#Biggboss Day 44: ஐஸ்வர்யாவின் சர்வாதிகாரம், எல்லை மீறும் பிக்பாஸ்

  Newstm Desk   | Last Modified : 01 Aug, 2018 12:55 pm
what-happened-in-biggboss-day-44

ரியாலிட்டி நிகழ்ச்சி என்ற பெயரில் எதை வேண்டுமானாலும் காட்டலாம் என்பதற்கு சென்ற சீசன் பிக்பாஸ் நிகழ்ச்சியே பெரிய உதாரணம். ஓவியாவின் தற்கொலை முயற்சி தொடங்கி பல சம்பவங்கள் சென்ற சீசனில் பிரச்னையை உண்டாக்கியது. ஆனால் அவை அனைத்தும் 100 நாட்களை நெருங்கும் போது நடந்தவை. ஆனால் இந்த சீசனில் 50 நாட்கள் கூட இன்னும் முடியவில்லை, அதற்குள் பிக்பாஸ் எல்லை மீற தொடஙகிவிட்டார். இந்த வாரம் முழுக்க ஐஸ்வர்யாவின் சர்வாதிகாரம் தான் நடக்க இருக்கிறது. தொடக்கம் முதல் "என் பேர காப்பாத்திக்கனும்" என கூறி வந்த ஐஸ்வர்யாவின் பெயர், தற்போது அமோகமாக கெட்டு வருகிறது. அதற்கு பிக்பாஸ் மட்டும் அல்ல, ஐஸ்வர்யாவும் தான் காரணம்.

44வது நாள் நடந்த சம்பவங்கள்...

திங்களன்றே காட்டப்பட்டிருக்க வேண்டிய நாமினேஷன் காட்சிகளோடு நேற்று நிகழ்ச்சி தொடங்கியது. போட்டியாளர்கள் தாங்கள் எவிக்ஷனக்கு நாமினேட் செய்ய விரும்பும் 2 பேரின் புகைப்படத்தை ஷெரெட்டிங்(கிழிக்கும்) மிஷினில் போட வேண்டும். நமது புகைப்படம் தூள்தூளாக ஆவதை பார்க்கும் போது யாராக இருந்தாலும் கடுப்பாக தான் செய்யும். இதெல்லாம் பிக்பாஸ் குழுவில் யோசித்து சொல்லும் அந்த நல்ல உள்ளம்... நல்லா இருக்கனும். 

முதலாவதாக வந்த மகத், மும்தாஜையும் பொன்னம்பலத்தையும் நாமினேட் செய்தார். அடுத்து வந்த மும்தாஜ், மகத்தையும் ஜனனியையும் நாமினேட் செய்தார். அப்போது மும்தாஜை பார்த்து மகத் சிரிக்க, யாருக்கோ வலிக்குது போல என கமெண்ட் அடித்தார் மும்தாஜ். உடனே காமெடி பீஸ் என கத்திக்கொண்டு இருந்தார் மகத். யார் காமெடி பீஸ் என்று 6 வாரங்களில் மகத்துக்கு தெரியாமல் இருப்பது பரிதாபமான ஒன்று. அடுத்தடுத்து போட்டியாளர்கள் வந்து 2 பேரை நாமினேட் செய்துவிட்டு சென்றனர். 

நடுவில் பாலாஜியை நாமினேட் செய்ய அழைத்தனர். எனக்கு விருப்பம் இல்ல, என்னை கன்ஃபெஷன் அறைக்கு கூப்பிடுங்க என்றார் பாலாஜி. எவிக்‌ஷன் பிராஸசுக்காக அனைவரும் வெளியே இருந்த சமயம் என்பதால், வீட்டை பூட்டினார் பிக்பாஸ். அனைவரும் நீண்ட நேரம் கார்டனிலேயே இருந்தனர். பாலாஜி நாமினேட் செய்யும் வரை கதவு திறக்கப்படாது என்பது தெரிந்தது. 

அனைவரும் பாலாஜியிடம் சென்று பேசினார்கள். முன்னதாக பெட்ரூமில் அனைவரும் இருக்கும் போது நடந்த பஞ்சாயத்தின் போது, மகத் டேனியை திட்டிக்கொண்டு இருந்தார். அதனை குறிப்பிட்டு மகத்திடம் சொன்ன பாலாஜி, "நீ டேனிய திட்டல... என்ன தான் திட்டிட்டு இருந்த. எனக்கு அது நல்லா தெரிஞ்சது" என்றார். முதலில் அதனை மறுத்த மகத், பின்னர் ஒப்புக்கொண்டார். பாலாஜி அதனால் மன வருத்தம் அடைந்தது தெரிந்ததும், என்னால தானே எல்லாம் என தலையில் அடித்து கொண்டு சென்றார். 

