#Biggboss Day 53: வைஷ்ணவிக்கு வாய்ல தான் சனி!

  Newstm Desk   | Last Modified : 10 Aug, 2018 01:29 pm
what-happened-in-biggboss-day-53

பிக்பாஸில் நாட்டாமை வரும் நாள் நெருங்கிவிட்டது. ஆனால் எந்த பஞ்சாயத்தும் நடந்தது போல தெரியவில்லை. இந்த வாரம் பெரிதாக தவறு செய்தவராக நம் கண்ணுணக்கு மகத் தான் தெரிகிறார். ஆனால் கமல் தான் மகத்தை தட்டிக்கேட்பதே இல்லையே...

பிக்பாஸ் வீட்டில் 53ம் நாள் என்ன நடந்தது?

மறைந்த தி.மு.க தலைவர் கருணாநிதியை நினைவுக்கூர்வதற்காக 53ம் காலையில் மேற்கை ஏற்காதே பாடல் ஒளிக்கப்பட்டது. நல்ல வேளையாக இந்த பாடலுக்கும் போட்டியாளர்கள் குரூப் டான்ஸ் ஆடவில்லை. எதற்காக அந்த பாடல் என்பதை அறிந்தே இருந்தனர். உண்மையாகவே தற்போது இந்த வீட்டிற்குள் இருப்பவர்கள், பெரும் நிகழ்வை பார்க்கும் வாய்ப்பை இழந்து விட்டார்கள். இனி ஆயிரமாயிரம் மக்கள் கூடி ஒரு தலைவனை வழியனுப்பும் காட்சியை பார்க்க தமிழர்களுக்கு வாய்க்குமா என தெரியவில்லை. 

கொஞ்சமே மேக்அப் போட்டு அமர்ந்திருந்த ரித்விகாவை பார்த்து, "மேக்அப் போட்ட உடனே நித்யா மாதிரி அழகா இருக்கு" என்று கலாய்த்து விட்டு சென்றார் பாலாஜி. உடனே, "நீ மேக்அப் போடாமலேயே அழகா தான் இருக்க" என்று ரித்விகாவிடம் கூறினார் வைஷ்ணவி. "நான் அழகா தான் இருக்கேன்னு எனக்கே தெரியுமே" எனஅவருக்கு ரித்விகா பதில் அளித்தார். இதுகுறித்த வாக்குவாதம் தொடர்ந்தது. இறுதியில் "என் நம்பிக்கை என் கிட்ட தான் இருக்கு. அதை நீங்க கொடுக்கனும் என்ற அவசியம் இல்ல" என்று வைஷ்ணவிக்கு கராராக பதில் அளித்தார் ரித்விகா. உடனே, ஆமா தப்பு தான் என ஒப்புக்கொண்டார் வைஷ்ணவி. இந்த உரையாடலை அப்படியே கடந்து விட முடியாது.

ரித்விகா இதுகுறித்து பேசும் போது, "இந்த மாதிரி பேசும் போது, நான் என்னமோ தாழ்வுமனப்பான்மையில இருக்க மாதிரி பிரோஜக்ட் ஆயிடும்" என்றார். சரியான பார்வை தான். ஆனால் அவ்வளவு காட்டம் காட்டியிருக்க வேண்டுமா என தெரியவில்லை. என்ன அடி வாங்கினாலும் வைஷ்ணவி மட்டும் திருந்துவதாக இல்லை. 

மகத்தும் ஷாரிக்கும் செய்யும் சூழ்ச்சியில் சிக்கிக்கொண்டதாக ஐஸ்வர்யாவும் யாஷிகாவும் பேசிக்கொண்டு இருந்தனர். ஷாரிக் தன் பெயரை கெடுத்துவிட்டு வெளியே சென்று விட்டார் என்று வருத்தத்துடன் கூறிக்கொண்டு இருந்தார் ஐஸ்வர்யா. இதையே வேற மாடுலேஷனில் பேசிக்கொண்டு இருந்தார் யாஷிகா. 

