#BiggBoss Day 42: தமிழ், கலாச்சாரம், பெண்ணுரிமை... இந்த கமலை தான் எதிர்ப்பார்தோம்!

  Newstm Desk   | Last Modified : 30 Jul, 2018 02:40 pm
what-happened-in-biggboss-day-42

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இதைப்பற்றி மட்டும் கமல் பேசுவதே இல்லையே என நினைத்த விஷயம் பற்றி நேற்று அவரே பேசினார். இத.. இத தான் எதிர்பார்த்தோம் என்பது போல இருந்தது. சில விஷயங்களை மற்றவர்கள் கூறுவதை விட கமல் கூறினால் சிறப்பாக தானே இருக்கும்?  பிக்பாஸ்  வீட்டில் 42வது நாள் என்ன நடந்தது... 

திரைக்கு பின்னால் நடந்த சேட்டைகளான பூலூப்பர்ஸ் பற்றி சிறுகுறிப்பு கொடுத்துவிட்டு பின் பிக்பாஸ் வீட்டின் பூலூப்பர்ஸை காட்டினார் கமல். இந்த சீசனில் கமல் எந்த தலைப்பை பற்றி பேசினாலும் அதனைப்பற்றி சிறுகுறிப்பு கூறிய பிறகு தான் பிக்பாஸ் நிகழ்ச்சி பற்றி பேசுகிறார். 

பூலுப்பர்ஸ் ஸ்பெஷலாக வைஷ்ணவிக்கென்றே உருவாக்கி இருந்தது தெரிந்தது. மற்றவர்களுக்கு அசுத்தமாக தோன்றும் பல விஷயங்களை வைஷ்ணவி செய்திருக்கிறார் போல. சுத்தம் தான் ஃபர்ஸ்ட் என வாழ்ந்து கொண்டு இருக்கும் மும்தாஜ் கண்ணில் அவர் சிக்கவில்லை. மாறாக பாலாஜியிடம் சிக்கினார். குக்கரில் மிச்சமிருந்த பருப்பு குழம்பை வைஷ்ணவி நக்கி சாப்பிட்டத்தை பார்த்த பின் பாலாஜியின் முகபாவனை மும்தாஜை தான் நினைவூட்டியது. இதையே கமலும் பின்னர் சுட்டிக்காட்டினார். 

மற்றவர்கள் அசுத்தமாக நடந்து கொள்வதுப் பற்றி வைஷ்ணவியிடம் கூறி புலம்பும் மும்தாஜுக்கு இந்த காட்சிகள் அதிர்ச்சி ஏற்படுத்தியிருக்கும். மொத்த போட்டியாளர்களுமே இதனை பார்க்கும் போது முக பாவனைகளை மாற்றிக்கொண்டு  தான் இருந்தனர். 

பேச்சுக்காக அந்த வீடியோவில், ஜனனி வெங்காயம் நறுக்குவதையும், பொருட்களை அள்ளிப்போட்டு பொன்னம்பலம் வைத்த குழம்பையும் காட்டினார்கள். 

பின்னர் ஸ்வட்ச் பாரத் பின்னால் என்னென்ன இருக்கிறது என்பது இப்போது தான் புரிகிறது என்றார் கமல். எந்த பக்கம் போனாலும் தன் பக்கம் அனைத்தையும் இழுத்துக்கொள்கிறார். இனி வைஷ்ணவியை 'வழிச்சவி' என்று அழைக்கலாம் என கமல் கூறியதற்கு வைஷ்ணவியே வெடித்து சிரித்தார். 

இப்படி தான் சமைச்சாங்கன்னு தெரிஞ்சிருந்தா நான் சாப்பிட்டிருக்கவே மாட்டேன் என ஓவர் கமெண்ட் கொடுத்த சென்றாயனை பார்த்து மும்தாஜ்  கொடுத்த லுக் அதைவிட ஓவராக இருந்தது. 

மும்தாஜை கவனித்த கமல், சென்றாயனை உங்களுடன் குக்கிங் அணியில் சேர்த்து கொள்ளுங்கள் என கூறினார். உடனே பதறிய மும்தாஜ், எக்‌ஸ்டிராவாக ரியாக்‌ஷன்ஸ் கொடுத்து கடுப்பேத்தினார். சென்றாயனுக்கு எதையும் புரிய வைக்க முடியாது என்பது அவரது குற்றச்சாட்டு. உடனே சென்றாயனுக்கு ஆதரவாக இருக்கிறோமோ இல்லையோ, மும்தாஜை எதிர்க்க வேண்டும் என நினைத்த போட்டியாளர்கள் எங்களால் புரிய வைக்க முடியும் என்றனர். அவர்களில் ஒருவரும் குக்கிங் அணிக்கு சென்றுவிட வேண்டும் என்றார் கமல். 

