உள்குத்து – திரை விமர்சனம்

  பால பாரதி   | Last Modified : 31 Dec, 2017 11:53 am


நட்சத்திரங்கள் –தினேஷ், நந்திதா, சாயா சிங், சரத் லோகிதஸ்வா, திலீப் சுப்பராயன், ஸ்ரீமன், ஜான் விஜய், பால சரவணன், மொட்டை ராஜேந்திரன், செஃப் தாமோதரன், இசை-ஜஸ்டின் பிரபாகரன், ஒளிப்பதிவு-வர்மா, இயக்கம்-கார்த்திக் ராஜு, தயாரிப்பு-பி.கே.பிலிம் பேக்ட்ரி.

அக்காவையும், மாமாவையும் அநியாயமாகக் கொன்ற கந்து வட்டி தாதாவை, தம்பி பழி தீர்க்கும் கதை.            

கடலோர மீனவ குப்பத்துக்கு வரும் தினேஷ், அங்குள்ள பால சரவணனுடன் நட்பாகி, அந்தக் குப்பத்திலேயே தங்கி, அவனின் தங்கை நந்திதாவையும் காதலிக்கிறார். 

இதற்கிடையே, அந்த ஏரியாவையே நடுங்க வைக்கும் கந்து வட்டி தாதா சரத் லோகிதஸ்வா, அவரின் மகன் திலீப் சுப்பராயனுடன் வலியப் போய் நட்பு கொள்கிறார் பாராட்டு தினேஷ். பிறகு ஒரு நாள்,  திலீப் சுப்ராயனுக்கு உதவுவதைப் போல நடுக்கடலுக்கு கூட்டிப் போகும் தினேஷ், திடீரென அவனை கத்தியால் குத்தி சாய்க்கிறார்.

நட்பாக பழகிய திலீப்பை, தினேஷ் கொலை செய்தது ஏன்? என்பதே மீதிக்கதை.


கடலோர மீனவ மக்களின் வாழ்க்கை, மீன் பிடித் தொழில் செய்யும் மீனவ இளைஞர்கள், கந்து வட்டிக் கும்பலின் கை கூலிகளாக மாறும் அவலம், கந்து வட்டிக் கொடுமை, இதற்குள் ஒரு அழகான காதல், அக்கா-தம்பி பாசம்... என கமர்ஷியல் பேக்கேஜ் ஆக கொடுத் திருக்கிறார் இயக்குநர் கார்த்திக் ராஜு. ஆனால் பார்த்து சலித்த பழி தீர்க்கும் கதை, சுவாரஸ்யமில்லாத திரைக்கதையால் உள்ளே வந்த ரசிகர்களை கும்மாங்குத்து குத்தி அனுப்புகிறார் இயக்குநர்.       

பழி உணர்ச்சியை உள்ளுக்குள்ளே அடக்கிக் கொண்டு, சரியான  சந்தர்ப்பத்துக்காக காத்திருந்து ரௌத்திரமாகும் தினேஷ் ஆக்ரோஷமான நடிப்பைக் காட்டுகிறார். நாயகி நந்திதா, சிரிப்பால் சிறைபிடிக்கிறார். தினேஷ்காகவே நேர்ந்து விடப்பட்டத்தைப் போல காதலாடா மட்டும் பயன்படுகிறார். சீரியஸான சீன்களையும் தனது காமெடியால் கலகலப்பாக்குகிறார் பால சரவணன். அவரின் காமெடி  பல இடங்களில் கைகொடுத்திருக்கிறது. பாசக்கார அக்கா சாயா சிங், மாமா ஜான்விஜய், அடியாள் ஸ்ரீமன் ஆகியோர் மனதில் நிற்கின்றனர். 

கந்து வட்டி தாதா சரத் லோகிதஸ்வா, மகன் திலீப் சுப்ராயன் மிரட்டல் வில்லன்கள்.  மொட்டை ராஜேந்திரன், செஃப் தாமோதரன் ஆகியோர் கதையின் ஓட்டத்திற்கு உதவியிருக்கிறார்கள்.

பாடல் இசையில் கொஞ்சம் சுணக்கம் தெரிந்தாலும், பின்னணி இசையில் பிரமாதப்படுத்துகிறார் ஜஸ்டின் பிரபாகரன். வர்மாவின் கேமரா, கடற்புரத்தை அழகாக படம் பிடித்திருக்கிறது. ரசிகர்களை கும்மாங்குத்து குத்திய ‘உள்குத்து’வுக்கு ரேட்டிங் 2.5/5 


ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.