முன்னரே மகத்திடம், "உன்னோட கேர்ள் ஃபிரண்ட் கிட்ட என்ன பத்தி என்ன சொல்ல போற" என யாஷிக்கா கேட்டிருக்கிறார் போல. அப்போது மகத், உண்மையை தான் சொல்லுவேன் என கூறியிருக்கிறார். அதைப்பற்றி கூறிய யாஷிகா, "அவன் 100 சதவீதம் பொய் தான் கூறுவான்" என்று அடித்து கூறினார் யாஷிகா. ஆமா, அவங்களுக்கு இடையே என்னதான் நடக்குது. அவர்களாக வெளியே வந்து கூறும் வரை சஸ்பன்சிலேயே இருப்போம். 

அதன் பின்னர் பாத்திரம் கழுவுவதில் ஏதோ சலசலப்பு ஏற்பட்டது. சமையலில் பிரச்னை ஏற்படாமல் இருந்தால் அது பிக்பாஸ் வீடா என்ன?

கடைசியாக நடந்த 'எனக்குள் ஒருவன்' டாஸ்க்கில் சிறந்த மற்றும் மோசமான போட்டியாளரை தேர்வு செய்யும் பொறுப்பு நடுவர் ரித்விகாவுக்கு கொடுக்கப்பட்டது. அதன்படி, இரு அணிகளிலும் சிறந்த போட்டியாளராக ஜனனி மற்றும் ஐஸ்வர்யாவை தேர்வு செய்தார் நடுவர். பின்னர் மேசமான போட்டியாளராக டேனி மற்றும் பொன்னம்பலத்தை தேர்வு செய்தார். 

இவர்கள் இருவரும் கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தில் மிகையாக நடித்ததால் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டு இருக்கலாம். இந்த லிஸ்டில் மகத்தையும் சேர்த்து கொண்டால் சரியாக இருக்கும். 

மோசமான போட்டியாளர்களாக தேர்வு செய்யப்பட்டவர்கள் அடுத்த இரண்டு நாட்களுக்கு சமையல் பொறுப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று அறிவிக்கப்பட்டது. மேலும், சிறந்த போட்டியாளர்கள் அடுத்த தலைவர் பொறுப்புக்கான போட்டியில் பங்கேற்பார்கள். ஒருவேளை அந்த போட்டியில் ஐஸ்வர்யா வெற்றி பெற்றால், மீண்டும் அவர் தலைமையின் கீழ் பிக்பாஸ்வீடு வரும். நினைக்கவே பகீர் என்று இருக்கிறது. 

ரித்விகாவின் தேர்வு தவறானது என்று மும்தாஜ் கூறிக்கொண்டு இருந்தார். அவரைப் பொறுத்தவரை மகத்தும் மோசமான போட்டியாளராக தேர்வு செய்யப்பட்டு இருக்க வேண்டும் என்கிறார். டேனியும் மகத்தும்  செய்த  இரண்டுமே முகம் சுழிக்கும் வகையில் தான் இருந்தன. 

பின்னர் லக்சரி பட்ஜெட் பெருட்களை தேர்வு செய்வதற்கான டாஸ்க் தொடங்கியது. இதில் ஏதோ கூட்டல் குழப்பம் ஏற்பட்டது. கொடுக்கப்பட்ட புள்ளிகளை விட அதிகமான புள்ளிகளுக்கு பொருட்களை தேர்வு செய்திருக்கிறார்கள். இதனால் இந்த வாரத்திற்கான லக்சரி பட்ஜெட் பொருட்கள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்த பிரச்னை யாரால் என்பதை பற்றி சிறிது நேரம் பேசிக்கொண்டு இருந்தனர். 

53 நாட்கள் முடிவடைந்த பிறகும் சிலர் உரையாடலின் போது கேமராவை பார்க்கின்றனர். எப்படி அவ்வளவு கவனமாக இருக்க முடிகிறது என்பது தெரியில்லை. 

கடந்த ஒரு வாரமாக சென்றாயன் நடவடிக்கையில் மாற்றம் தெரிகிறது. தன்னை எதிர்த்து பேசுபவர்களை தயங்காமல் திருப்பி கேள்வி கேட்கிறார். அப்படி அடிக்கடி மாட்டிக் கொள்பவர் பாலாஜி. ஒருவேளை தன்னைப்பற்றி பாலாஜி, மற்றவர்களிடம் என்ன பேசுகிறார் என்பதை கேட்ட பிறகு இந்த மாற்றம் ஏற்பட்டு இருக்கலாம். 

