#Biggboss Day 48: எது கெட்ட வார்த்தை, கோபம் தான் குப்பை- பிக்பாஸில் கமல் நடத்திய பஞ்சாயத்து

  Newstm Desk   | Last Modified : 06 Aug, 2018 02:59 pm
what-happened-in-biggboss-day-48

பிக்பாஸ் இரண்டாவது சீசனில் நேற்றைய எபிசோடை பார்க்க தான் பார்வையாளர்கள் பெரும் எதிர்பார்ப்போடு காத்திருந்திருப்பார்கள் என்று தோன்றுகிறது. அதற்கு காரணம் கடந்த வாரம் நடந்த டாஸ்க். இதற்கு கமலின் எதிர்வினை எப்படி இருக்க போகிறது என்பதை பார்க்கும் ஆர்வம் அனைவருக்கும் இருந்தது. இதனை அறிந்தவர் போல தான் நேற்று கமலும் நிகழ்ச்சியை தொடங்கினார். 

எப்போதும் நிகழ்ச்சியை தொடங்கும் போது கமல் முகத்தில் இருக்கும் சிரிப்பு நேற்று இல்லை. நேற்றைய தினம் வெளியான பிரோமோக்களில் அவர் கோபம் கொப்பளிக்க பேசிய காட்சிகளை பார்த்து விட்டு நிகழ்ச்சியை பார்க்க தொடங்கி இருந்தால் இன்னும் எஃபெக்டாக இருந்திருக்கும். 

"எப்போதும் இல்லாத எதிர்பார்ப்பு, என்ன செய்ய போகிறார் கமல்" என தொடங்கினார் ஆண்டவர். பிறகு ஏன் இப்படி என்பதை காட்ட ரீகேப் காட்டப்பட்டது. வழக்கமாக ரீகேப் முடிந்ததும் பார்வையாளர்கள் கமலிடம் கேள்வி கேட்பார்கள். நேற்று அப்படி எதுவும் காட்டப்படவில்லை. ரீகேப்பை தொடர்ந்து 47வது நாள் காட்சிகள் காட்டப்பட்டன. 

பாலாஜியை தொடர்ந்து, எனக்கு சாப்பாடு வேண்டாம் என்று கூறிக்கொண்டு இருந்தார் ஐஸ்வர்யா. அவருக்கு சென்றாயன் உணவு கொடுக்க, வேண்டாம் என்று மறுத்துவிட்டார். பின்னர் மகத், டேனி என அடுத்தடுத்து ஒவ்வொருவராக வந்து அவரிடம் சாப்பிட சொல்லி கேட்டனர். வேகமாக வந்த வைஷ்ணவி, "என்ன பிரச்னை உனக்கு" என்று கத்த தொடங்கினர். அதற்கு ஐஸ்வர்யா சாப்பிட மாட்டேன் என்று வீம்பு பிடிப்பதையே பார்த்துவிட்டு போகலாம். வைஷ்ணவி குரலில் மட்டும் ஏனோ போலித்தனம் இருப்பது போன்று உணர்வு வந்து கொண்டே இருக்கிறது. 

யார் சொல்லியும் கேட்காத ஐஸ்வர்யாவின் கோபம் யார் மீது என்பதை அவரே கூறினார். "எல்லார் கிட்டயும் குப்பை தொட்டி பிரச்னை என்ன ஆச்சினு கேக்றாங்க. இப்படி பண்ணிட்டு பின்ன வந்து பேட்டா, பாபுனு சொல்ல வேணாம்" என்று மும்தாஜ் மீது இருந்த கோபம் குறித்து பேசினார். 

கஜினிகாந்த் படக்குழுவினர் வந்திருந்த போது, சதீஷிடம் மும்தாஜ் "குப்பை" மேட்டர் பற்றி கேட்டார் என்பது ஐஸ்வர்யாவின் குற்றச்சாட்டு. 

மேலும், " அவங்க ஏன் அறிவுரை கூறிக்கொண்டு இருக்கிறார். இப்போ தேவையில்லாமல் பிரச்னை செய்து கொண்டு இருக்கிறார். அவங்களுக்கு அட்டிடியூட் மட்டும் தான் இருக்கு. நான்அன்னைக்கு அழுதுட்டு இருக்கும் போது, ஜஸ்ட் கேம் தானே என சொல்கிறார். எப்போ பாரு வந்து கொஞ்சிட்டே இருகாங்க" என அடுக்கடுக்காக பேசிக்கொண்டு இருந்தார் ஐஸ்வர்யா.

