர்களுக்குள் சண்டை வர வைப்பது சரி தான் என்றாலும், சாப்பாடு கொடுக்காமல் அவர்களை காடுப்பாக்குவதை பிக்பாஸ் மாற்றிக்கொள்ளலாம். சிலருக்கு உடல்நிலை சரியில்லாமல் இருக்கும் போதும் மற்றவர்கள் அடம் பிடித்து டாஸ்க்கில் குறியாக இருக்கிறார்கள். இதையும் போட்டி தானே என எடுத்து செல்ல முடியாது. மேலும் முடிந்தால் இந்த கிட்சனை இடித்து விட்ட வேறு இடத்தில் கிட்சனை உருவாக்கலாம்.. வாஸ்து சரியில்லை...

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close