தன்னை பற்றியும், தனது தாய் பற்றியும் பாலாஜி தவறாக பேசினார் என்று மும்தாஜிடம் கூறி அழுதுக்கொண்டு இருந்தார் ஐஸ்வர்யா. தொடர்ந்து பாலாஜி யாரையும் நாமினேட் செய்யாமல் இருந்ததால் கதவு திறக்கப்படவில்லை. 

இந்த பிரச்னைகளுக்கு இடையே யாஷிக்கா வயிறு வலியால் அழுதுக்கொண்டு இருந்தார். அனைவரும் "உதவி வேணும் பிக்பாஸ்" என்று கேட்டு நீண்ட நேரத்திற்கு பிறகு யாஷிக்காவை கன்ஃபெஷன் அறைக்கு அழைத்து வர கூறினார் பிக்பாஸ். அதன் பின்பே பாலாஜி நாமினேட் செய்தார். ஒரு வழியாக நாமினேஷன் படலங்கள் முடிந்தன. 

பொன்னம்பலம், மும்தாஜ், மகத், ரித்விகா, பாலாஜி மற்றும் ஷாரிக் ஆகியோர் நாமினேட் செய்யப்பட்டு இருந்தனர். 

இதையெல்லாம் பார்த்துக்கொண்டு இருந்த வைஷ்ணவி, கேமரா வழியாக பார்க்க எல்லாரும் நடிப்பது போல தான் இருக்கிறது என்று கேமரா முன் கூறிக்கொண்டு இருந்தார். ஏனோ அது கூட பார்க்கும் போது போலியாக தான் தெரிந்தது. 

பிக்பாஸ் வீட்டில் தற்போது நிறைய கிளை பிரச்னைகள் நடந்து கொண்டு இருக்கிறது. அதில் ஒன்று மும்தாஜ் மீது பொன்னம்பலம் கோபமாக இருப்பது. மும்தாஜ் சமைத்தால் சாப்பிட மாட்டேன் என அடம் பிடித்தார் பொன்னம்பலம். அவரை கெஞ்சி சாப்பிட வைத்தனர்  டேனியும், ஜனனியும். இதெல்லாம் ஒரு பஞ்சாயத்தா டா...  என கூறும் வகையில் இருந்தது பொன்னம்பலத்தின் கோபம். 

44வது நாள் காலையில் என்கிட்ட மோதாதே பாடலோடு தொடங்கியது. அந்த பாடலின் உள்நோக்கும என்ன என்று தெரியாமல் வீட்டில் சிலர் நடனமாடி கொண்டுஇருந்தனர். காலையிலேயே ஸ்டோர் ரூம் பெல் அடிக்க, சென்றாயனுக்கு பிறந்தநாள் கேக் அனுப்பப்பட்டு இருந்தது. சின்ன பிரான்க் செய்து போட்டியாளர்கள் சென்றாயனுக்கு சர்பரைஸ் கொடுத்தனர். கேக் வெட்டும் போது கூட வரமாட்டேன் என ஓரமாக இருந்தார் பாலாஜி. பின் அவரிடம் தனியாக சென்று வாழ்த்து பெற்றார் சென்றாயன். 

சென்ற வாரம் நடந்த டாஸ்கின் போது மும்தாஜ் சாப்பிடாமல் இருந்தது போல தற்போது பாலாஜி சாப்பிடாமல் இருந்தார். அவர் சாப்பிடலையே என மும்தாஜிடம் கவலைப்பட்டு கொண்டு இருந்தார் ஐஸ்வர்யா. அவர் டீ, காபி எல்லாம் குடிச்சிட்டு தான் இருக்காரு, அவருக்கே தோணும் போது சாப்பிடட்டும் என்றார் மும்தாஜ். 

அடுத்து தொடங்கியது அந்த வரலாற்று நிகழ்வு. சர்வாதிகார ஆட்சியை பற்றி ஜனனி விளக்கும் போது ஒன்னும் புரியாமல் பார்த்து கொண்டு இருந்தனர் போட்டியாளர்கள். பின்னர் இந்த வீட்டின் சர்வாதிகாரியாக ஐஸ்வர்யா இருப்பார் என்றும் அவருக்கு பாதுக்காப்பாளராக டேனியும், ஆலோசகராக ஜனனியும் இருப்பார்கள் என்று அறிவிக்கப்பட்டது. இந்த டாஸ்கின் பெயர் 'ராணி மகராணி'. 

