#BiggBoss Day 43: என்ன ட்ரை பண்றீங்க ஐஸ்வர்யா?

  Newstm Desk   | Last Modified : 31 Jul, 2018 01:52 pm

what-happened-in-biggboss-day-43

நேற்றைய நிகழ்ச்சியில் நடந்தது என்னவோ சுமாரான சண்டைகள் தான். ஆனால் அவை இன்னும் 10, 20 நாட்களுக்கு பிக்பாஸ் வீட்டில் புகைந்து கொண்டே இருக்க போகின்றன. 43ம் நாள் என்ன நடந்தது? 

43வது நாள் காலையிலேயே பொங்கல் செய்ய உப்பு இல்லை என பேசிக்கொண்டு இருந்தனர். உப்பு கம்மியா தான் இருக்கும் அட்ஜெஸ்ட் பண்ணிக்கோங்க என போட்டியாளர்களிடம் கேட்டுக்கொண்டு இருந்தார் ஐஸ். ஓ... ஐஸ்வர்யா இந்த வாரத்தின் தலைவி அல்லவா! கடந்த வாரம் இறுதியில் நடந்த டாஸ்க்கில் வெற்றி பெற்று தலைவி பொறுப்பை பெற்றார் ஐஸ்வர்யா.

இந்த வாரத்திற்கான டீம் பிரிப்பது பற்றி பெட்ரூமில் ஐஸ்வர்யா பேசிக்கொண்டு இருந்தார். குக்கிங் அணியில் மும்தாஜ் மற்றும் சென்றாயன் நிச்சயமாக இருக்க வேண்டும் என்பதால் மூன்றாவது நபராக ஜனனி செல்ல வேண்டும் என்று கூறினார் தலைவி. ஆனால் சென்றாயனுக்கும் சமைக்க தெரியாது, ஜனனிக்கும் சமைக்க தெரியாது என்பதால், தானே மூன்றாவது நபராக செல்வதாக பாலாஜி கூறினார்.

உடனே, "எனக்கு ஒன்னு தெரியும்... அத மனசுல வெச்சி தான் நான் இப்படி பண்றேன். நேரம் வரும் போது நான் அத சொல்றேன்" என வில்லிக் கணக்காக பேசினார் ஐஸ்வர்யா. நாம் இப்படி யோசித்துக்கொண்டு இருக்கும் போது, தனி அறையில் இருந்த வைஷ்ணவியும் இதையே கூறினார். "ஐஸ்வர்யா கிட்ட ஏதோ பிளான் இருக்கு. அடுத்த வாரம் மும்தாஜ், அவங்க டீயை எப்படி அவங்களே போட்டுக்குறாங்கனு நான் பார்த்துக்குறேன் என என்கிட்ட அவ சொல்லிட்டு இருந்தா" என்று கேமராவில் கூறிக்கொண்டு இருந்தார். அப்போது அவருக்கான சாப்பாடு தரப்பட்டு இருந்தது. 

கிட்சனில் யாஷிக்காவும், டேனியும் சமைத்துக்கொண்டு இருந்தனர். சமைப்பதற்கு தேவையான பாத்திரத்தை மட்டும் சுத்தம் செய்து கொடுக்குமாறு யாஷிக்காவிடம் டேனி கேட்டார். உடனே, "ரித்விகாவை கூப்டு பண்ண சொல்லு, எப்பவுமே படுத்துட்டே இருக்கணுமா" என்று கூறினார் யாஷிக்கா. ரித்விகா எப்போது வில்லியானார் என்று தெரியவில்லை. பிரோமோவில் வரும் காட்சிகளை தான் காட்டுவதில்லை. குறைந்தபட்சம் ஒரு பிரச்னையின் முன்கதையை காட்டலாம். அதையும் செய்வதில்லை இந்த பிக்பாஸ். 

இதான் சாக்கு என்று, "ரித்விகா வந்த புதிதில் இருந்தது போல இப்போது இல்லை. நிறைய பேர் அவரை மாற்றி வைத்திருக்கிறார்கள்" என பேச தொடங்கினார் டேனி. இவர் தான் வைஷ்ணவி பின்னால் பேசுவதாக குற்றம்சாட்டியவர். 