நீ தானே சதீஷ் கிட்ட கேட்டுட்டு இருந்த என்று ஜனனி கேட்டதற்கு, "அதுக்கு முன்னாடி அவங்க கேட்டாங்க" என்றார் ஐஸ்வர்யா. மேலும், "அவங்க பெரிய நடிகை. அதுக்கு நான் மரியாதை கொடுக்குறேன். ஆனா குப்பையை அவங்க மேலயா போட்டேன், அவங்களுக்கு என்ன?. நான் பிக்பாஸ் விட்டு போக போறேன். ஒன்னு அவங்க இருக்கணும், இல்லைனா நான் இருக்கணும்" என்றார். 

உனக்கு பிரச்னைனா நேரா அவங்க கிட்ட பேசிடு என்று அறிவுரை கூறினார் யாஷிக்கா. யார் பேச்சையும் கேட்கும் நிலையில் ஐஸ்வர்யா இல்லை. மைக்கை பிடித்துக்கொண்டு கன்ஃபெஷன் அறைக்கு கூப்பிடுங்கள் பிக்பாஸ் என்ற கேட்டுக் கொண்டு இருந்தார். ஒரு முறை அவருக்கு ஆதரவாக பேசிய பிக்பாஸ், மீண்டும் அதையே செய்வார் என்று ஐஸ்வர்யா நினைத்திருக்க கூடாது. ஏனேனில் அப்படி ஒன்று நடக்கவே முடியாது. 

மும்தாஜ் அப்போது அந்த இடத்திற்கு வர, டேனி அவரிடம் இதுகுறித்து கேட்கிறார். "நான் கேட்கவே இல்லை... சதீஷ் தான் என்னிடம் கேட்டார்" என்று விளக்கினார் மும்தாஜ். பின்னர், நீங்க கேட்டீங்க, இனி என் வழியில் வராதீங்க என்று காட்டமாக கூறினார் ஐஸ்வர்யா. "நான் இனி வரவே மாட்டேன்" என்று கூறிவிட்டு சென்றார் மும்தாஜ். கடந்த வார டாஸ்க்கில் மும்தாஜ் தனது கோபத்தை முழுமையாக காட்டாமல் இருந்ததற்கு காரணம் ஐஸ்வர்யா தான். ஐஸ்வர்யாவிடம் பொன்னம்பலம் குரல் உயர்த்தி பேசிய போது வந்து தடுத்தவர் மும்தாஜ் தான். ஆனால் தற்போது தான் வளர்த்த கிடா தன்னையே முட்டுவதை எப்படியோ ஏற்றுக்கொண்டு கார்டன் பக்கம் சென்றார் மும்தாஜ். இது அவருக்கு புதிதல்ல... ஷாரிக்கும் இதையே முன்னர் செய்திருந்தார். 

மும்தாஸ் அந்த இடத்தை விட்டு சென்ற பிறகும் ஐஸ்வர்யா கத்திக் கொண்டு இருந்தார். அவர் மனதில் இவ்வளவு வன்மம் இருந்திருக்கிறதா என்று யோசிக்கும் அளவிற்கு பேசினார் ஐஸ்.

"அவங்களால ஒரு டாஸ்கல புரூவ் பண்ண முடிஞ்சதா?. ஆனா நான் என் திறமையை நிரூபிச்சிருக்கேன். அவங்க அட்வைஸ் மட்டும் தான் பண்றாங்க. ஒரு டாஸ்க் கூட சரியா பண்ண முடியலனு நான் போய் சொல்லவா?. எனக்கு எப்படி பேசனும்னு தெரியும். குப்பைகொட்டினத பத்தியே பேசுறாங்க. அதனால எனக்கு என்ன ஆக போகுது. 6 வருஷம் நான் சென்னையில தனியா தான் இருந்தேன். இனியும் தனியா தான் இருக்கனும்" என்று அவர் பேசிக்கொண்டே போக. அனைவரும் என்ன சொல்லி சமாளிப்பது என்று தெரியாமல் முழித்தனர். 