டாஸ்க் முழுமையாக தொடங்குவதற்கு முன்பே, நான் பிக்பாஸ் சொன்னா சிறைக்க கூட போக தயார். ஆனால் இந்த டாஸ்க்கை நான் செய்ய மாட்டேன் என்று ஆலோசகர் ஜனனியிடம் கூறிவிட்டார் பாலாஜி. பொது மக்களுக்களுக்குள் ஸ்பையாக யாஷிக்கா அவரையே தேர்வு செய்து கொண்டார். 

ஐஸ்வர்யா, ஜனனி, டேனியை கன்ஃபெஷன் அறைக்கு அழைத்து இந்த டாஸ்க்கை பற்றி விளக்கினார் பிக்பாஸ். பின் ஐஸ்வர்யாவிடம், இந்த டாஸ்க்கை சிறப்பாக செய்தால் ஸ்பெஷல் பவர் கொடுக்கப்படும் என்றும் கூறினார். 

பின் இவர்கள் மூவருக்கும் என தனியறை கொடுக்கப்பட்டது. அதில் இருந்த டீவியில் லிவிங் ரூமில் அமர்ந்து கொண்டு போட்டியாளர்கள் என்ன பேசுகிறார்கள் என்பதை காட்டினார்கள். 

இந்த நேரம் பார்த்து ஐஸ்வர்யாவை பற்றி பாலாஜி, ரித்விகா, மகத், ஷாரிக் மற்றும் பொன்னம்பலம் ஆகியோர் பேசிக்கொண்டு இருந்தனர். நடுவில் ஷாரிக் பாவம், அவன்கிட்ட ஐஸ்வர்யாலாம் வீட்டுக்கு செட் ஆகாது என்று கூறிவிட்டதாக பாலாஜி கூறினார். இதனை பலரும் பல விதத்தில் கூறிவிட்டனர். ஆனால் தற்போது ஐஸ்வர்யா கொஞ்ம் எக்‌ஸ்டிராவாக கோபப்பட்டார். 

உடன்இருந்த ஜனனி, உங்களை பற்றி 4 பேர் தவறாக பேசி இருக்கிறார்கள் ராணி என ஏற்றிவிட்டார். அடிக்கடி தனது விஷபாட்டில் என்ற பெயருக்கு நியாயம் சேர்த்து கொண்டு இருந்தார் ஜனனி. அந்த காட்சிகளை எல்லாம் பார்த்த ஐஸ்வர்யா, அவங்கள வெச்சி செய்றேன் என கத்திக்கொண்டு இருந்தார். 

பின்னர் வெளியே வந்து பொதுமக்களுக்கு விதிமுறைகளை அறிவித்தார்கள். அவர்கள் மூன்று பேருக்கும் மும்தாஜ் சமைக்க வேண்டும். மற்றவர்களுக்கு சென்றாயன் சமைக்க வேண்டும். ஆதாவது சென்றாயன் செய்யும் டீயை தான் மும்தாஜ் குடிக்க வேண்டும். அப்போ முன்னர், ஐஸ்வர்யா சொன்ன "ஐ லவ் யூ மோமோ(மும்தாஜ்)" கூட பொய் தான் போல. 

மேலும் ராணி கண்ணை பார்த்து பேச கூடாது, கூடி நின்று உரையாட கூடாது என ஏகப்பட்ட விதிகளை அறிவித்தனர். 

இந்த அறிவிப்பின் போது பாலாஜி அந்த பக்கம் கூட வரவில்லை. அவர் மீது வீட்டில் இருக்கும் குப்பைகளை எல்லாம் கொட்ட வேண்டும் என்று உத்தரவிட்டார் ராணி. அதுவும் ஷாரிக் தான் கொட்ட வேண்டுமாம். இதனை கேட்டதும், வெள்ளை சட்டை போட்டிருந்த பாலாஜி, உள்ளே சென்று பச்சை சட்டையை போட்டுக்கொண்டு வந்தார். எல்லாத்துக்கும் தயாராக தான் இருக்கிறார் போல. பலரும் எடுத்துக்கூறியும் ஐஸ்வர்யா யார் பேச்சையும் கேட்பதாக இல்லை. 

கூடவே இருந்த ஜனனியும், டேனியும் நினைத்திருந்தால் அவரை தடுத்திருக்கலாம். ஆனால் அவர்கள் இருவரும் அதற்கான முயற்சிகளை எடுப்பது போல தெரியவில்லை. குறிப்பாக ஜனனியோ,"ராணி என்ன சொல்றாங்களோ அதையே செய்யுங்க" என்று வேற கூறிக்கொண்டு இருந்தார். அந்த விஷ பாட்டிலை...

