#BiggBoss Day 50: 50வது நாள் இப்படியா இருக்கணும்!

  Newstm Desk   | Last Modified : 07 Aug, 2018 12:14 pm

what-happened-in-biggboss-day-50

பிக்பாஸ் வீட்டிற்குள் போட்டியாளர்கள் சென்று நேற்றோடு 50 நாட்கள் ஆகின்றன. கடந்த ஐம்பது நாட்களில் சுவாரஸ்மாக இருந்த நாட்கள் என ஐஸ்வர்யா குப்பை கொட்டியது, பொன்னம்பலம் திட்டியது  போன்ற 10 நாட்களை கூறலாம். மற்றப்படி வெறும் வசைப்பேச்சுகள், புறம் பேசுவது என்று தான் நிகழ்ச்சி சென்றுள்ளது. கடந்த நாட்கள் தான் அப்படி என்றால், அரைசதம் அடித்த நாள் கூட எந்த விறுவிறுப்பும் இல்லாமல் தான் சென்றது. 

50வது நாள் என்ன நடந்தது?

50வது நாளை மங்களகரமாக தொடங்க ‘சில்லாக்ஸ்’ பாடல் ஒலிக்கப்பட்டது. காலையில் எப்போதும் இருக்கும் சுறுசுறுப்பு போட்டியாளர்களிடம் இல்லை என்றாலும் வழக்கம் போல சிலர் நடனமாடினர். இதனை அவர்கள் கடமையாகவே செய்து வருகின்றனர். பிக்பாஸின் கட்டளையாக கூட இருக்கலாம்.

பாடல் முடிந்ததும், வானத்தை நோக்கி குட் மார்னிங் ஷாரிக் என கூறினார் ஐஸ்வர்யா. இதனை ஷாரிக் வீட்டில் இருந்து பார்த்த போது என்ன ரியாக்‌ஷன் கொடுத்திருப்பார் என்பதை பார்க்க நேர்ந்திருந்தால் சிறப்பாக இருந்திருக்கும். கூடவே உமா ரியாஸ் முகத்தையும் சேர்த்து.

இந்த வாரத்தின் தலைவி பொறுப்பில் இருக்கும் யாஷிகா, அணிகளை பிரித்தார். முன்னரே வீட்டில் இருந்தவர்களிடம் இது குறித்து பேசி அவர் ஒரு முடிவுக்கு வந்திருந்தது தெரிந்தது. அதன் படி சரியாக அணிகளை பிரித்தார்.

பின் நாமினேஷன் படலம் தொடங்கியது. ஐஸ்வர்யாவுக்கு இம்யூனிட்டி பவர் கொடுக்கப்பட்டு உள்ளதால் அவரையும், இந்த வாரத்தின் தலைவி என்பதால் யாஷிக்காவையும் எவிக்‌ஷனுக்கு நாமினேட் செய்ய முடியாது என்று அறிவிக்கப்பட்டது. ஒரு வேளை ஐஸ்வர்யாவுக்கு ஸ்பெஷல் பவர் கிடைக்கவில்லை என்றால், அவரை மற்ற போட்டியாளர்கள் நாமினேட் செய்திருப்பார்களா என்பதையும் யோசிக்க வேண்டும். வீட்டில் சிலர் ஐஸ்வர்யா பக்கம் இருந்திருப்பார்களோ என்றும் தோன்றுகிறது. கேட்டால் டாஸ்க் தானே என்றும் கூறியிருப்பார்கள். கமலே சொல்லிவிட்டார் டாஸ்க் தானே!

இந்த முறை பழையப்படி கன்ஃபெஷன் அறையில் நாமினேஷன் நடந்தது. முதலாவதாக வந்த மும்தாஜ், எதையும் புரிந்து கொள்ள தவறுகிறார் என்று சென்றாயனையும், முன்னர் ஏற்பட்ட சண்டை காரணமாக மகத்தையும் தேர்வு செய்தார். சென்றாயன் கூறிய காரணங்கள் மிக சரியாக இருந்தது. முதலில் மகத்தை தேர்வு செய்தார். மகத் தன்னிடம் மட்டும் கோபமாக பேசுகிறார்.