யாஷிக்காவும், "ஆமாம், இந்த வெஷம் (ஜனனி) கூட மோசமானது தான்" என்றார். ஹப்பா இவருக்காவது புரிந்ததே... ஜனனி, சென்ற சீசனின் கணேஷ் வெங்கட்ராமனையும் சக்தியையும் சேர்த்த கலவையாக இருக்கிறார். பின் இந்த வாரத்திற்கான அணிகளை அறிவித்தார் ஐஸ்வர்யா. 

சமையல் அணியில் மும்தாஜ், சென்றாயன், ஜனனி என்றார். அவர்கள் இருவருக்கும் சுத்தமாக சமைக்க தெரியாது என கூறினார் மும்தாஜ். அப்போ ஜனனிக்கு பதில் பொன்னம்பலம் என்றார் தலைவி. ஆனால் பொன்னம்லபம், நான் உதவியாகலாம் இருக்க மாட்டேன். சமைக்க வேண்டும் என்றால் சமைக்கிறேன் என்றார். முடிவில் பாலாஜியே கிட்சன் அணிக்கு சென்றார். இதை தானே முன்னாடியே சொன்னோம்... என்பது போல பார்த்தனர் பாலாஜியும்  ஜனனியும். பாத்திரம் சுத்தம் செய்யும் அணியில் பொன்னம்பலம், மகத், ஜனனி ஆகியோர்  இருந்தனர். பாத்ரூம் சுத்தம் செய்யும் அணியில் யாஷிக்கா, ரித்விகா மற்றும் ஷாரிக் ஆகியோர் இருந்தனர். 

கிட்சன் அணியில் இருப்பவர்களால் சமைக்க முடியவில்லை எனில் அவர்களுக்கு பதிலாக டேனி செல்வார். 

கிட்சன் பொருட்கள் குறைவாகவே உள்ளதால் யாரும் இதில் இது இல்லை... அது இல்லை என குறை கூற கூடாது என்று தற்போதே கூறிவிட்டார் மும்தாஜ். டேனி, "யாரும் எதையும் கூடுதலாகவும் வாங்க வேண்டாம், பட்டினியாகவும் இருக்க வேண்டாம்" என்று மும்தாஜை குறிப்பிட்டு கூறினார். மும்தாஜ் அனைவரும் சாப்பிட்டு முடித்துவிட்டு சாப்பிடுவதால் அவருக்கு அவ்வளவாக உணவு இருப்பதில்லை. உடனே நான் கூட சாப்பிடல, எல்லாருக்கும் செய்து வைத்தேன் என சொல்லி சொல்லி காட்டும் குணம் போட்டியாளர்களுக்கு பிடிக்கவில்லை. 

கிட்சனில் சமைத்துக்கொண்டு இருந்தவர்களுக்கு ஏகப்பட்ட கண்டிஷன்கள் போட்டார் ஐஸ்வர்யா. ஏன் இந்த கோபம் என்று புரியாமல் இருந்தது. .இத்தனை வாரங்கள் தன்னை குழந்தை, குழந்தை என்று கூறியவர்களுக்கு, "நான் குழந்தை இல்லை" என்பதை காட்டுவதற்காக இருக்கலாம். ஐஸ்வர்யா செய்தது எல்லாம் மும்தாஜையும் பாலாஜியையும் டார்கெட் செய்வது போல தான் இருந்தது. ஆனால் சிறிது நேரத்தில் மும்தாஜிடம் வந்து, "உங்கள நான் டார்கெட் பண்ணல. ஐ லவ் யூ" என்று கூறிவிட்டு சென்றார் ஐஸ்வர்யா. அவர் செய்தது எல்லாம் பார்க்கும் போது, "என்ன ட்ரை பண்ற ஜெஸ்ஸி" என்பது போல இருந்தது. 