நீ வெளிய போனால் உனக்கு நல்ல பேரு இருக்குமா(?!) என்று கூறினார் சென்றாயன். 

"யாருக்காகவோ நீ ஏன் வெளிய போகனும். உன்ன எல்லாருக்கும் பிடிச்சி இருக்குணும்னு நினைக்காத" என்று வழக்கம் போல அறிவுரையை தொடங்கினார் தோழி யாஷிக்கா. சரியான அறிவுரையும் கூட.

கார்டனில் பாலாஜியிடம் இதுகுறித்து விளக்கி கொண்டு இருந்தார் மும்தாஜ். உள்ளே ஐஸ்வர்யா, "Dont show me your ***** love" என்றுகத்தி கொண்டு இருந்தார். 

நீ இன்னும் அந்த கதாபாத்திரத்திற்குள் தான் இருக்க. அந்த டாஸ்க் முடிஞ்சி போச்சி. வெளிய வா. இது நீ இல்ல. நீ ஸ்வீட்டான பொண்ணு என்று சரியாக சுட்டிக்காட்டினார் ஜனனி. ஆனால் ஐஸ்வர்யா எதையும் கேட்க தயாராக இல்லை. 

"இனிமே வீட்டுக்கு வர கெஸ்ட்கிட்ட, வெளிய நடக்கிறது பத்தி பேசாதீங்க" என்று மும்தாஜிடம் கூறிக்கொண்டு இருந்தார் பாலாஜி. 

இரவில் லைட்ஆஃப் செய்யப்படுவதற்கு முன்பு நடந்து கொண்டு இருந்த பாலாஜியிடம், உள்ள போங்க பாலாஜி அண்ணா என்று வைஷ்ணவி கூறினார். உடனே பாலாஜி அண்ணாவாவது, கீலாஜி அண்ணாவாவது என்று ஃபார்மிற்கு வந்தார் பாலாஜி. அவர் புறம் பேசுவதையும், தகாத வார்த்தைகளை பயன்படுத்தாமலும் இருந்தாலே அவரது ஒன்லைனர், டைமிங் சென்சிற்காக பிடித்தமான போட்டியாளராக இருப்பார். ஆனால் அவர் தனது தவறை மாற்றிக்கொள்ள நினைப்பதே இல்லை. 

48வது நாள் காலை கத்தாழ கண்ணால பாடலோடு தொடங்கியது. ஜனனிக்கென போடப்பட்ட பாடலாக இருக்குமோ என்று தோன்றியது. குரூப்பாக சேர்ந்து பெண்கள் நடனமாடினர். முந்தைய தினம் ஐஸ்வர்யா காட்டிய கோபம் நடனம் ஆடும் போது இல்லை. 

பொன்னம்பலம் சாப்பிடாமல் இருப்பது பற்றி வைஷ்ணவியும், பாலாஜியும் பேசிக்கொண்டு இருந்தனர். அவர் செய்த தவறுக்கு இந்த தண்டனை கம்மி தான் கூறினார் வைஷ்ணவி. சில தினங்களுக்கு முன் மேகி டாஸ்க் கொடுக்கப்பட்ட போது வெற்றி பெற்ற டேனி அணிக்கு ஸ்பெஷலாக பரிசுகள் வந்திருந்தது. 

பொன்னம்பலத்தின் தண்டனை முடிந்து விட்டதாக அறிவித்தார் பிக்பாஸ். இதனை அனைவரும் உற்சாகமாக கொண்டாடினார்கள். அனைவரும் வந்து பொன்னம்பலத்தை கட்டியணைத்தனர். ஜனனியும்,ரித்விகாவும் உட்பட. முதல் நாளில் இதே பொன்னம்பலம் தான் ஜனனி கட்டிப்பிடித்ததை பற்றி "என்ன இந்தபொண்ணு வந்து கட்டிப்பிடிக்குது" என்று பேசியவர். பிக்பாஸ் வீட்டிற்கு வந்த பிறகு பல வ்வொருவரிடமும் மாற்றம் தெரிய தான் செய்கிறது. 

இன்னொரு முறை ஸ்டோர் ரூம் பெல்லடிக்க, உள்ளே பிறந்தநாள் கேக் அனுப்பப்பட்டு இருந்தது. யாஷிக்காவின் 19வது பிறந்தநாள். அந்த கொண்டாட்டத்தோடு அன்றைய தினம் முடிந்தது. 