இந்த பிரச்னை முடிந்த போது, இத்தனை நாள் எதிர்பார்த்திருந்த கலாச்சர பிரச்னை குறித்து பேசினார் கமல். எப்போதோ பேசியிருக்க வேண்டிய தலைப்பு.  இந்த வீட்டில் அடிக்கடி கலாச்சாரம் பேசப்படுகிறது என்று தொடங்கிய கமல், பின்னர் வெளிப்படையாக "பொன்னம்பலம் தான் பேசுறாரு" என்றார். பின்னர் தன் சிறுவயதில் எப்போதும் பூஜை செய்து கொண்டு இருந்த கமலில் இருந்து பேச தொடங்கினார். 

எப்போதும் தமிழகத்தில் கால் பதிக்க வேண்டும் என்றால், ஏதோ பண்ணனும்னு சொன்னீங்களே என்று பொன்னம்பலத்தை பார்த்து கேட்டுவிட்டு பதில் எதிர்ப்பார்க்காதவர் போல சிரித்தார் கமல். பொன்னம்பலமும் என்ன பதில் கூறுவது என்று தெரியாமல் அசட்டுத்தனமாக பார்த்தார். 

பின், "தமிழகம் என்பது தகுதி இல்லை, விலாசம் மட்டுமே" என்று கூறிய போதுதான் நாம் எதிர்பார்த்த கமல் வெளிவந்திருந்தார். வந்தாரை வாழவைக்கும் தமிழகம், எல்லோரையும் வாழவைத்து விடாது... திறமை வேணும் என்று கமல் கூறியதற்கு அரங்கத்தில் கைத்தட்டல்கள் பறந்தன. கமல் பார்வையாளரகள் பக்கம் திரும்பினாலே கைத்தட்டல்கள் வருகிறது தான் என்றாலும், இந்த முறை கேட்க நன்றாக இருந்தது. 

அதற்கு பதில் அளித்த பொன்னம்பலம், இடம், பொருள், ஏவல் பார்த்து நடந்து கொள்ள வேண்டும். புகுந்த வீட்டிற்கு வரும் பெண் அந்த வீட்டின் கலாச்சாரத்தை தான் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று மீண்டும் தனது பழமைவாத கருத்துக்களை பேசினார். இதுவே இரு வாரங்களுக்கு முன் வந்திருந்த கமலாக இருந்தால் ஆமாம், நானும் இதனை வழிமொழிகிறேன்  என்று கூறியிருப்பார். 

ஆனால் நேற்று, அதெல்லாம் அப்படி இல்ல என கமல் பேச தொடங்கினார். கமல் பேசிக்கொண்டு இருக்கும் போது ஐஸ்வர்யாவிடம் நன்றி சொல்லு என்று கூறினார் டேனி. உடனே அவரும் யோசிக்காமல் கேமராவை பார்த்து நன்றி கூறினார். கமல் பேசியது புரிந்து அப்படி செய்திருந்தால் நல்லது தான். 

பின் தொடர்ந்து பேசிய கமல், தனது பாட்டி விதவையாகி, மொட்டை அடிக்கப்பட்டு வீட்டில் இருந்த போது கணவனை இழந்த இன்னோரு பெண் இந்திய நாட்டின் பிரதமராகிறார். அதனை என் கண் முன் பார்க்கிறேன். எது உண்மை என்று குழம்பியிருக்கிறேன். இரண்டு முகங்கள் இருக்கின்றன. 

நீங்கள் கூறும் போது இரண்டையும் தவறாக தான் கூறுவீர்கள். பெண்கள் பெரிய பொட்டு வைத்தால்... "என்ன இது இவ்வளவு பெரிய பொட்டு வெச்சிருக்கா. சரியில்லையே" என்பீர்கள். அதுவே பொட்டு வைக்காமல் இருந்தால் அபசகுனம் என்பீர்கள். பெண்கள் என்ன தான் செய்வது.

ஒருவருக்கு கொடுப்பதை நாம் மற்றொருவருக்கு கொடுக்க மறுக்கிறோம். பிரதமர் ஆன போது அந்த பெண் கலாச்சாரம் பேசிக் கொண்டிருக்கவில்லை. அவர்கள் தங்களுக்கு விருப்பமானதை செய்தனர்" என்று கமல் பேசி முடிக்கும் போது பொன்னம்பலம் தனது தவறை உணர்ந்திருப்பார் என்று எதிர்பார்த்தீர்கள் எனில்... வெரி சாரி. அவரிடம் எந்த மாற்றமும் இல்லை.

பின் தனக்கு மரியாதை கொடுக்க வேண்டும் என்று கூறிய பொன்னம்பலம், வீட்டில் இருந்த பெண்களை மதிக்காமல் நடந்து கொண்டதை குறும்படமாக காட்டினார். அதில் யாஷிக்கா மீது அமர்ந்ததும், ரித்விகாவை தள்ளிவிட்டதும் காட்டப்பட்டது. என்ன பொன்னம்பலம் ஜீன்ஸ் போட்டதும் வேற பேச்சு, வேஷ்டி கட்டினதும் வேற பேச்சா என்று கலாய்த்தார் கமல். 