பின் மேகி மசாலாக்களை வைத்து விதவிதமாக சமைக்கும் போட்டி நடந்தது. இதில் போட்டியாளர்கள் இரு அணிகளாக பிரிந்தனர். ஒரு அணியில் டேனி, ஐஸ்வர்யா, யாஷிக்கா மற்றும் ஷாரிக் இருந்தனர். மற்றொரு அணியில் மும்தாஜ், பொன்னம்பலம், ரித்விகா, ஜனனி மற்றும் சென்றாயன் ஆகியோர் இருந்தனர். ஆனால் போட்டியின் போது மும்தாஜ் ஏனோ சமைக்கவே இல்லை. டேனி அணி உற்சாகமாக சமைத்துக்கொண்டு இருந்தது. அதுவும் அவர் தனது அணி வீரர்களை ஊக்குவிக்கும் விதம் அற்புதமாக இருந்தது. சிறந்த தலைமைபண்பை டேனி காட்டினார். 

இறுதியில் டேனி அணியின் கற்பனை திறனை பாராட்டி அவர்கள் வெற்றிப் பெற்றதாக அறிவித்தனர் நடுவர்களான பாலாஜியும் மகத்தும். இதுவரை பார்த்ததில் ஒன்று மட்டும் உறுதியாகிறது. டேனி இருக்கும் இடமெல்லாம் வெற்றி தான். ஆனால் அவ்வபோது சீட்டிங் செய்வதை நிறுத்திக்கொண்டால் நல்லா இருக்கும். 

பின் வீட்டில் நடக்கும் பிரச்னைகள், ஒருவருக்கொருவர் இடையில் இருக்கும் கருத்து வேறுபாடு ஆகியவற்றை நேராக பேசி தீர்த்துக்கொள்வோம் என அனைவரும் ஒன்று கூடி பேசினர். 

இந்த வாய்ப்பை விட்டுவிட கூடாது என்று போட்டியாளர்கள் அனைவரும் தங்கள் மனதில் இருப்பதை கூறினர். பாலாஜி தொடர்ந்து தவறான வார்த்தைகளை பயன்படுத்தி பேசுவதை தட்டிக்கேட்டார் ஐஸ்வர்யா. இதுவரை உங்களை நான் தவறாக பேசியதில்லை என்று அடித்து கூறினார் பாலாஜி. கடைசியில் இருவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. ஐஸ்வர்யா மனதில் ஏதோ பெரிய கசப்பு இருப்பது போல தெரிகிறது. ஆனால் அவர் அதனை வெளிப்படையாக காட்டவே இல்லை. ஆனால் வழக்கத்திற்கு மாறாக கடுமையாக பேசிக்கொண்டு இருந்தார். 

நாங்க சிரிச்சி டான்சாடினா மட்டும் கோபப்படுறீங்க... லூசுனு சொல்றீங்க இப்போ எல்லாரும் அதையே தான் பண்ணிட்டு இருக்கீங்க என்று கேட்டார் யாஷிக்கா. எல்லோர் மனதிலும் ஏதோ ஒரு குறை இருக்க தான் செய்கிறது.

(யாஷிக்காவும், ஐஸ்வர்யாவும் சகஜமாக பேசிக்கொண்டு இருந்தனர். அவர்களுக்குள் நடந்த வாக்குவாதம் மட்டுமே நமக்கு காட்டப்பட்டது. அவங்க எப்போ பழம் விட்டாங்க?)

டேனி மீது அடுக்கடுக்காக குற்றச்சாட்டுகளை கூறினார் மகத். இனி ஒரு ஆம்பளையா இருந்தா, எதுவா இருந்தாலும் நேருக்கு நேரா வந்து சொல்லு என வசனம் பேசினார். இந்த வாரம் மும்தாஜை சென்றாயனுடன் கிட்சன் அணியில் இருக்க வேண்டும் என்று கூறியது போல, மகத்தை, இனி ஹீரோ போல பேச கூடாது என்ற அறிவுரையை கமல் கூறினால் தேவலாம். 