முன்னதாக நடந்த டாஸ்க்கில் டேனியும் வைஷ்ணவியும் ஒரே அணியில் இருந்தனர். அப்போது டேனி வைஷ்ணவியின் மனம் புண்படும் படி பேசினார் போல...

அதைப்பற்றி மும்தாஜ் மற்றும் பாலாஜியிடம் பேசிக்கொண்டு இருந்தார் வைஷ்ணவி. தன்னை இதுபோல யாருமே மட்டம் தட்டி பேசியதே இல்லை என கண்கலங்க பேசினார் வைஷ்ணவி. அதனைப்பார்க்க பாவமாக இருந்தாலும்... சிறிது நேரத்தில், வழக்கம் போல மூச்சை பிடித்துக்கொண்டு வசனம் பேச தொடங்கிவிட்டார். "இந்த வீட்ல இருக்கவங்க ஒவ்வொருத்தரையும் பிச்சி பிச்சி அவங்க யாருனு காமிக்கிற திறமை எனக்கு இருக்கு" என்று அவர் பேசுவதை கேட்கும் போது முன்னர் ஏற்பட்ட பாவமே என்ற உணர்வு பறந்துவிட்டது. வைஷ்ணவி இந்த வீட்டில் கடுமையான போட்டியாளர் இல்லை. ஆனால் அவர் செய்யும் சில,  வீட்டில் இருப்பவர்களுக்கு எரிச்சலை ஏற்படுத்துகிறது. அவருக்கு எவிக்‌ஷனின் கடைசி கட்டம் வரை சென்று பின்னர் மற்றொரு வாய்ப்பை பிக்பாஸ் கொடுத்ததும் இதனால் தான். எனவே தன்னை பற்றி மற்றவர்கள் பேசாமல் இருக்க வேண்டும் என்றால், வைஷ்ணவி கொஞ்ச நாளுக்கு பேசாமல் இருக்க வேண்டும். செய்வாரா?

பின் மறைந்த கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் மெழுகுவர்த்தி ஏற்றி அவரை பற்றி பேசினர் போட்டியாளர்கள். அதனைத் தொடர்ந்து டாஸ்க் கொடுக்கப்பட்டது. விவாத மேடையில் இரு இரு அணிகளாக போட்டியாளர்கள் விவாதம் செய்ய வேண்டும். இதற்கு ஜனனி தான் நடுவர். எப்போதும் இந்த பொறுப்பு ஜனனிக்கு மட்டுமே கிடைக்கிறது.  

இந்த டாஸ்க்கில் முழு கவனத்தையும் பெற்றுக்கொண்டவர் சென்றாயன். எல்லாத்துக்கும் கத்தி கத்தி பேசிக்கொண்டு இருந்தார். 

இந்த வாக்குவாதத்தின் போது, பாத்ரூம் சுத்தம் செய்யும் பணிக்கு வேறு யாரும் வருவதில்லை என்ற முக்கியமான தலைப்பு பற்றி பேசினர். ஆனால் சரியாக எந்த முடிவும் கிடைத்தது போல தெரியவில்லை. இந்த டாஸ்க் முடிந்ததும் இதில் சிறப்பாக பேசியவராக வைஷ்ணவி தேர்வு செய்யப்பட்டார். மேலும் மோசமான பேச்சாளராக சென்றாயன் தேர்வு செய்யப்பட்டார். இந்த டாஸ்க்கோடு நேற்றைய பிக்பாஸும் முடிந்தது. 

கடந்த வாரத்தில் நாம் நினைத்ததற்கும்  மேலாக சர்ச்சைகள் இருந்ததால், இந்த வாரம் நடைபெற்ற எதுவும் சுவாரஸ்யமாக இல்லை. இது பிக்பாஸுக்கும் தெரியும், எனவே இன்றைய போட்டியில் எதையாவது செய்ய முயற்சிப்பார் பிக்பாஸ். பார்ப்போம். 

பிக்பாஸ் 2 : றிமுக நாள்  I முதல் நாள்   I  2ம் நாள்   I   3ம் நாள்   I   4ம் நாள்   I   5ம் நாள்  I   6ம் நாள்  I   7ம் நாள்  I  8ம் நாள் I 9ம் நாள்  I

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close