சில சமயங்களில் அடித்துவிடுவார் என்ற பயமும் ஏற்படுகிறது என்ற காரணத்தை சென்றாயன் கூறினார். பின்னர் வைஷ்ணவியை நாமினேட் செய்தார். அவர் தனியறையில் அடைக்கப்பட்ட பிறகும் வெளியே வந்து பழையப்படி தான் இருக்கிறார் என்றார். பின்னர் பாலாஜி மற்றும் சென்றாயன் ஆகியோரை நாமினேட் செய்தார் ஜனனி.

டேனி மற்றும் சென்றாயனை நாமினேட் செய்தார் பாலாஜி. சென்றாயன் மீது அவருக்கு இருக்கும் அக்கறை  சரி தான் என்றாலும். நாமினேட்செய்யும் அளவுக்கு பாலாஜிக்கு அவர் எந்த தவறும் செய்யவில்லை… இரவில் சப்பாத்தி எடுத்து வந்ததை தவிர.

சென்றாயன் மற்றும் பொன்னம்பலம் பெயரை நாமினேட் செய்தார் ரித்விகா. மகத்தும் அவர்கள் பெயரையே கூறினார். டேனி மற்றும் சென்றாயன் பெயரை கூறினார் பொன்னம்பலம். சென்றாயன் மற்றும் பொன்னம்பலத்தை நாமினேட் செய்தார் வைஷ்ணவி. ஜனனி மற்றும் ரித்விகாவை  ஐஸ்வர்யா நாமினேட் செய்தார். வைஷ்ணவி மற்றும் ஜனனியை டேனி நாமினேட் செய்தார்.

இந்த முறை நாமினேஷன் பல மாறுதல்கள் தெரிகின்றது. பலர் சென்றாயனின் பெயரை சொல்லி இருக்கின்றனர். கடைசியாக யாஷிக்காவுக்கு ஒருவரை நேரடியாக நாமினேட் செய்யும் வாய்ப்பு கிடைத்தது. அதனை பயன்படுத்திக்கொண்ட அவர். சோம்பேறியாக இருக்கிறார் என்ற காரணத்திற்காக ஜனனி பெயரை கூறினார்.

கடைசியாக சென்றாயன், பொன்னம்பலம் மற்றும் ஜனனி ஆகியோர் இந்த வார எவிக்‌ஷனுக்கு நாமினேட்டாகி இருந்தனர்.

உன்ன நாமினேட் செய்தது பிளான் தான் என்று படுக்கையறையில் ஜனனியிடம் கூறினார் ரித்விகா. அதற்கு, “எனக்கு தெரியும்,  என் முன்பே Code word  வைத்து பேசினார்கள். ஐஸ்வர்யாவிடம், “வெஜ் ஃபைரைட் ரைஸ்” என்று டேனி கூறினார். இந்த வீட்டில் நான் தான் வெஜ். சோ, என்னை தான் சொல்கிறார்கள் என்பது தெரிந்தது. அவர்கள் புத்திசாலித்தனமாக இதனை செய்ததாக நினைத்துக்கொண்டு இருக்கிறார்கள்” என்று கூறினார் ஜனனி.

பின்பு, “என்னை நாமினேட் செய்வது கூட பருவால, ஆனா சித்தப்பாவை ஏன் நாமினேட் செய்கிறார்கள் என்பது தான் புரியவில்லை” என்று ஜனனி கூறினார். பொன்னம்பலத்தால் சில டாஸ்க்குகள் செய்ய முடியவில்லை என்பதையும் ஏற்றுக்கொண்டு தான் ஆக வேண்டும். மேலும் ஐஸ்வர்யா விஷயத்தை போலவே அவர் மற்றவர்களை உடல் ரீதியாக தாக்குவதையும் ஏற்றுக்கொள்ள முடியாது. ஜனனிக்கு எந்த பிரச்னையும் இல்லை என்பதற்காக அவரை நாமினேட் செய்ய கூடாது என்று கூறிவிட முடியாது.

பின்னர் புகார் பெட்டி என்ற டாஸ்க் கொடுக்கப்பட்டது. அந்த டாஸ்க்கின் படி போட்டியாளர்கள் அனைவரும் தங்களை பாதித்த மற்ற போட்டியாளர்கள் பற்றி ஒரு அட்டையில் எழுதி அதனை  புகார் பெட்டியில் போட வேண்டும். அதன் படி போட்டியாளர்கள் அனைவரும் செய்தனர் . தலைவர் யாஷிகா இதற்கு நடுவராக இருப்பார். மேலும், அவர் பற்றி புகாரும் அளிக்கக்கூடாது.