யாரும் குப்பை கொட்ட தயாராக இல்லாததால் ஐஸ்வர்யாவே அதனை செய்தார். பாலாஜி எதுவும் பேசாமல் அமைதியாக அமர்ந்திருந்தார். இது போன்ற காட்சிகள் நடக்கும் போதாவது பிக்பாஸின் குரல் கேட்டிருக்க வேண்டும். லட்டு லட்டா ஃபூட்டேஜ் கிடைக்குதே என அமைதி காத்தார் பிக்பாஸ். ஐஸ்வர்யா செய்ததை பார்த்து மும்தாஜ் அழுதே விட்டார். 

தனக்கு அருகே இருக்கும் குப்பைகளை சுத்தம் செய்ய வந்தவர்களை திட்டி அனுப்பினார் பாலாஜி. அவர் நீண்ட நேரமாக என்ன யோசித்துக்கொண்டு இருந்தார் என்பது தெரியவில்லை. ஆனால் அந்த  இடத்தை விட்டு நகரவே இல்லை

அடுத்து ஷாரிக் மற்றும் ரித்விகாவின் உடைகளை நீச்சல் குளத்தில் போட உத்தரவிட்டார். அவற்றில் ரித்விகாவின் மருந்து பொருட்களும் இருந்தன. இங்க பேசினத எல்லாம் ஐஸ்வர்யாவுக்கு லைவ்வா காட்டி இருக்காங்க என மகத் வெள்ளந்தியாக ஜனனியிடம் கூறினார். "ஓ... அப்படியா" என ஜனனி பதிலளித்தார். இதுக்கெல்லாம் குறும்படம் போட மாட்டீங்களா பிக்பாஸ்?

அடுத்து பொன்னம்பலத்திற்கு டாஸ்க் கொடுக்க தயாரானார் ராணி...அதற்குள் அவரது பாதுகாவளரும் ஆலோசகரும் அவர்களின் அறைக்கு ராணியை அழைத்து சென்று விட்டனர். 
 

உள்ளே சென்று ஐஸ்வர்யாவிடம் நீங்கள் செய்வது தவறு என இருவரும் கூறுவார்கள் என எதிர்பார்த்தால், "ராணி இங்கே நாம் பார்த்தது பொது மக்களுக்கு தெரிந்து விட கூடாது" என்று கூறினார் ஜனனி (விஷ பாட்டில்!)

ஒரு டாஸ்க் என்றாலும் வரம்பு மீறி செல்லும் போது அதனை வீட்டில் இருப்பவர்கள் எதிர்க்கலாம். அதற்கெல்லாம் ஒப்புக்கொண்டு தானே உள்ளே வந்தார்கள் என்றாலும், சுய மரியாதையை விட்டு நடந்து கொள்ள அவர்கள் ஒப்புக்கொண்டு இருக்க மாட்டார்கள் என்றே தோன்றுகிறது.

மேலும் இத்தனை களேபரங்களிலும் டேனியும, ஜனனியும் இதனை வெறும் டாஸ்க்காக மட்டும் பார்ப்பது ஐஸ்வர்யா செய்வதை விட கொடுமையான விஷயம். தொடர்ந்து நல்ல பெயர் வாங்க வேண்டும் என்று கூறிக்கொண்டு இருந்த ஐஸ்வர்யா. தன்னை பற்றி மற்றவர்கள் பேசுவதை கேட்டதும் கோபத்தின் உச்சம் சென்றதை பார்க்கும் போது அவருக்கு உடனடியாக மனநல ஆலோசனை தேவைப்படுவது தெரிகிறது. இன்னும் அவர் கோபத்தை ஏற்றிவிட்டு டிஆர்பியை ஏற்ற நினைப்பது சரியல்ல. 

இதெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும்...  நேற்று நடந்த சம்பவங்களுக்கு கமலின் எதிர்வினை என்னவாக இருக்க போகிறது. பிக்பாஸ் வரலாற்றை பார்க்கும் போது சனி கிழமையன்று கமல், "சர்வாதிகார ஆட்சி என்றால் எப்படி இருக்கும் என்று பார்த்தீர்களா" என்று கேமரா முன் கண்ணை உருட்டி பேசிவிட்டு செல்வதற்கே நிறைய வாய்ப்புகள் இருக்கின்றன. இந்த விஷயத்தில் ஐஸ்வர்யாவை மட்டும் அல்ல பிக்பாஸையும் சேர்த்து கண்டிக்கும் இடத்தில் கமல் இருக்கிறார். ஏனெனில் அனைத்திற்கும், தெர் இஸ் எ லிமிட். 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close