இதுகுறித்து முமதாஜ் பேசும் போதும், "பொன்னம்பலத்திற்கு நிறைய அனுபவம் இருக்கு. ஆனால் அவர் சில சமயங்களில் தவறான வார்த்தைகளை கூறி விடுகிறார்" என கூறினார். 

அதற்கு நேர் எதிராக பேசினார் ரித்விகா, "என்னிடம் அவர் அது போன்று பேசியதில்லை. ஆனால், அவர் டாஸ்கின்போது நிச்சயம் வேறு விதமாகதான் யோசிப்பார். அந்த விதம் தவறானதாக தான் இருக்கும்" என்றார். 

கடைசியாக யாஷிக்காவிடம் இதுகுறித்து கேட்கப்பட்டது. அதற்கு, எனக்கும் அவருக்கும் இடையே தலைமுறை இடைவேளை இருக்கிறது. அவர் டாஸ்கின் போது செய்ததை நான் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. போட்டியில் ஒருவரை தற்காத்துக்கொள்ள இதுபோன்று தான் செய்வார்கள். அதை நான் போட்டியாகவே பார்க்கிறேன். ஆனால் ஓரு பெண்ணை அவள் அணியும் ஆடையை வைத்து எடைபோடாதீர்கள். கிராப் டாப் போட்டாலும் சரி, புடவை கட்டினாலும் சரி இடுப்பு தெரியதான் போகிறது" என்று கூறினார். கமலே யாஷிக்காவுக்கு 18 வயது தானா என வியந்திருக்க கூடும். 

பின் யாஷிக்கா கூட ஆவுட் ஆஃப் ஃபோக்கஸ்ல பார்க்கும் போது ஸ்ருதிஹாசன் மாதிரி தான் தெரியுறாங்க என்றதும் வீட்டில் இருந்த அனைவருமே கூச்சலிட்டனர். 

ஒருவழியாக கலச்சார பிரச்னை முடிந்து எவிக்‌ஷனுக்கு வந்தார் கமல். நீண்ட நேரம் இழுக்காமல் வைஷ்ணவி தான் எவிக்டாகிறார் என அறிவித்தார். இது வரை வெளியேறியவர்களை காட்டிலும் வைஷ்ணவிக்கு பெரிதாக யாரும் ஃபீல் பண்ணது போல தெரியவில்லை. வைஷ்ணவி வீட்டை விட்டு செல்லும் போது, தனக்கு கொடுக்கப்பட்ட செடியை டேனியிடம் கொடுத்தார். பின், என்னை கொடுமைப்படுத்தியது போல இந்த செடியை செய்யாதே என  கூறினார். 

ஒரு பக்கம் வீட்டை விட்டு வெளியேற வைஷ்ணவி கிளம்பிக்கொண்டு இருக்க மற்றொருப் பக்கம், கமல் எவிக்‌ஷன் ட்விஸ்ட்டை போட்டுடைத்தார். வீட்டில் இருந்து வெளியே வந்த வைஷ்ணவி தனியறைக்குள் நுழைந்தார். 

சென்ற சீசனில் சுஜா வாருணி இது போல தான் இரண்டு நாட்களுக்கு தனி அறையில் இருந்தார். அவர் எவிக்டாகி விட்டார் என்று நம்பிய போட்டியாளரகள் பின் சுஜா வீட்டிற்குள் நுழைந்ததும் ஷாக்கானார்கள். அதே போல இந்த முறை வைஷ்ணவியை தனியறையில் வைத்துள்ளார்கள். 

வெளியே வந்த வைஷ்ணவி உங்களை பற்றியெல்லாம் என்ன கூறியிருப்பார் என்று நினைக்கிறீர்கள் என்று கமல் கேட்டதற்கு அனைவரும் பாசக்காரர்கள் போல பதிலளித்தனர். சென்ற வாரம் தான் அவரை ஜால்ரா என்றீர்கள், இப்போது வேறு மாதிரி பேசுகிறீர்கள் என்றார் கமல். அதே டவுட்டு தான் எங்களுக்கும். பின் அன்று கமல் முன் நடந்த பஞ்சாயத்துகள் பற்றி போட்டியாளர்கள் பேச நிகழ்ச்சி முடிந்தது.

வைஷ்ணவியை தனி அறையில் வைத்து பின் பிக்பாஸ் வீட்டிற்குள் அனுப்புவதன் மூலம் ஏதோ பெரிய கலவரம் வெடிக்கும் என்று பிக்பாஸ் நினைத்துக்கொண்டு இருப்பது தெரிகிறது. ஆனால் வைஷ்ணவி அவர் நினைப்பது போல பெரிய ரவுடியெல்லாம் இல்லை. மீண்டும் வீட்டிற்கு வந்தவுடன், என்னை பற்றி ஏன்ண்ணே இப்படி பேசினீங்க என்று மற்றவர்களை பேசவிடாமல் பேசிக்கொண்டு இருக்க போகிறார். ஆல் தி பெஸ்ட் பிக்பாஸ்...

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close