இதெல்லாம் நடந்து கொண்டு இருக்க நாமினேஷன் பற்றி பாலாஜி, ஜனனி மற்றும் ரித்விகா ஆகியோர் பேசிக்கொண்டுஇருந்தனர். இவர்களை பொறுத்தவரை புறம் பேசுவது என்பதில் அர்த்ததை எப்படி புரிந்து வைத்திருக்கிறார்கள் என்பதை அவர்களே கூறவேண்டும். வைஷ்ணவி இப்படி செய்தால் மட்டும், வானத்திற்கும் பூமிக்கும் குதிக்கிறார்கள்.

அவர் பேசிக்கொண்டு இருந்த போது, தொடக்கத்தில் இருந்தே டேனியும் அவருடன் இருப்பவர்களும் பைனல்ஸ்க்கு போக வேண்டும் என்ற முடிவோடு இருக்கிறார்கள் என்றார் பாலாஜி.

மக்கள் எல்லாத்தையும் பார்த்துட்டு தான் இருக்காங்க, என்று மக்கள் ஆதரவு பெற நினைத்தார் ஜனனி. மேலும் தன்னை நாமினேட் செய்ய டேனி போட்ட திட்டம் குறித்தும் ஜனனி விளக்கி கொண்டு இருந்தார். இறுதிச்சுற்றுக்கு போக வேண்டும் என்று டேனி நினைத்திருப்பது உண்மை என்றாலும் அதில் எந்த தவறும் இல்லை. மேலும், அவரிடம்  ஒரு பிளான் இருப்பது தவறு என்றால், தமிழ் பெண் ஒருவர் இறுதிப்போட்டிக்கு செல்ல வேண்டும் என்று ரித்விகாவும் ஜனனியும் நினைப்பதும் தவறு தானே.

ஒருவர் தொடர்ந்து வெற்றி பெரும் போது, “இவன் எப்படி வெற்றி பெறலாம்… தப்பாச்சே “ என்பதை போல தான் இருந்தது இவர்கள் டேனி பற்றி பேசியது.

அனைவரும் சாப்பிட்டுக் கொண்டு இருந்த போது, மும்தாஜ்க்கு எடுத்து வெச்சதுனா எனக்கு போடாதப்பா என்று பொறியல் கொடுக்க வந்த டேனியிடம் கூறினார் பொன்னம்பலம். அத சாப்பிடுவது பாவத்துக்கு சமம் என்று மிகையான வார்த்தைகளை போட்டுபேசினார்.

பின்னர் கெட் செட் கோ என்ற டாஸ்க் வழங்கப்பட்டது. டி.வி. ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் கொடுக்கப்படும் நீண்ட டாஸ்க் போல இருந்தது இந்த கெட் செட் கோ. இந்த டாஸ்க்கை டேனி அணிதான் முதலில் செய்து முடித்தது. ஆனால் அந்த அணி கடைசியாக படிக்க வேண்டிய ஸ்லோகனை ஒன்று சேர்ந்து படிக்காததால், கடைசியாக வந்து அதனை சரியாக செய்த மகத் அணி வெற்றி பெற்றதாக அறிவித்தார் நடுவர் யாஷிகா. 

பின்னர் புகார் பெட்டி டாஸ்க்கின் இரண்டாவது கட்டம் தொடங்கியது. நாம் எதிர்பார்த்திருந்த கட்டமும் கூட. இதில், எழுதப்பட்டிருக்கும் புகாரில் யார் பெயர் கூறிப்பிட்டு இருக்கிறதோ, அந்த நபர் குற்றவாளி கூண்டில் வந்து நிற்க வேண்டும். அவருக்கு ஆதரவாகவும், எதிராகவும் பேச விரும்புபவர்கள் வந்து பேசலாம். மேலும் குற்றவாளியாக நிற்கும் நபர் தன் மீது இருக்கும் குற்றச்சாட்டு தவறானது என்று வாதாட வேண்டும். இதிலும் யாஷிகா நடுவராக இருந்தார். 

