நியூஸ்டிஎம் திரை விமர்சனம் - பலூன்

  பால பாரதி   | Last Modified : 31 Dec, 2017 02:50 pm

கூட்டுக் குடும்பமாக வாழும் ஜெய், சினிமாவில் இயக்குனராக முயற்சி செய்தபடி இருக்கிறார். அதற்கு மனைவி அஞ்சலி உறுதுணையாக இருக்கிறார். ஜெய், கதை சொல்லப் போன இடத்தில், ‘திகில் கதைக்குத் தான் டிமாண்ட், ஆகவே அந்தமாதிரி கதையோடு வரும்படி’ சொல்கிறார் தயாரிப்பாளர். குழப்பத்தில் இருக்கும் ஜெய், வாட்ஸ் ஆப்பில் நண்பன் அனுப்பிய பேய் வீடு பற்றிய ஆய்வுக்காக, மனைவி அஞ்சலி, அண்ணன் மகன் பப்பு, உதவி இயக்குனர்களான யோகி பாபு-கார்த்திக் யோகி என ஒரு டீமாக ஊட்டிக்கு செல்கிறார்.

அங்குள்ள பேய் வீட்டிற்கு அருகே தங்கி ஆய்வு செய்கிறார் செய்.   அப்போது, சிறுவன் பப்புவுக்கு மட்டும் ஒரு சிறுமி தெரிய அவளுடன் நட்பாகிறான் பப்பு. சில தினங்களில் ஜெய்-அஞ்சலி இருவரும் அந்த வீட்டில் ஏதோ ஒரு அமானுஷ்ய சக்தி உலவுவதை அறிகிறார்கள்.

ஒரு கட்டத்தில் பப்பு உடம்புக்குள் அந்த சிறுமியின் ஆவியும், அஞ்சலி உடம்புக்குள் அவளின் தாய் ஆவியும், ஜெய் உடம்புக்குள் அவளின் தந்தையின் ஆவியும் புகுந்துக் கொள்கிறது. ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் ஆவியாக மாற என்ன காரணம்? அவர்களுக்கும், ஜெய் குடும்பத்தினருக்குமுள்ள தொடர்பு என்ன? ஜெய் இயக்குநர் கனவு நிறைவேறியதா? என்பது மீதிக்கதை. 


காதல் கதைகளில் நடித்து ‘லவ்வர் பாய்’யாக இருந்த ஜெய், முழுநீள திகில் படத்தில் முதல் முறையாக இரட்டை வேடத்தில் நடித்திருக்கிறார். அதிலும், ஃபிளாஷ் பேக்கில் வரும் பலூன் வியாபாரி கெட்டப்பும், கேரக்டரும் சூப்பர். நாயகி அஞ்சலி, நிஜமான மனைவி போல நெருக்கம் காட்டி நடித்திருக்கிறார். ஃபிளாஸ்பேக் காட்சியில் வரும் ஜனனி மனதில் நிற்கிறார்.

டைமிங் காமெடியால் கலகலப்பு ஏற்படுத்துகிறார் யோகி பாபு. பயம் காட்டுவது திகிலடைய வைப்பது, கூடு விட்டு கூடுபாய்வது போல மற்றொரு உடலுக்குள் புகுந்து கொண்டு எதிரிகளை பழிதீர்ப்பது... என வழக்கமான ஃபார்முலாவில் பேய் படம் தந்திருக்கிறார் இயக்குனர் சினிஷ்.

ஹாலிவுட் படங்களிலிருந்து சுட்டதை, திருப்பிப் போட்டு சுட்டிருப்பதாக ஒப்புதல் வாக்கு மூலம் தருகிறார். அந்த நேர்மைக்கு வைக்கலாம் ஒரு சல்யூட்!   ஆனால், சுட்டதை கூட உருப்படியில்லாமல் ஆக்கியிருகிறார். பலூன் எந்தவிதத்தில் திகிலடைய செய்யுமென தெரியவில்லை! ஒவ்வொரு காட்சியிலும் பலூனை பறக்க வைத்து டைட்டிலை நினைவு படுத்துகிறார் இயக்குநர்.  

டைட்டிலில் மட்டும் தெரிகிறார் யுவன் சங்கர் ராஜா, மத்தபடி  இசையில் பசையில்லை! திகில் காட்சிகள் மட்டுமல்லாமல் காதல் காட்சிகளையும் சிறப்பாக படம் பிடித்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் சரவணன். ‘பலூன்’ ரேட்டிங் 2.5/5 

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.