அதை கேட்ட டேனி பெரிதாக ரியாக்ட் செய்யாமல் சில விளக்கங்களை மட்டும் அளித்தார். ஆனால் மகத் பேசியதற்கு மற்றவர்கள் யாராக இருந்தாலும் கோபப்பட்டு இருப்பார்கள். பக்கா பிளானோடு இருக்கும் டேனி தவறிக்கூட வார்த்தைகளை விட்டுவிட கூடாது என்பதில் தெளிவாக இருக்கிறார். 

இந்த வாக்குவாதங்களை முடிவுக்கு கொண்டு வரும் வகையில், "இங்க யாரும் யாருக்கும் உறவு கிடையாது. உங்களுக்கு பிடிக்கலைனா ஒதுங்கி இருங்க" என்றார்.

மும்தாஜ் அப்படி பேசிக்கொண்டுஇருக்கும் போது, ஆமாம் இங்க யாரும் உறவுகளை உருவாக்க வரவில்லை என காட்டமாக கூறினார் யாஷிக்கா. அவர் கூறியது பொதுவான கருத்து இல்லை என்பது அனைவருக்கும் தெரியும். குறிப்பாக மகத்துக்கு புரியாமல் இருக்குமா? டென்ஷனான மகத், "இது போல நல்லா பழகிவிட்டு பின் பிரிந்தால் வலிக்கிறது" என்று சிம்பு போல பேச தொடங்கினார். நல்லவேளையாக அவரை யாரும் தொடர்ந்து பேசவிடவில்லை. ஒரு சிம்புவே போதும்!

மும்தாஜ் பேசும் போது, "பொன்னம்பலம் ஐயா பெரியவர், அவருக்கு உடம்பு சரியில்லாதது எனக்கு தெரியும். எனவே அவர் கத்தினால் கூட நான் எதுவும் கேட்க மாட்டேன்" என்றார். உடனே, "பரிதாப பட்டால் எனக்கு பிடிக்காது" என்று புலம்பிக்கொண்டே வெளியே சென்றார் பொன்னம்பலம். 

ஒரு வழியாக கூட்டு பேச்சுவார்த்தை முடிந்தது. ஜனனிக்கும் ஷாரிக்கிற்கும் உடல்நிலை சரியில்லாததால் அவர்களை தூங்க அனுமதிக்குமாறு தலைவியிடம் கேட்டுக்கொண்டு இருந்தார் மும்தாஜ். ஆனால் ஜனனி தலைவியாக இருக்கும் போது யாஷிக்காவை தூங்க விடவில்லை இப்போது மட்டும் நான் எப்படி அனுமதிப்பது என்று கேட்டார் தலைவி. 

பழிவாங்கவா தலைவியாக ஆனீங்க என்று பாலாஜி கேட்டார். ஆமாம் என சொல்லிவிட்டு வெளியே சென்றார் ஐஸ்வர்யா. முதல் வாரத்தில் தனக்கு எந்த விதிமுறைகள் பற்றியும் தெரியாது என்பதால் தான் அப்படி செய்தேன் என விளக்கமளித்தார் ஜனனி. உண்மையில் அவர் தலைவியாக இருந்த போது பிக்பாஸின் செல்ல பிள்ளை போல நடந்து கொண்டார். போட்டியாளர்களுக்கு என்ன தேவை என்பது பற்றிக் கூட யோசிக்காமல், பிக்பாஸ் சொல்வது மட்டுமே சரி என அவர் இருந்ததை போட்டியாளர்கள் எப்படி மறப்பார்கள். 

தனியாக அமர்ந்திருந்த பாலாஜிக்கு உதவ சென்றார் சென்றாயன். ஆனால் பாலாஜி அவரிடம் சரியாக பேசாததால்,  கோபப்பட்டுவிட்டு சென்றார். இந்த களேபரத்திலும் யாஷிக்காவும், ஐஸ்வர்யாவும் நடனமாடி கொண்டு இருந்தனர். 

ஒவ்வொரு வாரமும் ஒவ்வொருவர் டார்கெட் செய்யப்படுகிறார்கள். இந்த வாரம் பலி ஆடு பாலாஜி தான் போல!

newstm.in

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.