இதையெல்லாம் பார்த்து முடித்த பிறகு பேச தொடங்கினார் கமல். 

சர்வாதிகாரம், கர்வம், பெர்சனல் பாரபட்சம் ஆகியவை இந்த வீட்டில் இருப்பது பற்றி எனக்கு ஆச்சரியம் இல்லை. ஆனால் வெளியே இவற்றை பார்க்கும் போது அதிர்ச்சியாக இருக்கிறது. உங்க கோபம் புரியுது. ஆனா லேட்டா கோபப்படுறீங்க. இந்த குடும்பம்(பார்வையாளர்களை நோக்கி) பற்றி கவலைப்படுபவன், இந்த குடும்பத்தை பற்றி கவலைப்பட மாட்டேனா? என்று அகம் டிவிக்குள் செல்வதற்கு முன் பூடகமாக பேசினார் கமல். 

போட்டியாளர்கள் கமலை பார்த்து உற்சாக குரலில் வணக்கம் சொல்ல... ஆங் உட்காருங்க என்று முடித்துவிட்டார் கமல். 

என்ன நடந்துட்டு இருக்கு என்று போட்டியாளர்களிடம் கமல் கேட்டார். களவரமே நடந்தது சார் என்று இரண்டு,மூன்று குரல்கள் கேட்டன. "இந்த பூனையும் பால் குடிக்குமானு நினைத்தோம், ஆனா பாயாசமே குடிச்சிடுச்சி" என்றார் சென்றாயன். உடனே கைதட்டல்கள் பறக்க... கைத்தட்டல் வாங்க வேற எதாவது பழமொழி இருக்கா என்றார் கமல். அதற்கும் கைதட்டினார்கள்.

தலைமை பொறுப்பு மாற வேண்டும் என்று தான் உண்ணாவிரதம் இருந்ததாக கூறினார் பாலாஜி. அது போல தலைவரை மாற்றிவிட்டார்கள் என்றும் கூறினார். அவர் சொல்லவில்லை என்றாலும் தலைவரை மாற்றி தான் இருப்பார்கள். 

"இப்போ தான் சிலரோட மாஸ்க் கீழ வந்து இருக்கு. சில விஷயங்கள் இங்க நடந்தது. எனக்கு அதுல உடன்பாடு இல்லை. பெர்சனல் பிரச்னை எல்லாம் மனசுல வெச்சி நடந்துக்கிட்டாங்க" என்றார் மும்தாஜ். 

ஷரிக்கின் முகம் சோகமாக இருப்பதை பார்த்து விசாரித்தார் கமல். யாஷிக்கா பிறந்த நாளை கொண்டாடி விட்டு தூங்கினோம். அதுனால தான்...என்றார் ஷாரிக். 

ஓ.. பிறந்தநாளை கொண்டாடும் அளவுக்கு இந்த வீட்டில் அனைவரும் சந்தோஷமாக இருக்கிறீர்களா? என்றார் கமல். 

மற்றவர்கள் யாரும் எதுவும் வாயை திறக்காமல் இருக்க, நேரடியாக ஐஸ்வர்யாவிடம் கேள்வி கேட்டார் கமல். ஆல் இஸ் வெல்-ஆ ஐஸ்வர்யா என்று கேட்டதற்கு "இல்ல" என்ற பதிலுடன் தொடங்கினார். 

"எனக்கு ஹிட்லராக இருக்கும் டாஸ்க் கொடுத்தார்கள். அதனை முடித்துவிட்டு அதில் இருந்து வெளியே வர 100 மணி நேரமா நான் முயற்சி செஞ்சிட்டு இருக்கேன்" என்றார் ஐஸ். 

ஆனால் அந்த கதாபாத்திரத்திற்குள் போக மட்டும் நீங்க எந்த கஷ்டமும் பட்டது போல தெரியவில்லை என்றார் கமல். அதனை ஒப்புக்கொண்ட ஐஸ்வர்யா. இந்த டாஸ்க்கால் நீங்கள் மகிழ்ந்தீர்களா என்று கேட்டதற்கு இல்லை என்றார். 