முதலில் எடுக்கப்பட்ட புகாரில், பொன்னம்பலத்தை பற்றி எழுதி இருந்தனர். அந்த புகாரில் எழுதி இருந்ததை கேட்டதும், அதனை மும்தாஜ் தான் எழுதி இருப்பார் என்பது தெரிந்தது. அதில், நான் சமைத்தால் பொன்னம்பலம் சாப்பிட மறுக்கிறார் என்று எழுதப்பட்டு இருந்தது. நான் தான் எழுதினேன் என்பதை தெரிவித்துவிட்டு, பேச தொடங்கினார் மும்தாஜ். "பொன்னம்பலம் நான் சாப்பிடுவதை சாப்பிட மறுக்கிறார். இதனால் நான் சமைப்பதில்லை. என்னால் யாரும் சாப்பிடாமல் இருக்க வேண்டாம்"என்று கூறினார் மும்தாஜ். அதற்கு, "அவங்க சாப்பாடு கொடுத்துவிட்டு சொல்லிக் காண்பிக்கிறார்"என்று தனது விளக்கதை அளித்தார் பொன்னம்பலம். 

மேலும் மும்தாஜ் எழுதிய மற்றொரு புகாரில், யாஷிகா தவிர மற்ற அனைவர் மீதும் குற்றம்சாட்டி இருந்தார். எங்க ஏரியா, உள்ள வராதே டாஸ்க்கின் போது, மும்தாஜ் சாப்பிடாமல் இருந்தார். இதற்கு போட்டியாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அதன் பின்னர் இதுகுறித்து கமலிடம் அவர்கள் குற்றம்சாட்டினர். எனவே அந்த டாஸ்க்கின் போது, யாரும் தன் பக்கம் இல்லை என்ற புகாரை முன்வைத்தார் மும்தாஜ். இதற்கு ஒவ்வொருவரும் விளக்கம் அளித்தனர். இதில் அனைவரும் பொறுமையாக பேச, மகத் மட்டும் குரலை உயர்த்தி பேசினார். இது போன்று தனித்து நின்று மற்றவர்கள் மேல் குற்றம்சாட்டுவதால்,ஒருவர் பிரபலமடைந்து விட முடியாது என்று மகத் கூறினார். உண்மையில் அப்படி செய்து தான் பிரபலமாக வேண்டும் என்ற நிலை மும்தாஜுக்கு இல்லை. இதனையே மும்தாஜும் கூறினார். அவருக்கு டேனியும், பாலாஜியும் ஆதரவாக பேசினர். 

டீ போட்டுக்குடிக்க அனுமதி அளித்து இருக்கலாம் என்று ஜனனியிடம் கேட்ட போது, கிட்சன் ஏரியா எங்களிடம் இருந்தது. எனவே எங்கள் இஷ்டத்திற்கு தான் நடந்து கொள்ள முடியும் என்றார் ஜனனி. அதற்கு, "அதே போல என் உடம்பு என் இஷ்டம்" எந்த டாஸ்க் செய்ய வேண்டும் என்பதை நான் தான் முடிவு செய்வேன் என்றார் மும்தாஜ். 

சர்வாதிகாரி டாஸ்க்கின் போது ஐஸ்வர்யா தன்னை நாய் என்று கூறிவிட்டதை பற்றி எழுதி இருந்தார் சென்றாயன். நான் டாஸ்க் படி தான் செய்தேன். தவறு தான் மன்னித்து விடுங்கள் என்று சரணடைந்தார் ஐஸ்வர்யா. அதனை கேட்டதும், "நிறைய திட்டலாம் என்று தான் வந்தேன். ஆனால் இப்போ, நீங்க பேசினதை கேட்டதும் திட்ட மனம் வரவில்லை என கூறினார் சென்றாயன். பின்னர் மகத்தை நாமினேட் செய்யும் போது சொன்ன காரணத்தையே புகாராக எழுதியிருந்தார் சென்றாயன். என் ஃபிரெண்டுனா இப்படி தான் பேசுவேன் என்று கூறிவிட்டு சென்றார் மகத். 