மேலும், "இந்த டாஸ்க் தொடங்குவதற்கு முன்பு பிக்பாஸ் என்னை அழைத்து, யார் மீதும் கருணை காட்டக்கூடாது என்றார். நான் இதனை சவாலாக எடுத்துக்கொண்டேன். அவர் சொன்னது போல தான் நடந்து கொண்டேன் என்றார். 

"உண்மைய சொல்லுங்க... இல்லைனா நான் பிக்பாஸையே விசாரிப்பேன்" என்றார் கமல். உண்மையில் பிக்பாஸ் எந்த அளவுகோளும் கொடுக்கவில்லை. ஆனால் ஐஸ்வர்யா செய்ததையும தடுக்கவில்லை. 

பின்னர் பாலாஜியிடம் ஐஸ்வர்யாவின் அந்த முகம் முகமூடியா என்று கமல் கேட்க, இல்லை என்றார் பாலாஜி. 

உடனே, "அவர் கெட்ட வார்த்தை பேசுகிறார்..." என்று தொடங்கினார் ஐஸ்வர்யா. அவரை நிறுத்தி, எது கெட்டவார்த்தை என்று நீண்ட விளக்கம் அளித்தார் கமல். இதில் என்னை பொறுத்தவரை சாதி பெயர் வைத்து என்னை கூப்பிடுவது கூட கெட்ட வார்த்தை தான் என்றும் கூறினார். 

"என் அம்மா பத்தி தப்பா பேசினாரு. அது தான் எனக்கு பிரச்னை" என கூறினார் ஐஸ்வர்யா. "என் அம்மா பத்தி கூட தான் தப்பா பேசினாரு" என்று மும்தாஜ் நடுவில் ஆஜராக... உனக்கு அது பிரச்னை இல்ல, எனக்கு பிரச்னை என்று மீண்டும் ஹிட்லர் வெளியே வந்தார். 

பின்னர், கோபம் வரட்டும்... ஒருவரை நாய் என்றால் சொன்னால் சொல்பவரும் நாய் தானே என்று கமல் கூறியதும் தலையை தொங்கப்போட்டார் ஐஸ்வர்யா. 

மும்தாஜிடம், இங்க இருந்த மானஸ்தன் எங்கே என்ற இந்தியன் பட சீனை நினைப்படுத்தினார் கமல். அதற்கு,"பிக்பாஸ் என்ன சொன்னாரு என்று தெரியாது சார். நான் மட்டும் போய் தடுக்கவும் முடியாது" என்று விளக்கமளித்தார் மும்தாஜ்.

ஏன் புரட்சி வெடிக்கல என்று கேட்டதற்கு, நான் பொங்கினேன் சார் என்றார் சென்றாயன். யார் அடுப்பை அனைச்சது என்று அடுத்த போடு போட்டு சென்றாயனை ஆஃப் செய்தார் கமல். 

சென்றாயன் பேசிக்கொண்டு இருக்கும் போது, நான் வாய தொறக்கட்டுமா? கமல் சாருக்காக பார்க்குறேன் என்றார் ஐஸ்வர்யா. எனக்காக நீங்க வாயை மூட வேண்டாம் பேசுங்க, என்று கோட்டை கழட்டி கீழே போட்டார் கமல். உடனே அரங்கம் அதிர கைத்தட்டல்கள் கேட்டது. 

சென்றாயன் மற்றும் ஐஸ்வர்யாவின் உரையாடலின் போது மீண்டும் ஹிட்லர் தலை வெளியே வந்தது. உடனே அந்த கேரக்டரில் இருந்து வெளியே வாங்க என்று கமல் கோபத்தோடு கூறினார். 

பின்னர் சென்றாயன் என்ன கெட்ட வார்த்தை கூறினார் என்று சொல்லுங்கள் என்றதும்... நீண்ட நேரம் யோசித்து அதனை கூறினார் ஐஸ். பின்னர் அது கெட்ட வார்த்தையா... இங்க தான் அப்படி ஊர்ல அப்படி இல்லை என்று வழக்கம் போல டிராக் மாறி சென்று பின்னர் மீண்டும் நிகழ்ச்சிக்குள் வந்தார். 

தன்னை தான் டார்கெட் செய்கிறார்கள் என்றதும் அழ தொடங்கினார் ஐஸ்வர்யா. உடனே நீங்க வேணும்னா கன்ஃபெஷன் அறைக்கு சென்று அழுதுட்டு வரீங்களா என்று கூற, மற்ற போட்டியாளர்கள் முழித்தனர். "நீங்க அழுததை நாங்க பார்த்தோம். இவர்களும் பார்த்திருந்தால் மனம் உடைந்து போயிருப்பார்கள்" என்றார் கமல். 

பின்னர் கேன் ஐ வியர் மை கோட் என்று கேட்டு கோட்டை போட்டுக்கொண்டார். இந்த பிரச்னையின் வீரியத்தை குறைக்கவே கமல் இது போன்று செய்தார் என்பது தெரிகிறது. 

பாலாஜியிடம் இதுப்பற்றி கேட்க, அதற்கு பொன்னம்பலம் பதில் அளித்தார். உடனே யோகி பொன்னம்பலம் என்று கமல் கூறியதை கேட்ட போது யோக்கியன் பொன்னம்பலம் என்று கூறுவது போல இருந்தது. 

உள்ள இருப்பவர்களை நீங்க பார்த்துப்பீங்கனு நான் சொன்னேன், ஆனா நீங்களே அப்படி செஞ்சிட்டீங்களே என்றார் கமல். உடனே நான் பிளான் பண்ணி தான் பண்ணேன். ரொம்ப ஃபோர்சா பண்ணல என்று விளக்கினார் பொன்னம்பலம். நீங்கள் செய்த முறை தான் தவறு. ஆனால் செய்த காரியம் சரி என்று அவரது புரட்சியை பாராட்டினார் கமல். பொன்னம்பலம் கயிறை வைத்து நெறுக்கியதால் தான் தன்னால் சாப்பிட முடியவில்லை. இதையே தான் டாக்டரும் சொன்னார் என்று விளக்கினார் ஐஸ்வர்யா. 

பின்னர் ஐஸ்வர்யாவின் கோபம் குறித்து பேசினார் கமல். கடந்த வருடங்களில் உங்களிடம் காட்டப்படாமல் இருந்த அன்பு, தனிமை எல்லாம் சேர்த்து உங்களை என்ன செய்திருக்கிறது என்பதை தான் அன்றைய தினம் பார்த்தோம். உங்களுக்கு கிடைக்காத அன்பை மற்றவர்களுக்கு காட்டுங்கள் என்றார் கமல். 

பின்னர் பாலாஜியிடம் அவர் தொடர்ந்து தகாத வார்த்தைகளை பயன்படுத்துவது கூறித்து கமல் கேட்டார். நான் என்ன பேசினாலும் அவங்கள பத்திதான் பேசுறோம்னு  நினைச்சிட்டு பேசுறாங்க என்று ஐஸ்வர்யா மீது பழியை போட்டார் பாலாஜி. உடனே நான் எல்லாத்தையம் பார்த்தேன் என்று ஆஃப் செய்தார் கமல். இதனை ஒவ்வொரு முறையும் கமல் கூறிக்கொண்டே இருக்கிறார். வீட்டில் என்ன நடந்தாலும் பார்வையாளர்களுக்கு காட்டப்படுகிறது என்பதை அவர்கள் ஏனோ அடிக்கடி மறந்து விடுகிறார்கள். 

பின் குப்பை கொட்டிய போது ரௌத்திரம் காட்டியிருக்கலாம் என்றார் கமல். பின்னர் இது போன்று யாருக்கும் செய்ய கூடாது என்று ஐஸ்வர்யாவிடம் கூறினார். எனக்கு எல்லார் மேலயும் லவ் இருக்கு. ஆனா அந்த டாஸ்க்  அப்போ... என்று ஐஸ்வர்யா இழுக்க "எனக்கு புரியுது. இங்க இருக்கவங்க தான் அதை ஏதோ சமூக அநீதி மாதிரி பேசுறாங்க. இது கேட்க கமலுக்கு தைரியம் இருக்கானு வேற கேள்வி. அவங்கள பார்த்தா தான் பரிதாபமாக இருக்கு" என்றார். 

கமல் பேசிக் கொண்டு இருந்த போது  பார்வையாளர்கள் மத்தியில் இருந்த சிறுவன் தூங்கிவிட, அவரை கைக்காட்டி பேசினார் கமல். அவரை எழுப்ப வேண்டாம். இன்னும் 20 வருடங்களுக்கு பிறகு அவர் எழ வேண்டிய அவசியம் வரும்" என்று தனது வழக்கமான பாணியில் கூறினார். 