பின்னர் குற்றவாளி கூண்டில் டேனி நின்றார். அவர் வீட்டில் இருக்கும் சிலரை அணியாக பிரித்து வைத்திருக்கிறார் என்று புகார் கூறப்பட்டு இருந்தது. டேனி மீது தான் தவறு என்று ஜனனி பேசினார். டேனி தன்னை வெஜ் பிரைட் ரைஸ் என்று பெயர் வைத்து பேசி நாமினேட் செய்ய ஐஸ்வர்யாவிடம் கூறியதை பற்றி கேட்டார் ஜனனி. அதனை ஒப்புக்கொண்ட டேனி, இனியும் பேசுவேன் என்றார். பொன்னம்பலமும், இவர்கள் அணிகளாக பிரிந்து இருக்கின்றனர் என்ற புகரை முன்வைத்தார். நண்பர்கள் ஒன்றாக இருக்கும் போது அணிகளாக இருப்பது போல தான் இருக்கும் என்று பொன்னம்பலத்தின் புகாருக்கு ஐஸ்வர்யா பதில் அளித்தார். 

சென்றாயனுக்கு எதுவும் புரிய வைக்க முடிவதில்லை என்று ஒருவர் புகார் செய்து இருந்தார். இதனை அதற்கு முன்னர் பலர் சென்றாயனிடமும், கமல் முன்னிலையிலும் கூறியிருக்கின்றனர். ஆனால் நேற்று இவ்வாறு கூறியதும் சென்றாயன், "எனக்கு எதுவும் தெரியவில்லை என்றால் என்னை ஏன் வீட்டிற்குள் அழைக்க போகிறார்கள். எனக்கு எல்லாம் தெரியும். மீண்டும் யாரும் அப்படி கூறக்கூடாது என்று கோபமாக கூறினார். 

நகைச்சுவை நடிகர் சதீஷ், பிக்பாஸ் வீட்டிற்கு வந்திருந்த போது குப்பை பிரச்னை குறித்து, மும்தாஜ் பேசியதை புகாராக எழுதி இருந்தார்கள். அதனை எழுதியது ஐஸ்வர்யா தான் என்பது அனைவரும் அறிந்ததே. இதுகுறித்து பாலாஜி பேசிய போது, "வெளியே இருந்து ஒருவர் வீட்டிற்குள் வரும் போது, வெளியே நடப்பது குறித்து கேட்பது முட்டாள் தனம். இனிமேல் அப்படி கேட்காதீர்கள்" என கூறினார். உடனே, அதெல்லாம் அவங்க இஷ்டம். நீங்க எப்படி முட்டாள்னு கூறலாம்" என கத்த தொடங்கினார் மகத். இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியது. ஆனால் மகத்தின் குரல் அதிகமாகவே கேட்டது.

இதே விஷயம் குறித்து ஷாரிக்கிடம் பாலாஜி பேசிய போது, இதே முட்டாள் என்ற வார்த்தையை பயன்படுத்தி உள்ளார். இதுகுறித்து மகத்திடம் ஷாரிக் கூறியுள்ளார். அந்த கோபத்தில் தான் மகத் கத்தினார் என்பது பின்னர் தெரியவந்தது. "இனி யார் வேண்டுமானாலும், அவர்கள் இஷ்டப்படி இருக்கலாம். யாரும் கேட்க கூடாது. பிக்பாஸ் கேட்டுக்கொள்ளட்டும்" என்று மகத் கூறினார். இதற்கு டேனி, "ஆமாம் மச்சான்" என் கூறினார். அதுவரை மகத்தை திட்டிக்கொண்டு இருந்த பாலாஜி,டேனி பக்கம் திரும்பி "ஏத்தி விட்ரீயா" என சண்டைக்கு போனார்.

அனைவரும் டேனி பக்கம் திரும்ப, அவர் தன்னிலை விளக்கம் அளித்துக்கொண்டு இருந்தார். அவர்களை அசுவாசப்படுத்தி இந்த டாஸ்க்கை நடுவர் யாஷிகா முடித்து வைத்தார். இந்த டாஸ்கில் பார்க்க வேண்டிய விஷயம், ஜனனி, ரித்விகா பற்றி யாரும் புகார் அளிக்கவில்லை. உண்மையிலேயே அவர்கள் யார் மனதையும் புண்படுத்தாமல் தான் விளையாடுகின்றனரா?

இந்த டாஸ்க்கை யோசித்தப்போது, பல பிரச்னைகள் வெடிக்கும் என்று பிக்பாஸ் எதிர்பார்த்து இருப்பார். ஆனால் நேற்றைய காட்சிகளை பார்த்ததும் "பஞ்சாயத்தாடா இது" என்று துண்டை எடுத்துக்கொண்டு பிக்பாஸே எழுந்து போயிருக்க கூடும். 

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close