பின்னர் டேனியும்,ஜனனியும் டபுள் ஜால்ரா அடித்ததாக கூறினார் கமல். பிக்பாஸ் சொல்வதை தான் அவர்கள் செய்தார்கள். இதற்கு அவர்களுக்கு பாராட்டும் கிடைத்தது. ஆனால் கமல் திட்டுகிறார். யாரிடம் பாராட்டு பெற அவர்கள் நடந்து கொள்ள வேண்டும் என்று குழப்பம் எழாமல் இல்லை. 

பின்னர் பாலாஜியின் உண்ணாவிரதம் எப்படி நடந்தது என்பதற்கு குறும்படம் போட்டுக்காட்டினார்கள். அவர் பசிக்கு சாப்பிட்டத்தை அப்படி காட்டியிருக்க வேண்டாம் என்று தோன்றியது. பின்னர் "என்ன பாலாஜி உணவு அகத்திற்குள் சென்றதா" என்று தனக்கே உரிய நகைச்சுவை உணர்வுடன் கேட்டார் கமல். 

இதே போல மகத் ஏதோ சேட்டை செய்துவிட்டார் போல. குறும்படம் போடலாமா? என்று கமல் கேட்க... மகத் அசடுவழிந்தார். பின்னர் வேண்டாம் என மன்னித்துவிட்டார். 

பின்னர் எவிக்‌ஷன் குறித்து பேச தொடங்கினார். ஒவ்வொருவரும் தங்களை ஏன் நாமினேட் செய்தார்கள் என்ற விளக்கம் அளித்த பிறகு ரித்விகா சேஃப் என்று கூறினார் கமல். இதற்கு நடுவில் நாமினேட் ஆனா ஷாரிக்கிடம் கமல் எதுவும் கேட்கவில்லை. ஷாரிக் இதுப்பற்றி கேட்க... எல்லாம் உடனே தெரியனுமா, நாளை பார்ப்போம் என்று சொல்லிவிட்டு கிளம்பினார் கமல். 

இந்த பஞ்சாயத்து உண்மையில் பார்வையாளர்கள் எதிர்பார்த்தது போல இல்லை. ஆனால் அந்த வீட்டில் இருப்பவர்களிடம் இவ்வளவு தான் பேச முடியும் என்பதை நாம் ஏற்றுக்கொண்டு தான் ஆக வேண்டும். சுற்றி சிலர் இருந்தாலும் பிக்பாஸ் வீடு என்பதை தனிமையே. எனவே அவர்களிடம் வெளியே உள்ள மொத்த அழுத்தத்தையும் காட்ட முடியாது. அது அவர்களை இன்னும் பலவீனமாக்கும். இதனை கமல் சரியாக கையாண்டார் என்றே தோன்றுகிறது. ஆனால் குப்பை பிரச்னை குறித்து அவர் அதிகம் பேசாதது மட்டும் நெருடல்.

*****

ஐஸ்வர்யா உடனானா உரையாடலின் போது கமல் : மேற்கு வங்கத்தில் ஒரு காமராஜர், ஒரு அண்ணாவை காட்டிவிடுங்கள்( அந்தபெயர்களை வைத்திருப்பவர்கள்). ஆனால் இங்கு சுபாஷ் சந்திர போஸ் இருக்கிறார்கள். நேரு இருக்கிறார்கள் என்றார்.

வேகமாக பல தலைப்புகளுக்குள் நுழைந்து பலவற்றை பற்றி அவர் பேசியதால், இந்த தலைப்பு ஏன் வந்தது என்று தெரியவில்லை. 

பிக்பாஸ் 2 : றிமுக நாள்  I முதல் நாள்   I  2ம் நாள்   I   3ம் நாள்   I   4ம் நாள்   I   5ம் நாள்  I   6ம் நாள்  I   7ம் நாள்  I  8ம் நாள் I 9ம் நாள்  I

10ம் நாள்   I   11ம் நாள் I   12ம் நாள்   I  14ம் நாள்   I   15ம் நாள்   I   16ம் நாள்   I   17ம் நாள்   I   18ம் நாள்   I   19ம் நாள் I   20ம் நாள் 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close